கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கருணை பணிக்கான விதிகளை மீறினால் நடவடிக்கை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; 'கருணை வேலை திட்டத்தில், அரசு பிறப்பித்த வழிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்றவில்லை என்றால், சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவை சேர்ந்தவர், ஆர்.முருகன். பூந்தமல்லியில் உள்ள பொது சுகாதார நிறுவனத்தில் பணியாற்றிய, இவரது தந்தை, 1975 மே மாதம் மரணம் அடைந்தார். 23 ஆண்டுகளுக்கு பின், கருணை வேலை கேட்டு, முருகனின் தாய் மனு அனுப்பினார். 2006ம் ஆண்டில், முருகனுக்கு, 'மஸ்துார்' பணி வழங்கப்பட்டது.தொடர்ந்து பணியாற்றி வந்த நிலையில், 2015ல், பணியில் இருந்து முருகன் விடுவிக்கப்பட்டார்.

பொது சுகாதார துணை இயக்குனர், இதற்கான உத்தரவை பிறப்பித்தார். இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்த மனுவில், 'உத்தரவு பிறப்பிக்கும் முன், எந்த விசாரணையும் இல்லை; இயற்கை நீதி மீறப்பட்டுள்ளது' என, கூறப்பட்டது. அரசு தரப்பில், கூடுதல் பிளீடர் ஜெ.ரமேஷ், ''நியமன உத்தரவில், இது தற்காலிக வேலை தான்; நோட்டீஸ் பிறப்பிக்காமல், பணியில் இருந்து விடுவிக்கப்படலாம். ''அரசு உத்தரவின்படி, மரணம் அடைந்து, மூன்று ஆண்டுகளுக்குள் கருணை வேலை வழங்கப்பட வேண்டும். ஆனால், 23 ஆண்டுகளுக்கு பின் தான் விண்ணப்பித்துள்ளனர்,'' என்றார்.

மனுவை விசாரித்த, நீதிபதி டி.கிருஷ்ணகுமார் பிறப்பித்த உத்தரவு:கருணை அடிப்படையிலான திட்டத்தின் கீழ், மனுதாரர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த திட்டம், ஒரு சலுகை தான்; உரிமையாக கோர முடியாது. தகுதி உள்ளவர்கள், மூன்று ஆண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.பணியில் இருப்பவர் திடீரென இறக்கும்போது, அவரது குடும்பம் பாதிக்கக் கூடாது என்பதற்காக, அவர்களுக்கு உதவும் வகையில், அரசால் வழங்கப்பட்ட சலுகை தான், இந்த கருணை வேலை திட்டம். ஆனால், இதை உரிமையாக கோர முடியாது.

மனுதாரரின் தந்தை இறந்து, 23 ஆண்டுகளுக்கு பின், கருணை வேலை கேட்டு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. பணி நியமனத்துக்கு காரணமான அதிகாரி, அரசின் வழிமுறைகளை பின்பற்றவில்லை. வழிமுறைகளுக்கு முரணாக, 23 ஆண்டுகளுக்கு பின் அனுப்பிய விண்ணப்பத்தை ஏற்றுள்ளார். இந்த வழக்கை பொறுத்தவரை, மனுதாரர் நியமனம் சட்டவிரோதமானது. கருணை அடிப்படையில் வேலையில் நியமிக்கும் போது, அரசின் வழிமுறைகளை, அதிகாரிகள் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.எனவே, கண்டிப்புடன் வழிமுறைகளை பின்பற்ற, அதிகாரிகளுக்கு, அரசு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

அது மீறப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வழக்கில், பொது சுகாதாரத் துறை துணை இயக்குனரின் உத்தரவில் குறுக்கிட, எந்த காரணமும் இல்லை. மனு, தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X