செய்தி சில வரிகளில்...

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றம்

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை, மாகாணமாக மாற்றுவதற்கான மசோதாவிற்கு, பிரதிநிதிகள் சபையில் நேற்று ஓட்டெடுப்பு நடைபெற்றது. 51வது மாகாணமாக வாஷிங்டனை மாற்றுவதற்கு, ஜனநாயக கட்சி உறுப்பினர்கள், 232 பேர் ஓட்டளித்து, மசோதாவை நிறைவேற்றினர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சி உறுப்பினர்கள், 180 பேரும் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை. பிரதிநிதிகள் சபையில் நிறைவேறினாலும், குடியரசு கட்சி பெரும்பான்மையுடன் உள்ள செனட் சபையில், இம்மசோதா நிறைவேறாது என கூறப்படுகிறது.

கர்தார்பூர் வழித்தடம் நாளை திறப்பு

இஸ்லாமாபாத்: அண்டை நாடான பாகிஸ்தானில், சீக்கிய யாத்ரீகர்களுக்காக அமைக்கப்பட்டிருந்த கர்தார்பூர் வழித்தடம், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்டது. இந்நிலையில், மூடப்பட்டிருந்த வழித்தடத்தை, நாளை மீண்டும் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதை, பாக்., வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி நேற்று அறிவித்துள்ளார்.

ரோஹிங்கியா நபர்கள் சுட்டுக்கொலை

டாக்கா: அண்டை நாடான வங்கதேசத்தில், ரோஹிங்கியா அமைப்பை சேர்ந்த, அப்துல் ஹாக்கிம் என்பவர், பணத்திற்காக உள்ளூர் மக்களை கடத்தி, பணம் கொடுக்காதவர்களை கொலை செய்துள்ளார். இதையடுத்து, ரோஹிங்கியா முகாம்களுக்குள் புகுந்த போலீசார், அவர்கள் பதுங்கி இருந்த பகுதியை சுற்றி வளைத்தனர். அதை அறிந்துகொண்ட அவர்கள், போலீசார் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். குற்றவாளிகளுக்கும் போலீசாருக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், நான்கு ரோஹிங்கியா நபர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்: இந்திய எல்லைக்குள், சீன ராணுவத்தின் சமீபத்திய ஊடுருவல் குறித்து, மூத்த அமெரிக்க பிரதிநிதிகள் சபை உறுப்பினர் டெட் யோஹோ கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில், இந்தியா தீவிரமாக பணியாற்றி வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தியுள்ள சீனா, இந்திய எல்லைப் பகுதிக்குள், ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. விரோதம் காரணமாக, அண்டை நாடுகளுக்கு எதிராக நடத்தப்படும் இதுபோன்ற ராணுவ நடவடிக்கைகளுக்கு, அமெரிக்கா ஒருபோதும் துணை நிற்காது.இவ்வாறு, அவர் கூறினார்.

டிரம்ப் நிர்வாகத்தின் செயல் சட்டவிரோதம்

சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்க - மெக்சிகோ எல்லையில், சட்டவிரோத குடியேறிகளை தடுக்க, அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தால், சுவர் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்கான, 1.88 லட்சம் கோடி ரூபாயை, ராணுவ கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிதியில் இருந்து பரிமாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கில் நேற்று தீர்ப்பளித்த மாவட்ட, 'அப்பீல்' நீதிமன்றம், டிரம்ப் நிர்வாகத்தின் இந்த செயல் சட்டவிரோதமானது என. கூறியது.

கத்திக்குத்தில், 6 பேர் படுகாயம்

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலுக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர், அங்கிருந்தவர்களை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அந்த நபர் நடத்திய கத்திகுத்து தாக்குதலில், ஆறு பேர் படுகாயமடைந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நவாஸ் ஷெரீப் மீதுவழக்கு

லாகூர்: அண்டை நாடான பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், பஞ்சாப் மாகாணத்தில், 34 ஆண்டுகளுக்கு முன், நில ஒதுக்கீடு செய்ததில் மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இந்நிலையில், அது தொடர்பாக, நவாஸ் ஷெரிப் உட்பட நான்கு பேர் மீது, தேசிய உழல் தடுப்பு அமைப்பு, நேற்று வழக்குப் பதிவு செய்துள்ளது. மேலும், நவாஸ் ஷெரீப்பை கைது செய்ய, 'வாரண்ட்' பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X