தங்களை எப்போதும், உயர் ஜாதி என்று, பிராமணர்கள் சொல்லிக் கொள்வதில்லை; ஆனால், அவ்வாறு சிலரால், அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். அதனால், பல ஆண்டுகளாக, சக மனிதர்களால் வேறுபடுத்தி பார்க்கப்பட்டும், அவதுாறாகவும்,துவேஷத்தோடும் குதறப்படுகிறோம். அரசியல் காரணங்களுக்காக, துாற்றுதலுக்கு தொடர்ந்து ஆளாகும் பிராமண குலத்தில் பிறந்த நான், என், 70 ஆண்டு கால வாழ்க்கையில், ஒரு போதும், வேறு எந்த ஜாதியையும் கீழானதாக நினைத்து, வேற்றுமை பாராட்டி அவமதித்ததில்லை.நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்தே, 'நீ கீழ் ஜாதி, நான் மேல் ஜாதி' என்ற ரீதியில், பேதங்களை எவ்விதத்தில், யார் காட்டினாலும், தக்க தண்டனை நிச்சயமுண்டு. அதனால், அவ்வித தவறான செயல்களை புரிய, மேல் ஜாதி என கருதப்படுவோரான எங்களில் யாரும் துணிந்திருக்க மாட்டார்கள்.
கண்டிக்கப்படவில்லை
வட மாநிலங்களில் அல்லது பிற மாநிலங்களில், இந்த ஜாதி துவேஷம் எப்படி இருக்குமென்பது எனக்கு முழுமையாக தெரியாவிட்டாலும், நாம் வாழும் தமிழகத்தில், எனக்கு விபரம் தெரிந்த, கடந்த, 60 ஆண்டுகளாக, என்னைப் போன்றோர் எவ்வித, உயர் ஜாதி மமதையிலும் அட்டூழியங்கள் செய்ததில்லை.ஆனால், ஒன்று பட்டிருந்த சமுதாயத்தைப் பிரித்தாள நினைத்த சில சண்டாளர்கள் தான், பிராமண துவேஷம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து, பிராமணர்களுக்கு எதிராக, பிற ஜாதியினரை துாண்டி விட முயன்றனர்.
மெல்லக் கொல்லும் விஷம் போல, அவர்கள் மேற்கொண்ட துர்பிரசாரம், ஆங்காங்கே, அவ்வப்போது, பிராமணர்களுக்கு எதிரான, விஷம போராட்டங்களாக வெடித்துள்ளன. எனினும், அத்தகைய போராட்டங்களுக்கு, பிராமணர்கள் எந்த வகையிலும் காரணமாக இருக்க மாட்டார்கள் என்பதை விளக்கவே இந்த கட்டுரை.பள்ளியில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தான், என்னுடன் படித்த சக மாணவர்களால், நான் வேறுபடுத்தி பார்க்கப்பட்டேன். ஈ.வெ.ரா., போன்றவர்கள் துாண்டி விட்ட ஜாதி துவேஷம் தான், இதற்கு காரணம். சக பிராமணரல்லாத மாணவர்கள், என்னை, 'பாப்பான்' என்று ஏளனமாக பேசினர்.
அவ்வாறு பேசுவது, புரட்சியாக கருதப்பட்ட அந்த காலத்தில், அத்தகைய செயல்கள், ஆசிரியர்களாலும் அனேகமாக கண்டிக்கப்படவில்லை. ஆனால் நான், ஜாதி பேதம் எதையும் பார்க்காமல், சகல ஜாதி மாணவர்களுடன் படித்து, ஓடி விளையாடி, அவர்களை வீட்டுக்கு அழைத்து, தின்பண்டங்களை கொடுத்து, அவர்கள் வீட்டிற்கும் சென்று, அவர்கள் கொடுத்ததை உண்டு வந்துள்ளேன். எனக்குள் எவ்வித, உயர் ஜாதி எண்ணங்களும் ஏற்பட்டதில்லை. அது போலவே, என்னுடன் பழகிக் கொண்டிருந்த, பல பிஞ்சு உள்ளங்களுக்கும் அப்போது இருக்கவில்லை.
ஆனால், சிலரால் திட்டமிடப்பட்டு, துாண்டிவிடப்பட்ட, 'பிராமண துவேஷம்' என்ற அஸ்திர பிரயோகம், சக மாணவர்களை, எங்களிடம் இருந்து பிரித்து, ஒதுக்கியது.
சற்று மாநிறமாக இருக்கும் என்னை, முதலில் பார்க்கும் எந்த மாணவனும், நான் பிராமண ஜாதி என்று நினைக்க மாட்டான். அப்போது, அவன் பழகும் விதம், மிக சகஜமாகவே இருக்கும்.
உற்சாகம்
ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், நான் பிராமணன் என்பது தெரிந்தவுடன், அந்த மாணவர்களின் போக்கு மாறி விடும். அதன் பின் ஏளனமும், துவேஷமும் கலந்த பார்வையோடு, என் செயல்களை எல்லாம், விமர்சனம் செய்வதில் அவர்களுக்கு ஒரு உற்சாகம் ஏற்படும்.ஒதுங்கிப் போனாலும், ஜாதியை சுட்டிக்காட்டி பரிகாசம் செய்வர்; அவர்களின் செயல்பாட்டில் வெறுப்புணர்வு வெளிப்படும்.அந்த அளவுக்கு, அந்த இளம் உள்ளங்களில், அந்த காலத்திலேயே, அப்படி ஒரு துவேஷ விதை, திட்டமிட்டு துாவப்பட்டிருந்தது. இந்த தவறான பழக்கத்தை, பிராமணர் அல்லாத பிறர், அனேகமாக கண்டிக்கவும் மாட்டார்கள். இதனால், பிராமணர் அல்லாத மாணவர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும், அத்துமீறலுக்கும், என்னைப் போன்ற பல, பிராமண மாணவர்கள், இளைஞர்கள் ஆளாகிஉள்ளனர்.
இப்போதும் சொல்கிறேன்... எனக்கு, நான் பிறந்தது பிராமண ஜாதி என்பதற்காக எவ்வித பெருமையோ, அகங்காரமோ அப்போதும் இருந்ததில்லை; இப்போதும் இருப்பதில்லை. எனினும், அப்போதும், வேட்டையாடப்பட்டோம்; இப்போதும் வேட்டையாடப்படுகிறோம்.அதுபோல, எங்கள் வீடுகளிலும், 'அவன் கூட சேராதே; நாம் பிராமணர்கள்; அவர்களுடன் சேரக் கூடாது' என்ற துர்போதனை நடத்தப்படுவதில்லை. ஆனால், பிற மாணவர்களுக்கு, சில ஜாதி மற்றும் சமுதாயத் தலைவர்களால், 'அவர்கள் பிராமணர்கள்; நம்மை விட உயர்ந்தவர்களாக நினைக்கின்றனர்; அவர்களுடன் நாம் சேரக் கூடாது' என, தவறாக பாடம் நடத்தப்பட்டது. விபரம் அறியாத வயதில் இருந்த அந்த பாலகர்களுக்கு, அது தான், சமுதாய புரட்சி என, தவறாக கற்றுக் கொடுக்கப்பட்டது.
