பொது செய்தி

தமிழ்நாடு

உன்னை காணாது நான் இல்லையே... உன்னை காணாது நான் இல்லையே...ஏக்கத்தோடு காத்திருக்கும் விருதுநகர் பக்தர்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
  உன்னை காணாது நான் இல்லையே...  உன்னை காணாது நான் இல்லையே...ஏக்கத்தோடு காத்திருக்கும் விருதுநகர் பக்தர்கள்

கோயில்கள் நடைகள் சாத்தி 90 நாட்கள் கடந்து விட்டன. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாளையும் காண முடியவில்லை. இருக்கன்குடி ,விருதுநகர் பராசக்தி மாரியம்மனையும் பார்க்க முடியவில்லை. சதுரகிரியாரையும் தரிசிக்க முடியவில்லை . தலைமேல் கை குவித்து வணங்கியும் இன்னும் நடை திறந்த பாடில்லை. கோர ஆட்டம் ஆடி வரும் கொடூர கொரோனாவும் இன்னும் தணிய வில்லை.

பல்வேறு மன அழுத்தம் மிகுந்த சூழலிலும் திறக்காத நடைவாசலில் நின்று தரிசனம் கிடைக்காதா என பலர் காத்திருக்கின்றனர். இதன் மூலம் பலரது ஏக்கத்தை பார்க்க முடிகிறது. நம்மை காக்கும் பராசக்தி மாரியம்மன், வெயிலுகந்தம்மன், ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள், திருச்சுழி பூமிநாதர், சதுரகிரியார் என தாங்கள் வணங்கும் இஷ்ட தெய்வங்களை வணங்கமுடியாது ஏக்கத்தோடு காத்திருக்கும் விருதுநகர் மாவட்ட பக்தர்களின் மன வேதனைகள் இதோ...
மன அழுத்தம் குறையும்

இந்தியா ஒரு ஆன்மிக பூமி . குடும்பத்தில் ஒருவருக்கு நோய் பாதித்தால் சுவாமிக்கு நேர்ந்து கொள்வது வழக்கம். குணமானதும் கோயிலுக்கு சென்று நேர்த்திக்கடன் செலுத்துவதை வழக்கமாக கொண்ட மக்கள் வாழும் நாடு இது. மன சுமையை இறக்கி வைக்க கோயில்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர். தடையால் பலரும் வாசலில் நின்று தரிசித்து செல்கின்றனர். பல்வேறு தளர்வுகள் அறிவிக்கும் அரசு கோயில்களை திறக்க வேண்டும். இதனால் மக்களின் மன அழுத்தம் நீங்கும்.

எம்.மாரிக்கண்ணு, சாத்துார்

மன நிம்மதிக்கு வழி விடுங்க

ஒரு பிரச்னை என்றால் கடவுள் தீர்த்து வைப்பார் என்ற நம்பிக்கை எப்போதும் உண்டு. கொரோனா தொற்றால் கோயில்கள் பூட்டப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு கோயில்கள் திறக்கப்பட வேண்டும். வீட்டில் தினமும் சுவாமி கும்பிட்டாலும் கோயிலுக்கு சென்று வழிபடுதலின் சிறப்பே தனிதான். மந்திரங்கள் முழங்க பூஜை நடக்கும்போது நாம் நினைத்தது நிறைவேறும். மன நிம்மதியை தரும் கோயில்களை மீண்டும் திறக்க வேண்டும்.

சவுந்தரபிரியா, சிவகாசி
மனதை ஒரு நிலைப்படுத்தும் வழிபாடு

வைரஸ் தொற்றை காரணம் காட்டி கோயில்கள திறக்க அனுமதி அளிக்காதது மிகுந்த மன வேதனை அளிக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஏற்படும் மனக்குறைகளை கடவுளிடம் முறையிடுவதால் மனதில் அழுத்தம் குறைகிறது. பொறாமை, வீண் பேச்சு, தேவையற்ற சண்டைகள் போன்றவற்றில் இருந்து மனதை ஒரு நிலைப்படுத்த கோயில் வழிபாடுகள்தான் உதவுகின்றன . தற்போது மூடப்பட்டுள்ளதால் வெளியே இருந்து தரிசித்து திரும்ப வேண்டியுள்ளது. சமூக இடைவெளியுடன் அந்தந்த ஊர் கோயில்களில் வழிபட அனுமதி வழங்க வேண்டும்.

