சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

தேனில் வரும் திகட்டாத வருமானம்!

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
தேனில் வரும் திகட்டாத வருமானம்!


தேனில் வரும் திகட்டாத வருமானம்!



துாத்துக்குடி மாவட்டம்,ஏரல் அருகில் உள்ள, சாயர்புரம் முருங்கைத் தோட்டத்தில், தேன் பெட்டிகள் வைத்து, 'முருங்கைத்தேன்' உற்பத்தி செய்து வரும் ஆனந்த்: அடிப்படையில விவசாயக் குடும்பம் தான். சின்ன வயசுலயே சொந்தமா ஏதாவது தொழில் செய்யணும்னு ஆர்வம் இருந்துச்சு. பி.ஏ., பொருளாதாரம் படிச்சு முடிச்சதும், காளான் பண்ணை வைக்கலாம்னு, அதுக்கான பயிற்சி வகுப்புல கலந்துக்கிட்டேன். மதுரையில், காளான் பண்ணை ஆரம்பிச்சேன். அறுவடை செஞ்ச காளான்களை ஒரே நாள்ல விற்பனை செய்துடணும். ஆனா, விற்பனை செய்ய முடியல. அதனால, காளான்கள் வீணாகி, நஷ்டம்
ஆகிடுச்சு.இனிமேல் விவசாயம் செஞ்சாலும் சரி, உற்பத்தி செஞ்சாலும் சரி, அதன் மூலமா கிடைக்கிற பொருளை இருப்பு வெச்சு தான் விற்பனை செய்யணும்னு முடிவு எடுத்தேன். அப்படியொரு தொழிலைத் தேடினேன். அப்போது தான், தேன் வியாபாரம் செய்யலாம்னு யோசனை தோணுச்சு. கோயம்புத்துார் மாவட்டம், விவசாயம் நிறைஞ்ச பகுதி. அதனால அந்தப் பகுதியில தேன் உற்பத்தி செய்றவங்ககிட்ட, தேனை வாங்கி, விற்பனை செய்ற தொழிலை ஆரம்பிச்சேன்; ரெண்டு வருஷம் போச்சு.
கோயம்புத்துார் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்துல தேனீ வளர்ப்பு குறித்த ஒரு வாரப் பயிற்சியில கலந்துகிட்டேன். பிறகு, நண்பர் ஒருவர் தோட்டத்துல, 10 பெட்டிகளை மட்டும் வெச்சு, வளர்த்துப் பார்த்தேன். பிறகு, பெட்டிகளை அதிகமா வைக்க ஆரம்பிச்சேன். பெட்டிகளோட எண்ணிக்கையும், உற்பத்தியும் அதிகமாகிடுச்சு. இப்ப, 'மதுரம் இயற்கை தேனீ பண்ணை'ங்கற பேர்ல கோயம்புத்துார்லயும், துாத்துக்குடியில இருக்கும், என் சொந்த நிலத்துலயும், 950 பெட்டிகள் மூலம் தேன் உற்பத்தி செய்துட்டு வர்றேன்.
புதிதாகக் கூடு கட்டி,தேன் அறுவடை செய்ய, மூன்று மாதங்கள் ஆகும். வாரம் ஒருமுறை கட்டாயம் பெட்டிகளைத் திறந்து, ஒவ்வொரு சட்டகத்தையும் எடுத்துப் பார்க்க வேண்டும். தேனீக்கள் சரியாகக் கூடு கட்டுகிறதா; நோய்கள் ஏதும் தாக்கியுள்ளதா என்பதைக் கண்காணிக்க வேண்டும். ஜனவரி முதல், மார்ச் வரையிலும், ஜூன் முதல், ஆகஸ்ட் வரையிலும் அதிகமாகப் பூப்பூக்கும். இந்த மாதங்களில் அதிகமாகத் தேன் சேகரிக்கலாம். ஏப்ரல் முதல், மே வரையிலும், செப்டம்பர் முதல், டிசம்பர் வரையிலும் பூக்கள் குறைவாகப் பூக்கும். தேன் உற்பத்தியைப் பொறுத்தவரைக்கும் வருஷத்துல, ஆறு மாதம் தான் அதிக உற்பத்தி நடக்கும். மழைக்காலம் உள்ளிட்ட மற்ற, ஆறு மாதங்கள் உற்பத்தி குறைவாக இருக்கும். என்கிட்ட இருக்கும், 950 பெட்டிகள் மூலமா, ஒரு வருஷத்துக்குச் சராசரியா, 12 ஆயிரம் கிலோ தேன் கிடைச்சுக்கிட்டு இருக்கு; 31 லட்ச ரூபாய் வருமானம் கிடைக்குது!


