சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

அருகதை இருக்கிறதா?

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

அருகதை இருக்கிறதா?

எஸ்.ராமு, சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடப் போகும் ஜோ பிடன், அமெரிக்க முஸ்லிம்களிடையே பிரசாரம் மேற்கொண்ட போது, காஷ்மீர் மக்கள் இழந்த உரிமையை மீண்டும் பெற, தேவையான நடவடிக்கைகளை, இந்தியா எடுக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார்.தேவையேயில்லாமல், அனாவசியமாக, இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில், அவர் மூக்கை நுழைத்திருக்கிறார்.காஷ்மீரில், '370' சட்டத்தால் முற்றிலுமாக பாதிக்கப்பட்டது, மண்ணின் மைந்தர்களான, 'காஷ்மீர் பண்டிட்கள்' தான். ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட, காஷ்மீர் பண்டிட் குடும்பங்கள், தங்கள் சொத்து சுகங்களையும், நிம்மதியையும் இழந்து, உயிர் பிழைத்தால் போதும் என,
காஷ்மீரில் இருந்து வெளியேறினர்.அதற்கு காரணம், '370' சட்டப்பிரிவு தான். தங்கள் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் இழந்து, சொந்த நாட்டிலேயே, காஷ்மீர் பண்டிட்கள், அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.மேலும், '370' சட்டத்தால், அங்கு வாழ்ந்து வரும், முஸ்லிம் மக்களும் பலன் பெறவில்லை. அந்த சட்டத்தால் பயன் அடைந்தோர், ஷேக் அப்துல்லா குடும்பமும், முப்தி முகமது சையீது குடும்பமும் மட்டும் தான். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சிந்தித்துப் பாருங்கள்...அந்த சட்டம் அமலில் இருந்த போது, காஷ்மீர் வாழ் முஸ்லிம்கள் வசதி வாய்ப்போடும், கல்வியறிவோடும் இருந்திருந்தால், பாகிஸ்தான் ராணுவத்திடம் கூலி வாங்கி, சொந்த நாட்டு ராணுவத்தின் மீது கல்லெறிவார்களா?
இந்த வரலாறு, சரித்திரம், பூகோளம் எதுவுமே தெரியாமல், அறியாமல், ஜோ பிடன் உளறிக் கொட்டியிருக்கிறார்.ஒரு அன்னிய நாட்டின் மீது, குறை சொல்வதற்கு முன், தன் நாட்டு நிலவரம் என்னவென்று தெரிந்துக் கொள்ள வேண்டும்.அமெரிக்காவில் வாழும் கறுப்பினத்தவர் சுதந்திரமாகவும், சுயமரியாதையோடும், வெள்ளையருக்கு ஈடாக நடத்தப்படுகிறார்களா?கத்தியின்றி, யுத்தமின்றி எங்கள் நாட்டுக்கு, ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரம் பெற்றுத் தந்தார், மஹாத்மா காந்தி. ஆனால் அமெரிக்காவில், கத்தியின்றி, ரத்தமின்றி, சத்தமும் இன்றி, ஒரு கறுப்பினத்தவரை, கால் முஷ்டியாலேயே கொன்று குதுாகலித்திருக்கிறார், ஒரு வெள்ளைக்கார
போலீஸ்காரர். அமெரிக்கர்களுக்கு, பிற நாட்டின் மீது குற்றம் சொல்ல, எதாவது அருகதை இருக்கிறதா?இவ்வளவு, 'பேராற்றல்' பெற்ற ஜோ பிடனை, அமெரிக்க ஜனநாயக கட்சி எப்படி, ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்தது என்பது தான் ஆச்சரியமாக உள்ளது.

ராஜரீதியிலான தாக்குதலை துவக்குவோம்!

ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சீனா, ஒருபோதும், நமக்கு நம்பகமான அண்டை நாடாய் இருந்ததில்லை.ஒருபுறம், ஆக்கிரமிப்பு செய்வதும், பேச்சுவார்த்தை நடவடிக்கையை அடுத்து, கொஞ்சம் பின்வாங்குவதுபோல், 'பாவலா' செய்வதும், சீனாவின் வாடிக்கையாகிவிட்டது.இது போதாதென்று நேபாளத்தையும், பாகிஸ்தானையும், நமக்கு எதிராக துாண்டிவிட்டு குடைச்சல் கொடுப்பது, தொடர்கதையாகிவிட்டது.தங்களுக்கு சொந்தமான, வடக்கு எல்லையில், 13 இடங்களை, சீனா பிடித்து வைத்திருப்பதை பற்றிய கவலையோ, பன்னெடுங்காலமாக உற்ற நண்பனாக திகழும் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகிறோமே என்ற சுரணையோ இல்லாமல், நேபாளம் செயல்படுகிறது. இதற்கு சீனாவின், நரி தந்திரமே காரணம்.சீனாவின் கைபாவையாக மாறியுள்ள நேபாளம், 200 ஆண்டுகள் நட்புக்கு துரோகம் செய்துள்ளது.இதற்கெல்லாம் முடிவு கட்ட, இப்போது இந்தியாவுக்கு உள்ள ஒரே வழி, ராஜரீதியான தாக்குதலை துவக்குவது தான். உலக நாடுகளின் ஆதரவைப் பெற்று, திபெத்திற்கு சுதந்திரம் பெற்றுத்தர வேண்டும். இது, சீனாவிற்கு பலத்த அடியாக இருக்கும். மங்கோலியா, தைவான், வியட்நாம், ஜப்பான், மலேஷியா மற்றும் நம் லடாக், அருணாச்சல பிரதேசம், பூடான், சிக்கிம் என, பல்வேறு இடங்களில், சீனா பிரச்னை செய்து வருகிறது. சீனாவிற்கு ஒரு அடி விழுந்தால், மற்ற நாடுகள் தானாக முன்வந்து, அந்நாட்டிற்கு எதிராக ஒன்றிணையும். மேலும், உலக நாடுகளும், 'கொரோனா' விவகாரத்தில், சீனா மீது கடும் கோபத்தில் உள்ளன.
சீனாவின் நரித்தனத்துக்கு முடிவு கட்ட, இந்தியா தயாராக வேண்டும்.

ஒரே தவறு; இரண்டு தீர்ப்புகளா?

ஏ.அஸ்மாபாக் அன்வர்தீன், ராமநாதபுரத்திலிருந்து எழுதுகிறார்: ஜெயலலிதா இறந்ததையடுத்து ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகளால் பாதிப்படைந்த, ஓ.பன்னீர் செல்வம், 'தர்ம யுத்தம்' என்று போராடி, தனக்கு வேண்டியதை அடைந்துவிட்டார். அ.தி.மு.க., தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், துணை முதல்வராகவும் பதவி வகித்து வருகிறார்.'தர்ம யுத்தம்' களேபரம் நடந்தபோது, சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. இதில், பன்னீர்செல்வம், பாண்டியராஜன் போன்றோர், அரசுக்கு எதிராக வாக்களித்தனர். உடனே, கட்சித் தாவல் குற்றச்சாட்டு எழுந்து, வழக்கு, நீதிமன்றம் வரை சென்றது.இதேபோல, மற்றொரு முறை, தினகரன் ஆதரவாளர்களும், அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். உடனே அவர்களின், எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டு, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல்களும் நடந்து முடிந்து எல்லாம் பழங்கதையாகிவிட்டது.ஆனால், அதே தவறைச் செய்த, பன்னீர்செல்வம் தரப்பினர் மீது, இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.ஜனநாயகத்தில் சட்டமும், விதிமுறைகளும் எந்தவித பாகுபாடின்றி அனைவருக்கும் சமமானது.ஒரே விஷயத்தை, இரு தரப்பினர் செய்திருந்தாலும், அவர்களில் ஒரு பிரிவினர் மீது மட்டும் நடவடிக்கை பாய்ந்துள்ளது; மற்றொரு பிரிவினர் மீது, நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையை பார்க்கும்போது, ஆட்சியாளர்களின் கைகளில் தான், ஜனநாயகம் இருக்கிறதோ என்ற எண்ணம் எழுகிறது. இத்தகைய, மறைமுக சர்வதிகார போக்கை, தகுந்த அரசியல் சட்டத் திருத்தம் மூலம் தடுத்து நிறுத்தினால் தான், எதிர்கால இந்தியா, நேர்மை மிகுந்த நாடாக மிளிரும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
01-ஜூலை-202006:23:24 IST Report Abuse
D.Ambujavalli தினகரனும் அவர் ஆதரவாளர்களும் ஆட்சிக்கு எதிராக ஓட்டளிக்கவில்லை. கவர்னரிடம்தான் முதல்வர் பற்றி மனுக்கொடுத்தனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X