பொது செய்தி

இந்தியா

கொரோனா பாதிப்பில் 8 மாநிலம் 85 சதவீதம்: குணமடைந்தோர் 58 சதவீதம்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
கொரோனா பாதிப்பில் 8 மாநிலம் 85 சதவீதம்: குணமடைந்தோர் 58 சதவீதம்

புதுடில்லி : 'நாட்டில், தமிழகம், மஹாராஷ்டிரா, குஜராத், டில்லி உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் தான், கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மொத்த பாதிப்பில், இந்த மாநிலங்கள், 85 சதவீத பங்கு வகிக்கின்றன.
அதேபோல், கொரோனாவுக்கு பலியானவர்களில், 87 சதவீதம் பேர், இந்த எட்டு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்' என, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், குணமடைந்தோர் சதவீதம்,58.13 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் முதன் முதலில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ், இன்று உலகம் முழுவதையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவில், கொரோனா வைரஸ், மார்ச் மாதத்தில் பரவத் துவங்கியது. பரவலை தடுக்க, மார்ச், 25 முதல், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆனாலும், பரவல் நிற்கவில்லை.கொரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 5.9 லட்சமாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை, 2.96 லட்சமாகவும் உயர்ந்து உள்ளது. கடந்த, ஆறு நாட்களில் மட்டும், ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர்,கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்புக்காக அமைக்கப்பட்ட, மத்திய அமைச்சர்கள் குழுவின், 17வது ஆய்வுகூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்குப் பின், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:நாட்டில், கொரோனா பாதிப்பு, மஹாராஷ்டிரா, டில்லி, தமிழகம், தெலுங்கானா, குஜராத், உத்தர பிரதேசம், ஆந்திரா, மேற்கு வங்கம் ஆகிய எட்டு மாநிலங்களில் தான் அதிகமாக உள்ளது. கொரோனா பாதிப்புக்கு உள்ளான நோயாளிகளில், 85.5 சதவீதம் பேர், இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.அதேபோல், கொரோனாவுக்கு பலியானவர்களில், 87 சதவீதம் பேர், இந்த எட்டு மாநிலங்களை சேர்ந்தவர்கள் தான். அதே நேரத்தில், குணமடைந்தோர் சதவீதம், 58.13 ஆக அதிகரித்துள்ளது.

ஆய்வுக் கூட்டத்தில், அமைச்சர்கள் குழுவிடம், கொரோனாவிலிருந்து குணமடைந்து வருவோர் சதவீதம் அதிகரித்து வருவது, பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாகும் காலம், பல்வேறு மாநிலங்களில் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி வருவது ஆகியவை பற்றி எடுத்துக் கூறப்பட்டது.மாநிலங்களுக்கு உதவ, மத்திய சுகாதாரக் குழுவினர், தொற்றுநோய் தடுப்பு வல்லுனர்கள், மருத்துவ வல்லுனர்கள் குழு அனுப்பிவைக்கப்பட்டது. ஆரோக்கிய சேது செயலி மூலம், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை கண்டறிவது பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.இவ்வாறு, அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




ஒரே நாளில் 18,552 பேர் பாதிப்பு



நாட்டில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, நேற்று, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது; 15 ஆயிரத்து, 685 பேர் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கை:நாட்டில், நேற்று ஒரே நாளில், இதுவரை இல்லாத அளவில், 18 ஆயிரத்து, 552 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஐந்து லட்சத்து, 8,953 ஆக உயர்ந்து உள்ளது.
வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, ஒரு லட்சமாக உயர, 110 நாட்கள் ஆனது. ஆனால், ஒரு லட்சத்தில் இருந்து, ஐந்து லட்சத்தை கடக்க, 39 நாட்கள் மட்டுமே ஆனது. வைரஸ் பாதிப்பில், 1.53 லட்சம் பேருடன், மஹா., முதலிடத்தில் தொடர்கிறது. டில்லி, 77 ஆயிரத்து, 240 பேருடன் இரண்டாம் இடத்திலும், தமிழகம், 74 ஆயிரத்து, 622 பேருடன், மூன்றாம் இடத்திலும் உள்ளன.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், இரண்டு லட்சத்து, 95 ஆயிரத்து, 880 பேர் குணமடைந்துள்ளனர். இது, குணமடைந்தோரின் விகிதத்தை, 58.13 சதவீதமாக உயர்த்தி உள்ளது.நேற்று, கொரோனாவால், 384 பேர் இறந்துள்ளனர். இவர்களில், மஹாவில்., 175; டில்லியில், 63; தமிழகத்தில், 46; உ.பி.,யில், 19; குஜராத்தில், 18; ஹரியானாவில், 13; ஆந்திராவில், 12; மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில், தலா, 10 பேரும் இறந்துள்ளனர்.இதையடுத்து, பலியானோர் எண்ணிக்கை, 15 ஆயிரத்து, 685 ஆக உயர்ந்துள்ளது. மஹா.,வில், 7,106 பேரும், டில்லியில், 2,492 பேரும், குஜராத்தில், 1,771 பேரும் இறந்துள்ளனர். தமிழகத்தில், 957; உ.பி.,யில், 630; மேற்கு வங்கத்தில், 616; ம.பி.,யில், 546; ராஜஸ்தானில், 380 தெலுங்கானாவில், 237; ஹரியானாவில், 211 பேரும் இறந்துள்ளனர்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.


கொரோனாவிடம் பிரதமர் சரண்: ராகுல்



கொரோனா வைரஸ் தொடர்பாக, ராகுல் தினந்தோறும், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில், தன் கருத்துகளை பதிவிட்டு வருகிறார். நேற்று அவர் வெளியிட்ட பதிவில், 'நாட்டில், ''ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டோரை பாதித்துள்ள தொற்றுநோயை கட்டுப்படுத்த, அரசிடம் எந்த திட்டமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி, இந்த தொற்று நோயை எதிர்த்து போராட மறுத்துள்ளதுடன், அதனிடம் சரணடைந்துள்ளார், '' என, கூறியுள்ளார்.


பாதிப்பு அதிகரித்தது ஏன்



நாட்டில், கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்திருப்பது பற்றி, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் கூறியதாவது:இந்தியாவில், கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை எட்ட, 110 நாட்கள் ஆனது. ஆனால், அடுத்த, 39 நாட்களில், பாதிப்பு, ஐந்து லட்சத்தை கடந்துள்ளது. இதற்கு கொரோனா தொற்றுபரிசோதனை அதிகரித்துள்ளதும் காரணம். கொரோனா பரவலின் ஆரம்பத்தில், தினமும், 1.4 லட்சம் பேரிடம் மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இப்போது, மூன்று லட்சத்துக்கும் அதிகமானோரிடம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா பரவ துவங்கிய போது, மஹாராஷ்டிர மாநிலம், புனேவில் மட்டுமே ஆய்வகம் இருந்தது. இப்போது, 1,000க்கும் அதிகமான ஆய்வகங்கள் உள்ளன.இவ்வாறு, ஆய்வு கவுன்சில் கூறியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X