புதுடில்லி: மேக் இன் இந்தியா என கூறும் பாஜ., அரசு தான் சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை கொள்முதல் செய்தவாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் விமர்சித்துள்ளார்.
ஊரடங்கை பயன்படுத்தி தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனிடையே இந்தியா - சீன எல்லை பகுதியில் நடந்த மோதலால் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என குரல் எழுந்தது. இதன் காரணமாக சில அரசுகள் சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்தது. இந்நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும் வகையில் உள்ள 59 சீன செயலிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என உளவுத்துறைகள் பரிந்துரை செய்ததை அடுத்து 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.

இந்நிலையில், மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தை விமர்சித்து ராகுல் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ‛தரவுகள் பொய் சொல்லாது, பாஜ., கூறுவது: மேக் இன் இந்தியா, பாஜ., செய்வது: சீனாவிலிருந்து வாங்குவது,' என பதிவிட்டு வரைபடத்தை வெளியிட்டுள்ளார். வரைபடத்தில் சீனாவிலிருந்து கொள்முதல் செய்ததில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கும், மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக்கும் உள்ள ஒப்பீட்டை விளக்கி வரைபடமாக வெளியிட்டுள்ளார்.