அப்போதும், அதை எதிர்த்து, நானோ அல்லது என்னைப் போன்றோரோ, வாதம் செய்தோ, வம்பு செய்தோ, குழப்பம் விளைவித்ததில்லை.பள்ளியில் ஆரம்பித்து, கல்லுாரி, உத்யோகம் என்று படிப்படியாக, எல்லா கட்டத்திலும், நான் பிராமணன் என்பதை அறியும் வரை, அவர்களிடம் காணும் சினேக பாவம், என் ஜாதியை அறிந்தவுடன், முற்றிலும் மாறுபடுவது வேதனையை அளிக்கும். எத்தனை தான் முயன்று, பிராமண அடையாளங்களை மறைத்தாலும், அவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டதில்லை.'ஓகோ... அந்த ஆபீசர் ஐயிரு... அப்படித் தான் செய்வாரு' என்று, ஒட்டுமொத்த ஜாதிக்கே, இந்த குணம் தான் என்பதை, தாங்களாகவே தவறாக தீர்மானித்து, எங்களின் எந்த செயலுக்கும், தவறான அர்த்தத்தையே கற்பித்தனர். உயர் ஜாதியினர் என கூறப்பட்ட அந்த காலத்தில், பிராமணர்கள் போல, பல ஜாதியினர் இருந்தனர்; இப்போதும் இருக்கின்றனர். ஆனால், உயர் ஜாதியினர் என்று கூறி, தாக்குதல் நடத்தப்படுவது, பிராமணர்கள் மீது மட்டும் தானே தவிர, பிற உயர் ஜாதியினர் மீது அல்ல.பிராமண ஜாதியை மட்டுமே நேரடியாக தாக்கும் சுதந்திரமும், துணிவும், எண்ணமும், சில பிரிவினைவாத சமுதாய தலைவர்களாலும், அவர்களின் கொள்கையை பின்பற்றிய அரசியல் தலைவர்களாலும், தமிழகத்தில் படிப்படியாக வளர்ந்து வந்துள்ளது.இப்போதிலிருந்து, 70 - 80 ஆண்டுகளுக்கு முன், உயர் ஜாதி என்ற மமதையில், பல ஜாதியினர் செய்ததாக கூறப்பட்ட அத்தனை குற்றங்களையும், பிராமணன் தான் செய்தான் என, அப்பாவி பிராமணன் மீது மட்டுமே பழி சுமத்தப்பட்டது.இயல்பிலேயே சாத்வீகமான, அமைதியான, தேவையற்ற விவாதங்களில் கலந்து கொள்ளாத இயல்பினனான என் போன்றோர், அப்போதே, இந்த துவேஷத்தை எதிர்த்து, சட்ட ரீதியாக போராடவில்லை. அதனால், காலம் காலமாக வேதனை தொடர்கிறது.
பிறர் அறியவில்லை
பிறப்பால் தாழ்ந்தவன் என்று, ஒருவரை ஒதுக்குவதால், எத்தனை வேதனை உண்டோ, அதே வேதனை, அவன் பிறந்தது பிராமண ஜாதி என்பதற்காக, அவனை சாடி, குளிர் காய்வதும் தான் என்பதை பிறர் அறியவில்லை. அப்படி சிலர் அறிந்திருந்தாலும், அவர் சார்ந்த ஜாதியினரை திருத்த முற்படவில்லை. எத்தனையோ காலத்திற்கு முன், யாராலோ நடத்தப்பட்டதாக கூறி, அதற்கு, இப்போதைய பிராமணர்களான என்னைப் போன்றவர்களை துவேஷத்துடனே பார்க்கின்றனர்.இப்படி எழுதுவதை படித்தவுடன், 'அப்போ, உன் வீட்டு பொண்ணை, என் பையன் கல்யாணம் பண்ணிக்க வுட்டுடுவியா...' என்று சிலர், விதண்டாவாதமாக கேட்கலாம். அவரின் கேள்வியே தவறு. அவர் தன் பெண்ணை, இதுபோல செய்ததில்லை.எனினும், ஜாதி பெருமை பேசுவதோ, பிற ஜாதியை குறைத்து விமர்சிப்பதோ தவறு; சட்டத்தில் அதற்கு இடமில்லை.
உலக சமுதாயம், எவ்வளவோ மாறி வருகிறது.