கனகேஸ்வரி, ராஜபாளையம்

எதையோ இழந்தது போல் தவிப்பு

தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் தவறமால் கோயில்களுக்கு செல்வோம். கோயில்கள் மூடப்பட்டு 100 நாட்கள் ஆகி விட்டது. கோயிலுக்கு செல்லாமல் மனசு கஷ்டப்படுகிறது. எதையோ இழந்தது போல் தவிக்கிறது. கோயில்களை திறப்பதில் மட்டும் அரசு பாராமுகமாக உள்ளது. கோயில்களை திறந்தால் தான் கொரோனா ஒழியும். அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் திருக்கல்யாணம், தேரோட்டம் நடைபெறுமா என்ற நிலை உள்ளது.

சங்கரவடிவு, அருப்புக்கோட்டை

சதுரகிரியாரை தரிசிக்காமல் சஞ்சலம்

கடந்த 15 ஆண்டாக பவுர்ணமி, அமாவாசை தோறும் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறேன். ஒவ்வொரு முறை நான் சென்று வரும்போது என் வாழ்க்கை நிலை உயர்ந்து வருகிறது. நான் வேண்டியதெல்லொம் நிறைவேறியது. சதுரகிரி மலையில் நடந்தால் எந்த நோயும் வராது. அங்குள்ள மூலிகைகளும் தண்ணீரும் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி தரவல்லது. அத்தகைய சிறப்புடைய சதுரகிரியாரை கடந்த 3 மாதமாக தரிசிக்கமுடியாமல் மனம் சஞ்சலமடைகிறது.
சரவணக்குமார், ஸ்ரீவில்லிபுத்துார்

இதுவே பெரும் நோயாக மாறுகிறது

நோய் பரவி பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் இக்கட்டான நேரத்தில் மக்கள் மனவேதனை அடைந்து உள்ளனர். மன அமைதி, ஆறுதல் வேண்டி கோயில்களுக்கு சென்று மனக்குமுறலை வெளிப்படுத்த முடியாத நிலையில் உள்ளனர். இதுவே பெரும் நோயாக மாறி வருகிறது. கடவுள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என முதல்வரே சொல்லிய நிலையில் கோயில்களை பூட்டி இருப்பது என்ன நியாயம். சமூக இடைவெளியை பின்பற்றி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க வேண்டும்.
சுந்தர கணபதி, அச்சங்குளம்

ஆண்டாளை தரிசிக்காது தவிக்கிறோம்

கோயில்தரிசனம், இறைபக்தி என்பது ஒவ்வொருவருக்கும் தினசரி ஒருவித புத்துணர்வு, நேர்மறை எண்ணங்களை உருவாக்கும். இதனால் நம் அன்றாட வேலைகள் அனைத்தும் சிறப்பாக நடந்து விடும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பல்வேறு கோயில்களில் தரிசனம் செய்வேன். ஊரடங்கால் 90 நாட்களுக்கு மேலாக கோயில் தரிசனம் செய்யமுடியாதநிலை உள்ளது. என்று கோயில்கள் திறந்து தரிசனம் செய்வோம் என்ற தவிப்புடன் இருக்கிறோம். நினைத்ததை நிறைவேற்றிதரும் பெண் தெய்வமான ஆண்டாளை தரிசிக்க உள்ளூர் பக்தர்களை மட்டுமாவது அனுமதிக்கவேண்டும்.

மோத்தி, ஸ்ரீவில்லிபுத்துார்

தெய்வங்கள் நம்மை கைவிடாது

உலகின் மிகச்சிறந்த ஆன்மிக தலம் கோயில். அங்கு சென்றால்தான் மன அமைதி பெற்று சகல துன்பங்களும் நீங்குகிறது. விருதுநகர் பராசக்தி மாரியம்மன் நம் அனைவரையும் காத்து வருகிறாள். நம் மக்களுக்கு நல்ல மனதிடத்தை அளித்துள்ளாள். ஊரடங்கில் கோயில் திறக்காதது சமூக இடைவெளிக்காக தான். ஆனால் தற்போது பல இடங்களில் சமூக இடைவெளியே இல்லாத நிலை உள்ளது. அம்மனை காண வேண்டி தினசரி ஆசைப் படுகிறேன். நாம் அசாதாரணமான சூழலில் தான் இருக்கிறோம். நம் தெய்வங்கள் நம்மை ஒரு போதும் கைவிடாது.

சாந்தி, விருதுநகர்........ .............................................................................................................

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X