திட்டவட்டம்! எல்லையில் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்;மன் கி பாத் உரையில் பிரதமர் மோடி உறுதி| Dinamalar

திட்டவட்டம்! எல்லையில் அத்துமீறினால் பதிலடி நிச்சயம்;'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி உறுதி

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (19+ 24)
Share
 திட்டவட்டம்!,எல்லையில், அத்துமீறினால், பதிலடி,நிச்சயம்;

புதுடில்லி:''காஷ்மீரின் லடாக்கில், எல்லை பகுதியில் அத்துமீறியவர்களுக்கு, நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். இந்தியா, எப்போதுமே நட்புக்கு மரியாதை அளிக்கும்;அதே நேரத்தில், அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு, எந்தவித தயக்கமும் இன்றி பதிலடி கொடுப்போம்,'' என, பிரதமர் மோடி பேசியுள்ளார்.

பிரதமர் மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில், 'மனதின் குரல்' எனப்படும், 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சி வாயிலாக, ரேடியோவில் மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இந்த நிகழ்ச்சியில், நேற்று அவர் பேசியதாவது:நம் நாடு, எப்போதுமே தனக்கான பிரச்னைகளை, வாய்ப்புகளாக மாற்றும் வல்லமை உடையது. இந்த சக்தி மூலம் தான், சவால்களை வெற்றிகரமாக நாம், தொடர்ந்துமுறியடித்து வருகிறோம்.

நாட்டில் உள்ள, 130 கோடி இந்தியர்களும், இந்த நம்பிக்கையுடன் தொடர்ந்து செயல்பட்டால், இந்தாண்டில் ஏற்பட்ட சவால்களை சாதனைகளாக மாற்ற முடியும். புதிய இலக்கையும், சாதனைகளையும் எட்ட முடியும். இந்தாண்டில் புயல், நில நடுக்கம், கொரோனா வைரஸ், வெட்டுக்கிளி தாக்குதல், எல்லையில் அத்துமீறல் என பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறோம். 'இந்த பிரச்னையில் இருந்து எப்போது மீள்வோம்; இந்தாண்டு எப்போது முடியும்' என்று தான், அனைவரும் தற்போது பேசுகின்றனர்.

இந்த விஷயத்தில், மக்கள் மனம் தளரக் கூடாது; நம்பிக்கையை கைவிடக் கூடாது. பல சவால்களில் இருந்து மீண்டு வந்த அனுபவம் நமக்கு உண்டு. பிரச்னைகளும், நெருக்கடிகளும் வாழ்க்கையில் வரத் தான் செய்யும். அதற்காக இந்த ஆண்டை மோசமான ஆண்டாக கருதக் கூடாது. இந்தாண்டின் முதல் ஆறு மாதங்கள் கடினமாக இருந்தது என்பதற்காக, மீதமுள்ள நாட்களும் இப்படித் தான் இருக்கும் என, அவநம்பிக்கை கூடாது.

நம் நாடு, பலமான கலாசாரம், அடையாளத்தால் கட்டமைக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் அருகே லடாக் எல்லை பகுதியில், அத்து மீறியவர்களுக்கு, நம் வீரர்கள் தகுந்த பதிலடி கொடுத்து உள்ளனர்.


நட்புக்கு மரியாதை

நம் நாடு, எப்போதுமே நட்புக்கு மதிப்பளிக்கும் நாடு. ஆனால், அத்துமீறலில் ஈடுபடுவோருக்கு, எந்தவித தயக்கமும் இன்றி பதிலடி தருவோம் என்பதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம். நம் இறையாண்மையையும், எல்லையையும் பாதுகாப்பதில், நம் வீரர்கள் உறுதியுடன் உள்ளனர்.

இந்த விஷயத்தில், நம் பலத்தை மற்ற நாடுகளுக்கு காட்டியுள்ளோம். வீரமும், துணிச்சலும் மிகுந்த நம் வீரர்கள், நாட்டுக்கு களங்கம் ஏற்படுவதை ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டார்கள். எல்லையில் உயிர் தியாகம் செய்த, 20 வீரர்களுக்கு இந்த நாடே தலை வணங்குகிறது. நம் நாட்டை பலமானதாகவும், தற்சார்பு உடையதாகவும் மாற்ற முயற்சிகள் நடக்கின்றன. வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு. நாம் செலுத்தும் அஞ்சலி இது தான். வீர மரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினருக்கும் நாடு தலை வணங்குகிறது.

எல்லையில் வீர மரணம் அடைந்த, பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த வீரர் குமாரின் தந்தை, தன் இரண்டு பேரன்களையும் ராணுவத்துக்கு அனுப்பி, நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்தப் போவதாக தெரிவித்துள்ளார்.உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரரின் குடும்பத்தினரின் மன உறுதி, இது தான். இந்த வீரர்களின் தியாகம், போற்றத்தக்கது.


சுயசார்புசமீபகாலமாக சுயசார்பு பொருளாதாரத்துக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.இதை மேலும் வலுவாக்க, ஒவ்வொரு இந்தியரும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களையே வாங்க வேண்டும். இதன் மூலம், நம் நாட்டு பொருளாதாரத்தை, பலமான சுயசார்பு பொருளாதாரமாக மாற்ற முடியும். தொழில்நுட்பம், பாதுகாப்பு ஆகிய துறைகளில் நாம் மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், பாதுகாப்பு துறையில் பெரிய வளர்ச்சியை பெற்றிருந்தோம்.நம்மிடம் ஆயுத தயாரிப்பு தொழிற்சாலைகள் இருந்தன. ஆனால், சுதந்திரத்துக்கு பின், பாதுகாப்பு துறையில் பின் தங்கி விட்டோம்.

நமக்கு பின்னால் இருந்த நாடுகள் எல்லாம், முன்னோக்கி சென்று விட்டன. சமீப காலமாக, பாதுகாப்பு துறையில் அபாரமான வளர்ச்சியை எட்டியுள்ளோம். இந்த துறையில் சுயசார்பு என்ற நிலையை நோக்கி முன்னேறி வருகிறோம். எந்த ஒரு விஷயத்திலும் மக்களின் பங்களிப்பு மிகவும் முக்கியம். மக்கள் பங்களிப்பு இல்லாமல் வெற்றி பெற முடியாது. எனவே சுயசார்பு பொருளாதாரம் என்ற நிலையை நாடு எட்டுவதற்கு, மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.


ஊரடங்கு தளர்வு

கொரோனா பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை தளர்த்தும் காலத்தில் நாம் உள்ளோம். இதுபோன்ற நேரத்தில் தான், நாம் இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் முக கவசம் அணிவது, சமூக விலகலை பின்பற்றுவது போன்றவற்றை கண்டிப்பாக செயல்படுத்த வேண்டும். எவ்வளவு எச்சரிக்கையாக இருக்கிறோமோ, அந்த அளவுக்கு கொரோனா தாக்குதலில் இருந்து, நம்மை நாம் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

முக கவசம் அணிவது, தனி நபர் இடைவெளி உள்ளிட்ட கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால், உங்களுக்கும், உங்களால் வீட்டில் உள்ள வயதானவர்கள், குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி விடுவீர்கள். இதை அனைவரும் உணர வேண்டும்.அதனால், நாட்டு மக்கள் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து, உங்களையும், உங்களை சார்ந்தவர்களையும் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


கொரோனாவுக்கு எதிரான மக்களின் போராட்டம்அமெரிக்க டாக்டர்களிடையே பிரதமர் பேச்சு

''கொரோனாவுக்கு எதிராக, நாட்டு மக்களே முன்நின்று போராடுகின்றனர். இதனால் தான், மற்ற நாடுகளை விட, நம் நாட்டில் வைரஸ் பாதிப்பு குறைவாக உள்ளது,'' என, பிரதமர் மோடி பேசினார். அமெரிக்காவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, 80 ஆயிரம் டாக்டர்கள் பணியாற்றுகின்றனர். இந்த டாக்டர்கள் சங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் பங்கேற்று, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் மோடி பேசியதாவது:

