புதுடில்லி : கொரோனா வைரஸ் பாதிப்பில் டில்லியை முந்தி, தமிழகம் மீண்டும் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
நாடு முழுதும் வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை, 5.66 லட்சமாக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு தொடர்பாக, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: நேற்று ஒரு நாளில் மட்டும், நாடு முழுதும், 16 ஆயிரத்து, 893 பேருக்கு புதிதாக வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து, ஏழாவது நாளாக, பாதிப்பு எண்ணிக்கை, 15 ஆயிரத்தை கடந்து வருவது குறிப்பிடத் தக்கது. மொத்த பாதிப்பு எண்ணிக்கையும், 5.66லட்சத்தை கடந்துள்ளது.
நேற்று மட்டும், நாடு முழுதும், 418 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை, 16 ஆயிரத்து, 893 ஆக அதிகரித்துள்ளது. மஹாராஷ்டிராவில் மட்டும் நேற்று, 5,200 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பிலும், மஹாராஷ்டிராவே முதலிடத்தில் உள்ளது.
அங்கு, 1.70 லட்சம் பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.மொத்த பாதிப்பில், கடந்த சில நாட்களாக மூன்றாவது இடத்தில் இருந்த தமிழகம், 86 ஆயிரத்து, 224 பாதிப்புகளுடன், நேற்று மீண்டும் இரண்டாவது இடத்துக்கு வந்தது. டில்லி, 85 ஆயிரத்து, 161 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. குஜராதில், 31 ஆயிரத்து, 938 பேருக்கும், உத்தர பிரதேசத்தில், 22 ஆயிரத்து, 828 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.கர்நாடகாவில், பாதிப்பு எண்ணிக்கை, 1,100ஐ கடந்துள்ளது. ஆந்திரா, ஹரியானா மாநிலங்களை, கர்நாடகா முந்தி உள்ளது. நாடு முழுதும் இதுவரை, 3.34 லட்சம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குணமடைந்தவர்கள் விகிதம், 59 சதவீதமாக உள்ளது. நேற்று பலியான, 418 பேரில், அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் மட்டும், 181 பேர் இறந்துள்ளனர்.அடுத்தபடியாக, தமிழகத்தில், 62 பேரும், டில்லியில், 57 பேரும் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். குஜராத், கர்நாடகா மாநிலங்களில், தலா, 19 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கையிலும், 7,610 பேருடன், மஹாராஷ்டிராவே முன்னணியில் உள்ளது. டில்லியில், 2,680; குஜராதில், 1,827; தமிழகத்தில், 1,141; உத்தர பிரதேசத்தில், 672 பேர் இறந்துள்ளனர். பலியானோரில், 70 சதவீதம் பேர், ஏற்கனவே பல்வேறு நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
பாடத் திட்டத்தில்கொரோனா வைரஸ்
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளி பாடத்திட்டதில், கொரோனா வைரஸ் குறித்த பாடம் சேர்க்கப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதற்கான காரணம், அதை தடுக்கும் நடைமுறைகள் ஆகிய விஷயங்கள், பாடத்தில் இடம்பெறவுள்ளன. இது குறித்து கல்வியாளர்களுடன், மாநில அரசு ஆலோசித்து வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE