ரூ.3 லட்சத்தை சுளையாக முழுங்கிய பெண் வி.ஏ.ஓ.,!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ரூ.3 லட்சத்தை சுளையாக முழுங்கிய பெண் வி.ஏ.ஓ.,!

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
 ரூ.3 லட்சத்தை சுளையாக முழுங்கிய பெண் வி.ஏ.ஓ.,!

ரூ.3 லட்சத்தை சுளையாக முழுங்கிய பெண் வி.ஏ.ஓ.,!
''மொத்தம், 40 தொகுதிகள்ல போட்டியிட முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றபடியே, அன்வர்பாய் வீட்டில் ஆஜரானார்,
அந்தோணிசாமி.''சட்டசபை தேர்தலுக்கு தான், பல மாசம் இருக்கே... அதுக்குள்ள, எந்தக் கட்சி அவசரப்படுது வே...'' எனக் கேட்டார்,
அண்ணாச்சி.
''தமிழக, பா.ஜ.,வை தான் சொல்றேன்... சட்டசபை தேர்தல்ல, எந்தக் கூட்டணியில இடம் பெற்றாலும், 40 தொகுதிகளுக்கு குறையாம போட்டியிடணும்னு, மாநில தலைவர் முருகன் முடிவு செஞ்சிருக்காருங்க...
''அதோட, கெங்கவல்லி, ராசிபுரம், காட்டு
மன்னார்கோவில்னு மூணு தொகுதிகளை குறிச்சு வச்சிருக்கார்... தேர்தல் சமயத்துல, இதுல தோதான தொகுதியில களமிறங்கவும், முருகன் முடிவு பண்ணியிருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''டிரஸ்ட் மூலமா மருந்து குடுத்துட்டு இருக்காரு பா...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார்,
அன்வர்பாய்.
''யாரைச் சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''வருவாய்த் துறை அமைச்சர் உதயகுமார், 'அம்மா டிரஸ்ட்'னு ஒண்ணை நடத்திட்டு இருக்கார்... இந்த டிரஸ்ட் சார்புல, தன் திருமங்கலம் தொகுதியில, ஏற்கனவே இலவச டியூஷன்களை நடத்திட்டு இருக்காரு பா...
''இப்ப, கொரோனா காலம்கிறதால, டிரஸ்ட் சார்புல, மதுரையில இருக்கிற போலீஸ் ஸ்டேஷன்கள், வருவாய்த் துறை அலுவலகங்களுக்கு, நுாத்துக்கணக்குல, 'சானிடைசர்' இயந்திரங்களை வாங்கி குடுத்திருக்கார்...
''அதோட, கொரோனா தடுப்புக்கு, சித்தா, அலோபதி, ஹோமியோபதி மருந்துகள் அடங்கிய, 'கிட்'களையும், கிராமம், கிராமமா,
அ.தி.மு.க.,வினர் மூலமா குடுத்துட்டு இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.''சட்டசபை தேர்தல் வர்றதோல்லியோ... மக்களை கவர் பண்ணி வச்சா தானே, கரையேற முடியும்...'' என, 'கமென்ட்' அடித்த குப்பண்ணா, ''முள்ளங்கி பத்தையாட்டம், 3 லட்சம் ரூபாயை ஏப்பம் விட்டுட்டா ஓய்...'' என, கடைசி மேட்டருக்குள் நுழைந்தார்.
''யாருவே அது...'' எனக் கேட்டார்,
அண்ணாச்சி.
''சென்னைக்கு பக்கத்துல, ஒரு கிராமத்துல இருக்கற பெண், வி.ஏ.ஓ.,வை தான் சொல்றேன்... இந்தம்மா, ஜாதி, இருப்பிடம், வாரிசு சான்றிதழ் கேட்டு வரவாளிடம், 1,000த்துல இருந்து, 5,000 ரூபாய் வரைக்கும் வாங்கிட்டு தான், கையெழுத்தே போடறாங்க ஓய்...
''பணம் வசூல் பண்ணி தரதுக்காகவே, புரோக்கர் ஒருத்தரை நியமிச்சிருக்காங்க... இந்தக் கூட்டணி மாசா மாசம், பல லட்சம் ரூபாய் பார்க்கறது ஓய்...
''இந்த கிராமத்துல இருக்கற ஒருத்தர், ஒரிஜினல் பட்டாவை, 'ஆன்லைன்'ல பதிவேற்றம் பண்ண அலைஞ்சிண்டு இருந்தார்... 2018ம் வருஷம் அவர்கிட்ட, ஊராட்சியின் முன்னாள் பிரமுகர் ஒருத்தர், 3 லட்சம் ரூபாயை வாங்கி, புரோக்கர் மூலமா, வி.ஏ.ஓ.,வுக்கு குடுத்திருக்கார் ஓய்...
''இதுவரைக்கும் பட்டாவை பதிவேற்றம் பண்ணலை... பணம் குடுத்தவர் சமீபத்துல கேட்டப்ப, பிரமுகரும், வி.ஏ.ஓ.,வும் பணமே வாங்கலைன்னு கற்பூரத்தை அணைக்காத குறையா சொல்லிட்டா ஓய்... பணம் குடுத்தவர், பாவம், நொந்து போயிருக்கார் ஓய்...'' என, முடித்தார்
குப்பண்ணா.
ஒலித்த மொபைலை எடுத்த அன்வர்பாய், ''ஜெயச்சந்திரன், அசோக்கிடம் குடுத்து, தீபாவுக்கு பார்சலை அனுப்பிட்டேன் பா...'' எனப் பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X