கொரோனா பரவலை தடுக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு தருகின்றனர்.கொரோனாவுக்கு எதிராக, நாட்டு மக்களே முன்நின்று போராடுகின்றனர். அமெரிக்காவில், 10 லட்சம் பேரில், 350 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாகவும், பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின் போன்ற ஐரோப்பிய நாடுகளில், 10 லட்சம் பேரில், 600 பேர் பலியாகி உள்ளதாகவும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. அதேநேரத்தில், நம் நாட்டில், 10 லட்சம் பேரில், 12 பேர் மட்டுமே இறந்துள்ளனர். நாட்டு மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல், இது சாத்தியமில்லை.

கொரோனா பரவல் தடுப்பு பணியில், உத்தர பிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளன. நாட்டின் கிராமப்புற பகுதிகளில், இந்த நோய் பெரிய பாதிப்பை ஏற்படுத்த வில்லை. சரியான நேரத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ஆயிரக்கணக்கானோ ரின் உயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த நெருக்கடியான சூழல், நம் நாட்டின் சுகாதார கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மிகவும் உதவி யுள்ளது.

வைரஸ் பரவத் துவங்கியபோது, இந்தியாவில், ஒரே ஒரு கொரோனா பரிசோதனை மையம் தான் இருந்தது. தற்போது, 1,000 ஆய்வகங்கள் உள்ளன. பாதுகாப்பு உடைகளை, துவக்கத்தில் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்தோம்; இப்போது உள்நாட்டு தயாரிப்பு மூலம், நமக்கு தேவையான உடைகளை தயாரிக்க முடிவதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம்.வாரத்துக்கு, 30 லட்சம், என் - 95 முக கவசங்களை தயாரிக்கிறோம். தற்போது, 50 ஆயிரம் செயற்கை சுவாச கருவிகள் உள்ளன. இவை எல்லாமே நம் நாட்டில் தயாரிக்கப்பட்டவை.

கொரோனா தடுப்பு பணிகளுக்காக உலகின் பல்வேறு நாடுகளிலும் முன்நின்று போராடும் இந்திய வம்சாவளி டாக்டர்களின் மன உறுதியை பாராட்டுகிறேன். சர்வதேச சமுதாயத்தின் சுகாதாரத்தில், நம் நாடு முக்கிய பங்காற்றுகிறது. சர்வதேச அளவில், ஒவ்வொருவரின் அன்றாட வாழ்வில், யோகா ஒரு முக்கிய அங்கமாகி விட்டது. ஆயுர்வேத சிகிச்சை முறையும் இப்போது வேகமாக வளர்ந்து வருகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பல பொருட்கள் நம் நாட்டில் இருந்து தான், மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சமீபகாலமாக, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு, நம் நாட்டில் இருந்து மஞ்சள் ஏற்றுமதி அதிகரித்துள்ளதை குறிப்பிட விரும்புகிறேன். ஏராளமான மருந்துகளையும், மருத்துவ உபகரணங்களையும் கண்டுபிடிக்கும் மற்றும் தயாரிக்கும் ஆய்வுகளில் நம் நாட்டைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள் ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் உள்ள இந்திய மருத்துவ நிபுணர்களும், இந்த பணிகளில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும்.

துாய்மை இந்தியா, கழிப்பறை கட்டுதல் போன்ற திட்டங்கள் மூலம், பல்வேறு விதமான நோய்களின் தாக்கம், தற்போது நம் நாட்டில் குறைந்து வருகிறது.எட்டு கோடி பெண்களுக்கு இலவச சமையல், 'காஸ்' சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், மூச்சுத் திணறல் போன்ற நோய்களில் இருந்து, அந்த பெண்களுக்கு விடுதலை கிடைத்துள்ளது. அனைத்து கிராமங்களுக்கும், 'டெலிமெடிசின்' வசதி கிடைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதில், வெளிநாடுகளில் வசிக்கும் இந்திய டாக்டர்கள் முக்கிய பங்காற்ற முடியும். இவ்வாறு, மோடி பேசினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X