எதிர்பார்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை...சவுக்கு அதிகம் விளைவதால் விவசாயிகள் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எதிர்பார்ப்பு! விழுப்புரம் மாவட்டத்தில் காகித தொழிற்சாலை...சவுக்கு அதிகம் விளைவதால் விவசாயிகள்

Added : ஜூன் 30, 2020
Share

விழுப்புரம் மாவட்டத்தில் நெல் கரும்பு, மணிலாவிற்கு அடுத்த படியாக சவுக்கு அதிக அளவில் பயிரிடப்படுகின்றது.

மாவட்டத்தில் போதிய மழை இல்லாதாதல், சவுக்கு, நெல், கரும்புக்கு மாற்றாக விளைவிக்கின்றனர். சவுக்கு வறட்சியை தாக்குபிடிக்கும் என்பதால், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 30 ஆயிரம் ெஹக்டேர் பரப்பளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுகின்றது. விழுப்புரம் மாவட்டத்தில் வானுார், திண்டிவனம், மரக்காணம் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில் அதிக அளவில் சவுக்கு விளைவிக்கப்படுகின்றது.தற்போது சவுக்கு அறுவடை காலம் என்பதால், அதிக அளவில் சவுக்கு மரங்கள் வெட்டும் பணி நடைபெற்று வருகின்றது.

சவுக்கு பயிரிட்டால், வேர் முதல் உச்சி வரை விலைக்கு விற்கப்படுவதால், விளை நிலங்களுக்கு வரும் வியாபாரிகள், மொத்தமாக விலை பேசி, சவுக்கு மரத்தை வெட்டி, சவுக்கு கம்பங்கள், வேர் கட்டைகள், சவுக்கு மிளார்கள் என தனித்தனியாக பிரித்து கோயம்புத்துார், ஈரோடு, பாவானி, திருச்சி உள்ளிட்ட தனியார் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். சவுக்கு மரம் ஆரம்பத்தில் ஒரு டன் ரூ. 5 ஆயிரம் முதல், 6 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கால், சவுக்கு விற்பனை விலை சரிந்துள்ளதால், சவுக்கு பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் விளையும் சவுக்கு மரங்கள் ஈரோடு பள்ளிப்பாளையத்திலுள்ள தமிழ்நாடு செய்திதாள் காகித ஆலை நிறுவனம்(டி.என்.பி.எல்.,) மற்றும் தனியார் வியாபாரிகள் மூலம் வாங்கப்படுகின்றது.தற்போதுள்ள நிலவரப்படி, டிஎன்பிஎல்.,நிறுவனம் ஒரு டன் தோல் உறித்த சவுக்கு கட்டை ரூ.5,575 என விலை நிர்ணயம் செய்துள்ளது.அதே போல் தனியார் மூலம் வாங்கப்படும் ஒரு டன் சவுக்கு ரூ.3,750 க்கு (தோல் உறிக்காத சவுக்கு கட்டைகள்) என நிர்ணயம் செய்துள்ளனர்.இதில் அரசு நிர்ணயித்த விலை கூடுதலாக இருந்தாலும், டிரான்ஸ்போர்ட் கட்டணம், மற்றும் ஒரு டன் சவுக்கை உறிப்பதற்கு ரூ.700 வரை கூலி கொடுக்க வேண்டும். மேலும், அரசு நிறுவனத்திற்கு சவுக்கு சப்ளை செய்தால், அதற்குறிய பணம் கிடைப்பதற்கு நான்கு மாதங்கள் ஆகின்றது.

பணம் தாமதாக கிடைப்பதால், விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் சவுக்கை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக, சவுக்கு விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.தனியார் வியாபாரிகள் சவுக்கு மரங்களை வாங்கி 15 நாட்களுக்குள் பணத்தை கொடுத்து விடுகின்றனர். இதனால் பெரும்பாலான சவுக்கு விவசாயிகள் அரசு காகித நிறுவனத்திற்கு கொடுப்பதை விட, தனியார் வியாபாரிகளிடம் விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில், அதிக அளவில் சவுக்கு சாகுபடி செய்யப்படுவதால், சவுக்கு மரங்களை கொள்முதல் செய்யும் வகையில் அரசு சார்பில் காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று, விழுப்புரம் மாவட்ட விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்னை குறித்து, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ.,மாசிலாமணி சட்டமன்றத்தில், '' வெண்மணியாத்துார் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை துவங்க உள்ள இடத்தில், காகித தொழிற்சாலைக்கு தேவையான சவுக்கு மரத்தில் தயாரிக்கும் காகித கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை துவங்க வேண்டும்.

இதே போல் டெல்டா மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைப்பது போல், சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடக்கும் வகையில், சவுக்கு நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும்'' என்று பேசினார்.கொரோனா ஊடரங்கால், சவுக்கிற்கு அதிக விலை கிடக்காமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில், காகித தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் நீண்ட நாட்களாக அரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இதை கருத்தில் கொண்டு, சவுக்கு பயிரிடும் விவசாயிகளுக்கு சவுக்கிற்கு நல்ல விலை கிடைக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டத்தில், காகித தொழிற்சாலை அமைப்பதற்குண்டான நடவடிக்கையை, அரசு விரைந்து எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X