என்ன செய்வது என்றே தெரியவில்லை!



நாட்டின் முக்கிய சர்க்கஸ் நிறுவனங்களில் ஒன்றான, 'ராம்போ சர்க்கஸ்' நிறுவனத்தை நடத்தி வரும், சுஜித்: இந்த காலகட்டத்தில், சர்க்கஸ் தொழிலுக்கு அதிக வரவேற்பு இல்லை. எனினும், குழந்தை களை மகிழ்விக்க வேண்டும் என்பதற்காகவும், எங்கள் தந்தையின் தொழில் என்பதற்காகவும் இதை, பல சிரமங்களுக்கு இடையே தொடர்ந்து செய்து வருகிறோம்.எங்களிடம் எப்போதும், குறைந்தது, 100 பேர் இருப்பர். இதுபோக, குதிரை, நாய்கள், மாடுகள் என, 20க்கும் குறையாத விலங்குகளும் உண்டு.
மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், ஒரு நாள் உணவுக்கு, குறைந்தபட்சம், 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும்.மார்ச் மாதத்தில் மஹாராஷ்டிராவில், சர்க்கஸ் போட தயாரானோம். மார்ச், 24லிலேயே, ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து விட்டனர். அதற்கு சில மாதங்களுக்கு முன், அவுரங்காபாத் பகுதியில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில், கூடாரம் பாதிக்கப்பட்டது. அதன் பின், புனே வந்த பிறகும், பலத்த மழையால், தொழிலே நடக்கவில்லை.நவிமும்பை நிகழ்ச்சியை தான் நம்பிக் கொண்டிருந்த போது, ஊரடங்கு வந்ததால், மிகவும் சிரமப்பட்டோம். எங்கள் நிலை அறிந்த, தேசியவாத காங்., தலைவர் ஒருவர், சில லட்ச ரூபாய் கொடுத்து உதவினார்.
எங்களிடம், அசாம், நாகாலாந்து, கேரளா என, பல மாநிலங்களைச் சேர்ந்த பணியாளர்கள் இருந்தனர்.அவர்களை கொஞ்சம், கொஞ்சமாக அவரவர் ஊர்களுக்கு அனுப்பினோம். ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டாலும், இன்னும், சில மாதங்களுக்கு தொழிலை செய்ய முடியாது என்பதால், பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலருக்கும் கடிதம் எழுதி, காப்பாற்றுமாறு வேண்டினோம்.கலைஞர்கள் என்றதும், சினிமா, நாடகக் கலைஞர்களைத் தான் காப்பாற்ற முன்வந்தனர். சர்க்கஸ் கலைஞர்களை யாரும் காப்பாற்றவில்லை. ஆனால், மஹாராஷ்டிரா மக்கள், தங்களால் இயன்ற உதவிகளை வழங்கி, இப்போது வரை, பசி இல்லாமல் சாப்பிட உதவி வருகின்றனர்.எங்களுக்கு, அங்குள்ள சீக்கிய வழிபாட்டுத்தலமான குருத்வாராக்களில், இலவசமாக சாப்பாடு போடுகின்றனர். கால்நடைகளுக்கு தேவையான உணவுகளை, சிலர் மொத்தமாக கொண்டு வந்து கொடுத்து விட்டனர்.
சில அதிகாரிகள், பல ஆயிரம் ரூபாயை, எங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றி, தங்களின் தாராள குணத்தை மெய்ப்பித்தனர். அவர்களால் தான், இப்போதும், 50க்கும் மேற்பட்ட நாங்கள் பசி, பட்டினி இன்றி உயிருடன் உள்ளோம்.சில ஆண்டுகளுக்கு முன் வரை, 80க்கும் மேற்பட்ட சர்க்கஸ் நிறுவனங்கள் இருந்தன. இப்போது, நான்கைந்து தான் உள்ளன. அவற்றையும், ஊரடங்குக்கு பின், தொடர்ந்து நடத்த முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது; என்ன செய்வது என்றே தெரியவில்லை!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X