புதுடில்லி: ''பா.ஜ., 'மேக் இன் இந்தியா' என, கூறுகிறது; ஆனால், சீனாவிலிருந்து அதிகமான பொருட்களை, மோடி அரசு கொள்முதல் செய்கிறது,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியுள்ளார்.
கிழக்கு லடாக் எல்லையில், இந்திய - சீன ராணுவத்துக்கு மோதல் ஏற்பட்டதிலிருந்து, மத்திய அரசையும், பிரதமர் மோடியையும், காங்கிரஸ் எம்.பி., ராகுல், 'டுவிட்டர்' சமூக வலைதளத்தில் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.டுவிட்டரில் நேற்று காலை அவர் வெளியிட்ட பதிவில், 'புள்ளி விபரங்கள் பொய் சொல்லாது. பா.ஜ., மேக் இன் இந்தியா என கூறுகிறது. ஆனால், மத்திய மோடி அரசு, சீனாவிலிருந்து பொருட்களை கொள்முதல் செய்கிறது' என, கூறியிருந்தார்.
மேலும், சீனாவிலிருந்து கொள்முதல் செய்ததில், மோடி தலைமையிலான ஆட்சிக்கும், மன்மோகன் சிங் தலைமையிலான கூட்டணி ஆட்சிக்கும் உள்ள வித்தியாசத்தை வரைபடமாக வெளியிட்டுள்ளார். இந்நிலையில், டுவிட்டரில் நேற்று மாலை, 'வீடியோ' ஒன்றை வெளியிட்ட ராகுல், பிரதமர் மோடிக்கு கேள்விகள் எழுப்பியிருந்தார். அதில், அவர் கூறியிருந்ததாவது:
இந்தியாவின் நிலப் பகுதியை, சீனா அபகரித்துள்ளது. இது, இந்த தேசத்தின் மக்கள் அனைவருக்கும் தெரியும். லடாக்கில் நான்கு இடங்களில், சீன ராணுவம் ஆக்கிரமித்துள்ளதும் அனைவருக்கும் தெரியும்.லடாக்கில் உள்ள இந்தியப் பகுதியிலிருந்து, சீன ராணுவத்தை எப்போது விரட்டப் போகிறாம்; எப்படி விரட்டப் போகிறோம் என்பதை, பிரதமர் மோடி, மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
கொரோனா வைரஸ், கடந்த, மூன்று மாதங்களில், நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஊரடங்கால், ஏழை மக்கள், தொழிலாளர்கள், நடுத்தரக் குடும்பத்தினர், மாத ஊதியம் பெறுபவர்கள், மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில், காங்கிரஸ் பரிந்துரைத்த, 'நியாய்' திட்டத்தை, மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இந்த திட்டத்தின் மூலம், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு, மாதம், 7,500 ரூபாய் நேரடியாக வழங்க வேண்டும்.மத்திய அரசு, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. கடந்த 7ம் தேதி முதல், இதுவரை, 22 முறை பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.
அரசிடம் பணத்துக்கு பற்றாக்குறை இல்லை. மூன்று லட்சம் கோடி ரூபாய் கையிருப்பு உள்ளது. ஆதலால், உடனடியாக நியாய் போன்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி, மக்களுக்கு பணத்தை வழங்கிட வேண்டும்.இவ்வாறு, ராகுல் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE