கோமாரி நோய் தடுப்பூசி பணி: கால்நடை மருத்துவர்கள் எதிர்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோமாரி நோய் தடுப்பூசி பணி: கால்நடை மருத்துவர்கள் எதிர்ப்பு

Added : ஜூன் 28, 2020
Share

நாமக்கல்: கோமாரி தடுப்பூசி மற்றும் கோழி, ஆடு வழங்கும் பணிக்கு, கால்நடை மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கால்நடைத்துறையில் சில ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது ஆண்டின் முதல் தவணையாக மாநிலம் முழுவதும் உள்ள கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டிய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒவ்வொரு கிராமமாக சென்று கோமாரி தடுப்பூசி போடும்போது, பயனாளிகள் பெரும்பாலும் முகக்கவசம் அணிவந்து வருவதில்லை; இதனால், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியாது என, புகார் எழுந்தது. எனவே, கோமாரி தடுப்பூசி முகாமை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும் என, கால்நடை மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அதேபோல், விவசாயிகளுக்கு ஆடு, கோழி வழங்கும் திட்டத்திற்காக அவற்றை வாங்குவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. சந்தைகள் இல்லாததால் கிராமங்களுக்கு சென்று ஆடு, கோழிகளை வாங்க முடிவதில்லை என்றும், அந்த திட்டத்தையும்தற்காலிகமாக நிறுத்த வேண்டும் என, கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து, கால்நடை மருத்துவ அலுவலர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றி, இயக்குனருக்கு அனுப்பியுள்ளனர். தமிழ்நாடு கால்நடை மருத்துவ பட்டதாரிகள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பாலாஜி கூறியதாவது: கால்நடை மருத்துவர்கள், உதவியாளர்கள் அனைவரும் நெருக்கடியான சூழ்நிலையில் பணியாற்றி வருகின்றனர். எங்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களான கையுறை, முகக்கவசம், கிருமி நாசினி உள்ளிட்டவற்றை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டும். இருப்பினும் கிராமங்களில் சமூக இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பது கடினமாக உள்ளது. கோமாரி தடுப்பூசி பணி மற்றும் இலவச ஆடு, கோழிகள் வழங்கும் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்த வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X