ஏரி நீர் வெளியேறி விளைநிலங்கள் வீண் நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஏரி நீர் வெளியேறி விளைநிலங்கள் வீண் நடவடிக்கை கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share

திட்டக்குடி : திட்டக்குடி அருகே மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை விளைநிலங்களில் திறந்து விட்டு வீணாக்கிய மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி அடுத்த பெருமுளை கிராமத்தில் 136 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரியில் விவசாயம் மற்றும் ், குடிநீருக்காக தண்ணீர் சேகரிக்கப்பட்டுள்ளது. சில மாதங்களுக்கு முன்பு மீன்வளத்துறை சார்பில், பெருமுளை ஏரியில் மீன்வளர்க்க குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. ஏரியின் அருகில் நுாற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை விவசாயிகள் உழுது, ஆடி பட்டத்திற்கு விதைப்பதற்காக தயார் செய்து வைத்திருந்தனர். நேற்று முன்தினம் இரவு, மர்ம நபர்கள் சிலர், ஏரியின் மதகை நான்கு புறங்களிலும் திறந்து விட்டதால் ஏரி நீர் விளை நிலங்களில் பாய்ந்து விவசாயம் செய்ய முடியாமல் பாழடைந்தது.

நேற்று அதிகாலை, இதைப் பார்த்த விவசாயிகள், மதகில் இருந்து தண்ணீர் வெளியேறுவதை தடுத்து நிறுத்தி, சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து திட்டக்குடி தாசில்தார் செந்தில்வேல், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ரவிச்சந்திரன், பொதுப் பணித்துறை உதவிபொறியாளர் சோழராஜன் சென்று விவசாயிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.அனைத்து மதகுகளையும் மூடி தரவும், மீன்பிடி குத்தகைதாரர்களை அழைத்து அலுவலகத்தில் பேச்சு வார்த்தை நடத்தி மீன் பிடிப்பது குறித்து முடிவு எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையேற்று விவசாயிகள் கலைந்து சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X