பிராமணர் அல்லாத இளைஞனை மணந்த, பிராமண பெண்கள் பலர் உள்ளனர். அதுபோல, கலப்பு திருமணங்கள் பல, நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.ஹிந்து மத கோட்பாடுகளை பின்பற்றும், ஹிந்து சமயத்தை கட்டிக் காப்பாற்றி வரும் பிராமணர்களை சாடினால், காலப் போக்கில், ஹிந்து மதத்தை அழித்து விடலாம் என கருதி, பிராமண துவேஷத்தை, ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் தொடர்ந்தனர். பிராமணர்களை அழித்து விட்டால், ஹிந்து மதத்தை சாய்த்து விடலாம் என்ற, அவர்களின் எண்ணம், எந்த காலத்திலும் ஈடேறாது.'படாத பாடுபட்டு, படித்து வாங்கும் மதிப்பெண்களுக்கு மதிப்பில்லை. மூன்று தலைமுறைக்கு முன், மூதாதையர் செய்ததாக கூறப்படும் குற்றங்களுக்கு இன்னும் தண்டனையா...' என்று நொந்து, அயல் தேசங்களுக்கு எங்கள் இளைஞர்கள் செல்லும் நிலைமை தான் இப்போது உள்ளது.
ஜாதிகளை குறிப்பிட்டு, பல திரைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. எனினும், பிராமண ஜாதியை கேலியாகவும், வெறுப்போடும் சித்தரிப்பது தான், பெரும்பாலான படங்களின் காட்சிகளாக அமைந்துள்ளன. அதுபோல, வேறு எந்த மதத்தையும், ஜாதியையும் சித்தரிக்க, அவர்களுக்கு துணிவு இருந்ததில்லை.உறுத்துவதும் இல்லை
எனினும், குட்ட குட்ட குனிந்து, அமைதி காத்த பிராமணர்களில் சிலர், இப்போது கொஞ்சம்,அதை தடுக்க,ஆங்காங்கே குரல் கொடுப்பதை காண முடிகிறது. சமீபத்தில், ஒரு இணையதள தொடருக்கு, பிராமணர்கள் காட்டிய எதிர்ப்பை உதாரணமாக கொள்ளலாம்.சமீபத்தில் இப்படி பிராமணர்களை அப்பட்டமாக கேவலப்படுத்தும் ஒரு சர்ச்சைக்கு எதிர்ப்பு குரல் எழுந்தபோது, எந்த சம்பந்தமும் இல்லாத சில அமைப்புகள், அப்படி கேவலம் செய்தவர்களுக்காக வக்காலத்து வாங்கி பேசும்போது, 'நாங்கள் அப்படித் தான் பேசுவோம்...' என்ற தொனி தான் வேதனையளித்தது.
எனினும், பிராமணர்களுக்கு ஆதரவாக, பிற ஹிந்து சமுதாய தலைவர்களும் வரிந்து கட்டி வந்தது, ஆரோக்கியமான சமுதாயமாக நாம் வளர்ந்து வருகிறோம் என்பதை காட்டியது.எனினும், பிராமணர் மீதான காழ்ப்புணர்ச்சியையும், வெறுப்புணர்ச்சியையும், இன்னும் எத்தனை காலம் தான் காட்டி, புண்படுத்துவர் என்று தெரியவில்லை. எந்த காரணமும் இன்றி, இன்னும் புண்படுத்திக் கொண்டேயிருக்கிறோமே என்றும் அவர்களுக்கு உறுத்துவதும் இல்லை.இதையெல்லாம் காணும் போது, இந்த, 70 வயது கிழவனுக்கும், 'என்று தணியும் இந்த பிராமண துவேஷம்...' என்று தான் வேதனை எழுகிறது!தொடர்புக்கு: இ - மெயில்: akilakartgikeyan@gmail.com எஸ்.கார்த்திகேயன்சமூக ஆர்வலர்