அலுவலகங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அலுவலகங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
அலுவலகங்களுக்கு வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு

சென்னை :'அலுவலகங்களில் பணிபுரிவோர் அனைவரும், முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும்' என, அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில், கொரோனா நோய் பரவலை தடுக்க, பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பான அரசாணையை, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.
அதன் விபரம்:

*நோய் கட்டுப்பாட்டு பகுதியில், மருந்து மற்றும் அத்தியாவசிய தேவைக்கான அலுவலகம் தவிர, மற்ற அலுவலகங்கள் திறக்கப்படக் கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதிக்கு, வெளியில் உள்ள அலுவலகங்களை திறக்கலாம்
.

*அலுவலகத்தில், 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர், நோய் பாதிப்புள்ளோர், கர்ப்பிணியர் வருகையை தவிர்க்க வேண்டும். ஒருவருக்கொருவர், 6 அடி இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்; அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்.

*அடிக்கடி சோப்பால், 40 முதல், 60 வினாடிகள், கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் அல்லது கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
துப்புவது முழுமையாக தடுக்கப்பட வேண்டும். அனைத்து பணியாளர்களும், 'ஆரோக்கிய சேது' மொபைல் செயலியை, தங்கள் மொபைல் போனில் பதிவிறக்கம் செய்ய வேண்டும்சிறப்பு தடுப்பு நடவடிக்கை.

*அனைத்து அலுவலகங்களின் நுழைவு வாயிலிலும், உடல் வெப்பநிலையை கண்டறிய உதவும், 'தெர்மல் ஸ்கேனர்' கருவி, கைகளை சுத்தம் செய்ய, கிருமி நாசினி திரவம் வைத்திருக்க வேண்டும்.
நோய் அறிகுறி இல்லாத நபர்கள் மட்டுமே, அலுவலகம் உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும்
.

*நோய் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஊழியர்களை, வீட்டிலிருந்து பணிபுரிய அனுமதிக்க வேண்டும். அந்த நாட்களை, விடுப்பு நாளாக கருதக்கூடாது. நோய் கட்டுப்பாட்டு பகுதி இல்லை என அறிவித்த பின்னரே, அவர்கள் பணிக்கு வர அனுமதிக்க வேண்டும்
.

*நோய் கட்டுப்பாட்டு பகுதியிலிருந்து வரும் டிரைவர்கள், வாகனங்களை இயக்க அனுமதிக்கக் கூடாது.
டிரைவர்கள், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். வாகனங்களின் கதவு கைப்பிடி, 'சீட்' என, அனைத்து பகுதிகளையும், கிருமி நாசினியால் சுத்தம் செய்ய வேண்டும்.

*அலுவலகம் உள்ளேயும், அனைத்து ஊழியர்களும் முக கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். முறையாக அனுமதி பெற்ற பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.
ஆலோசனை கூட்டம், ஆய்வுக் கூட்டம் போன்றவற்றை, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக நடத்த ணே்டும். வாகன நிறுத்துமிடம், அலுவலக வளாகம் என, அனைத்து இடங்களிலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்.

*அலுவலகம் வரவும், வெளியில் செல்லவும், தனித்தனி வழிகளை பயன்படுத்தவும். அலுவலக கதவு, மேஜை உட்பட, அடிக்கடி தொடும் பகுதிகளை, கிருமி நாசினியால் அவ்வப்போது சுத்தப்படுத்த வேண்டும். அதிகம் பேர் கூடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

*அலுவலக ஊழியர்களுக்கான இருக்கைகளுக்கு இடையே, 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். பணியாளர்களுக்கு நோய் அறிகுறி இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். சிறிதளவு அறிகுறி உள்ளவர்கள், வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேணடும்.

*நோய் தாக்கம் அதிகம் இருந்தால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களுடன் தொடர்பிலிருந்தோரை கண்டறிந்து, அவர்களுக்கும் பரிசோதனை நடத்த வேண்டும்.

*நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவருடன், நெருங்கிய தொடர்பிலிருந்தவர்கள், 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.
அதிக நெருக்கம் இல்லாத நபர்கள், தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கலாம். ஆனால், அவர்கள் உடல் நலத்தை, 14 நாட்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

* அதிக நபர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டால், அவர்கள் பணியாற்றிய அலுவலகம் அல்லது பிரிவு, 48 மணி நேரம் மூடப்பட்டு, கிருமி நாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும்.
இவ்வாறு, அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X