கந்தனை காண்பதெப்போ... கவலைகள் தீர்வதெப்போ: கோயிலில் தரிசனத்திற்கு ஏங்கும் பழநி பக்தர்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கந்தனை காண்பதெப்போ... கவலைகள் தீர்வதெப்போ: கோயிலில் தரிசனத்திற்கு ஏங்கும் பழநி பக்தர்கள்

Added : ஜூன் 28, 2020
Share
 கந்தனை காண்பதெப்போ... கவலைகள் தீர்வதெப்போ: கோயிலில் தரிசனத்திற்கு  ஏங்கும் பழநி பக்தர்கள்

திண்டுக்கல்:கண்ணுக்கு தெரியாத கொரோனா தொற்றால் இன்று அகில உலகமும் கதிகலங்கி நிற்கிறது.

எப்போது முடிவுக்கு வரும் இந்த தொற்று நோயின் தாக்கம் என பலரும் தெய்வங்களை
வேண்டுகின்றனர். அந்த தெய்வங்களையும் காண முடியாதவாறுஊரடங்கால் பக்தர்கள் வீட்டுக்குள் முடங்கிக்கிடக்கின்றனர். ஆன்மிக நகரான பழநி கோயிலை, அனைத்து
பகுதியினரும் விரும்புபவர். திண்டுக்கல் மாவட்டத்தினரில் பலர் வாரமிருமுறையோ,

உள்ளூர் பக்தர்கள் தினந்தோறும்கூட சென்று முருகனை தரிசனம் செய்வதை கடைமையாக
கொண்டிருப்பர்.

அவர்கள் கடந்த மூன்று மாதங்களாக அந்த கடமையை செய்ய வழியின்றி தவிக்கின்றனர்.
இப்போது அவர்கள் என்ன செய்கின்றனர். எப்படி வழிபாடு நடத்துகின்றனர். தரிசனம் இல்லாமல் எப்படி தவிக்கின்றனர் என்பதை மனம் திறந்தனர், இதோ:கோயில் தரிசனமே திருப்தி தரும்

நாங்கள் குடும்பத்துடன் செவ்வாய் மற்றும் விேஷச நாட்களில், தோட்டத்தில் பூக்களை பறித்து பழநி முருகனுக்கு பூஜை செய்வோம். விேஷச நாட்களில் துாபக்கால், சங்கு நாதம் முழங்கி முருகனை தரிசனம் செய்வோம். கோயில்களை துாய்மை செய்வோம். பழநி மலைக்கோயிலுக்கு என வீட்டில் இருந்து கிளம்பிச் சென்று, வீடு திரும்பும் வரை மகிழ்ச்சியாக
இருக்கும். தற்போது பக்தர்கள் தரிசனம் செய்ய தடை செய்தது வருத்தமாக உள்ளது. வீட்டில் எவ்வளவுதான் வணங்கினாலும், கோயிலுக்கு படி ஏறிச்சென்று வணங்குவதில் உள்ள மனதிருப்திகிடைப்பதில்லை.

தினமும் தவறாமல் சென்று முருகனை தரிசனம் செய்வோருக்கு மட்டுமாவது அனுமதியளிக்க வேண்டும். சமூகவிலகல், முகக்கவசம் போன்ற பாதுகாப்பு அம்சங்களுடன் தரிசனம் செய்ய வகை செய்யலாம்.

என்.பூமதி,23, பொருளூர்.

உள்ளூர் பக்தர்களை அனுமதிக்கலாம்

தாய் வீட்டுக்கு சென்று சகோதரனை பார்க்க முடியாதது போல உள்ளது. கடந்த மார்ச்சில்
முருகனுக்கு மாலை போட்டு, இன்று வரை மாலையை கழற்றாமல் விரதம் இருந்து
வருகிறேன். பதினைந்து ஆண்டுகளாக தொடர்ந்து சென்று வழிபட்டு வருகிறேன். இப்போது போக முடியாமல் இருப்பது வேதனையாக உள்ளது.

நோய் பரவலை தடுக்கும் முன்னேற்பாடுகளை செய்த பின் கோயிலுக்குள் அனுமதிக்க
வேண்டும். கோயிலுக்குள் உள்ளூர் பக்தர்களை அனுமதிக்க பாஸ் வழங்கலாம். இறைவனை தினமும் காணமுடியாமல் காலையும் மாலையும் தியானம் செய்து வருகிறேன். மலைக்கோயில் மட்டுமின்றி மூன்றாம் படை வீடான திருஆவினன்குடிக்கும் பக்தர்களை அரசு
தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

நாகஜோதி 49, ஆயக்குடி

எதையோ இழந்ததுபோல உள்ளது

ஊரடங்குக்கு முன், தினமும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு காலை 10:00 மணிக்கு மலைக்கு சென்று முருகனை தரிசனம் செய்வேன். மலைப்படிகளில் ஏறிச்சென்று தரிசனம் செய்வதால் மனவருத்தம் நீங்கும். தரிசனம் செய்யாமல் இருப்பதால் தற்போது பைத்தியம் பிடிப்பது போல் உள்ளது. மனஅழுத்தத்தை சொல்ல வார்த்தைகளே இல்லை.

மனதில் எற்படும் பிரச்னைகளை கடவுளிடம் தான் சொல்ல முடியும். கோயிலுக்கு சென்று
வழிபட்டால் மனஅழுத்தம் குறைவதுடன், தீர்வும் கிடைக்கும். மனப்போராட்டதிற்கு ஆறுதல் பிரார்த்தனை மட்டுமே. பழநி முருகனை நேரில் சென்று வணங்காதது எதையோ இழந்தது போல் உள்ளது. விரைவில் கொரோனா தொற்று பிரச்சனை முடிவுக்கு வந்து மலைக்கோயிலில் முருகனை தரிசிக்க ஆவலாக உள்ளது.

டி.மாலதி 38, எம்.ஜி.ஆர்., நகர், பழநி

துாக்கமின்றி தவிக்கிறேன்

பத்தாண்டுகளாக தினமும் ராக்கால பூஜையில் கலந்து கொள்வேன். மலைப்படி ஏறி,
காத்திருந்து, தரிசனம் முடித்து வருவது மனதுக்கு திருப்தியை தரும். மலைக் கோயில்
தீர்த்தமும், திருநீறும் கிடைப்பதே மகிழ்ச்சி. ஆத்ம திருப்தி தருவது பழநியாண்டவர் தரிசனம். தற்போது அதற்கு வழியில்லாததால் துாக்கமின்றி தவிக்கிறேன். கோயில் திறந்தால் இந்த கொடூர வைரஸ் நோயின் தாக்கம் குறையும் என்பது என் நம்பிக்கை.

கோயிலுக்கு சென்று வரும் நாட்களில் நான் ஆஸ்பத்திரி சென்றதில்லை. தற்போது அடிக்கடி ஆஸ்பத்திரி செல்லும் நிலை உண்டாகிறது. கோயிலுக்கு செல்லாததால் ஏற்படும் மன
அழுத்தமே இதற்கு காரணம் என நினைக்கிறேன். எல்லாம் நல்லபடியாக நடக்க பழநி முருகன் அருள் புரிய வேண்டும்.

வீ.பிரேம்குமார் 28, அடிவாரம், பழநி

வீட்டில் இருந்து தரிசிப்பேன்

எனக்கு விவரம் தெரிந்த நாள் முதல் பழநி முருகனை வழிபடாத நாளில்லை. வாரம்தோறும் செவ்வாய் கிழமையன்று எவ்வளவு வேலைகள் இருந்தாலும் கோவிலுக்கு சென்று விளக்கு ஏற்றுவது வழக்கம். ஆயிரம் கவலைகள் இருந்தாலும் அதை ஆண்டவனிடம் மட்டுமே
முறையிடுவேன். அப்போதுதான் மனநிறைவாக இருக்கும்.

ஆனால், தற்போது 3 மாதங்களுக்கும் மேலாக தரிசனம் செய்யமுடியவில்லை. எங்கள் வீட்டில் இருந்து பார்த்தால் முருகனின் ஆலயம் தெரியும். எனவே, தினமும் காலையில் வீட்டில்
இருந்தபடியே தரிசித்துக் கொள்வேன். கொரோனா முடிவுக்கு வந்தபின், முதல் வேலையாக கோவிலுக்கு சென்று முருகனை நேரில் பார்த்தால்தான் மனம் நிறையும்.

சவுண்டீஸ்வரி 27, மதனபுரம், பழநி.

வெளியில் நின்று தரிசனம்

எங்கள் வீட்டில் நடக்கும் சுபகாரியங்கள் எதுவாயினும் பழநி முருகனிடம் முறையிடாமல் நடந்ததில்லை. காதுகுத்து முதல் கல்யாணம் வரை அனைத்தும் முருகனின் சன்னதியிலேயே நடைபெறும். தற்போது கோவில் திறக்கப்படாமல் இருந்தாலும், பிரகாரத்திற்கு வெளியே நின்று இறைவனை தரிசித்து வருகிறேன். இப்படி எத்தனை தரிசித்தாலும், மலைக்கோயிலுக்கு
ஏறிச்சென்று முருகனை தரிசிக்காதது மனஉளைச்சலாகவே உள்ளது. இஷ்ட தெய்வமான முருகனை பார்க்க முடியாமல் இருப்பது மனதிற்கு வருத்தத்தை அளிக்கிறது. விரைவில்
எல்லாம் சரியாகும். இந்த தொற்றில் இருந்து உலக மக்களை பழநியாண்டவன் காப்பாற்றுவான்.

கவுசல்யா 25, அடிவாரம்,- பழநி.

தரிசித்தால் தன்னம்பிக்கை பிறக்கும்

தினமும் மாலை 8:30 மணிக்கு படிப்பாதை வழியாக மலையில் ஏறிச்சென்று முருகனை
தரிசிப்பேன். அய்யன் முருகனை தரிசிக்கும்போது மனதில் தைரியமும், ஊக்கமும்,
தன்னம்பிக்கையும் கிடைக்கும். எனக்கு வேலை, பொருளாதாரம் என பிரச்னைகள் அதிகமாக உள்ளது. கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்து மனக்குமுறலை கொட்டினால்தான் எனக்கு நிம்மதி கிடைக்கும். தற்போது கோயில் திறக்கப்படாததால், இறைவனின் சன்னிதானம் சென்று தரிசிக்காமல் இருப்பது எனக்கு பெரும் அச்சத்தையும், துயரத்தையும் ஏற்படுத்துகிறது.
முருகனை வழிபட நிபந்தனைகளை கடைபிடிக்கும்படி செய்து கோயிலுக்குள் அனுமதிக்கலாம்.

சேகர் 38, பாலதண்டாயுதபாணி பக்தர்கள் பேரவை, - பழநி.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X