சென்னை; -''ஊழல் செய்து சிறைக்கு சென்ற சிதம்பரத்திற்கு, பிரதமரை குறை கூறும் தகுதியில்லை,'' என, பா.ஜ., தேசிய செயலர், முரளிதர ராவ் கூறினார்.
தமிழக பா.ஜ., சார்பில் நடத்தப்பட்ட, காணொலி பேரணி நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது:ஊரடங்கால், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதைவிட உயிர் முக்கியம் என்பதால், ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மோடி தலைமையிலான மத்திய அரசு, ஜன்தன் திட்டத்தின் கீழ், 20 கோடி பெண்களின் வங்கி கணக்கில், 500 ரூபாய் செலுத்தி உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில், ஒரு ரூபாய் ஒதுக்கப்பட்டால், பயனாளிக்கு, 15 பைசா கிடைத்தது; தற்போது, ஒரு ரூபாயும் கிடைக்கிறது.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, 3 லட்சம் கோடி ரூபாய் கடனுதவி உட்பட, 20 லட்சம் கோடி ரூபாய் நிவாரண தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.ஐந்து ஆண்டுகளில், தமிழகத்திற்கு புதிதாக, 56 ரயில்கள் விடப்பட்டுள்ளன; துாத்துக்குடி துறைமுகம் நவீன மயமாக்கப்படுகிறது. மதுரையில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.நுண்ணுயிர் பாசன திட்டத்தில், தமிழகம் அதிகம் பயன் பெற்றுள்ளது. மகாநதி, கோதாவரி, காவிரி, வைகை இணைப்பு திட்டத்தை செயல்படுத்த உள்ளோம்.ஊழலுக்காக சிறைக்கு சென்ற சிதம்பரத்திற்கு, பிரதமரை குறை கூற தகுதி இல்லை. காங்., ஆட்சியில் ஏராளமான ஊழல் நடந்தது. பா.ஜ., ஆட்சிக்கு வந்த பின், ஊழல் குறித்த விவாதம் இல்லை.இந்தியா பெரும்பகுதியை, சீனாவிடம் இழந்தது, காங்., ஆட்சியில் தான் என்பதை, சிதம்பரம் உணர வேண்டும்.
சீனா நட்பு நாடல்ல. சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியுடன், ராகுல் செய்த ஒப்பந்தம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும்.சீனாவிடமிருந்து, ராஜிவ் அறக்கட்டளை நன்கொடை பெறப்பட்டுள்ளது. அதனால், சீனாவை குறை கூறாமல், மோடியை குறை கூறுகின்றனர். சீனா தாக்குதல் நடத்தியதற்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்; அரசுக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக, அவர் கூறியது வரவேற்கத்தக்கது. தமிழகத்தில், பா.ஜ., சார்பில், மக்களுக்கு முக கவசம், சானிடைசர் வழங்குகிறோம். காங்., கட்சியினர் எதுவும் செய்யவில்லை. இவ்வாறு, முரளிதர ராவ் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE