புதுடில்லி : நாட்டின் பாதுகாப்பு கருதி, 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, சீன நிறுவனங்களின், 59 மொபைல்போன், 'ஆப்'களுக்கு மத்திய அரசு விதித்த தடையால், சீனா கலக்கம் அடைந்துள்ளது. 'சர்வதேச முதலீட்டாளர்களின் உரிமையை பாதுகாக்கும் பொறுப்பு,
இந்தியாவுக்கு உள்ளது' என, சீன அரசு தெரிவித்துள்ளது.
நம் அண்டை நாடான சீனா, சமீப காலமாக நம் எல்லை பகுதியில் மோதல் போக்கை பின்பற்றி வருகிறது. காஷ்மீரின் லடாக் அருகே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதனால், எல்லையில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, 'சீனப் பொருட்களின் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும். சீனப் பொருட்களை யாரும் பயன்படுத்தக் கூடாது' என, ஏராளமானோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சீனாவை தலைமையிடமாக வைத்து செயல்படும், 'டிக்டாக், ஷேர்இட், ஹலோ' உள்ளிட்ட, 59 மொபைல்போன் செயலிகளை, நேற்று முன்தினம் மத்திய அரசு அதிரடியாக தடை செய்தது.இந்த செயலிகள், நம் நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு, ஒருமைப்பாடு, ராணுவம் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படுவதாக, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் பெயர், வயது, வசிப்பிடம்,வெளியிடும் படக்காட்சிகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும், சீனாவில் உள்ள, 'சர்வர்'களுக்கு அனுப்பப்படுவதாக, பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டி வந்தனர்.இந்நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில், சீனாவின் அத்துமீறலைத் தொடர்ந்து, நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை, மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகிறது.அதன்படி, உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள, சீனாவைச் சேர்ந்த, 59 மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டு உள்ளன. இதையடுத்து, 'கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர்' ஆகியவற்றில் இருந்து, இந்த செயலிகள்நீக்கப்பட்டுள்ளன.
சீனா கடும் கலக்கம்
மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கையால், சீனா கடும் கலக்கம் அடைந்துள்ளது. இது குறித்து, சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் கூறியதாவது:சீன செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ளது, கவலை அளிக்கிறது. நிலைமையை கூர்ந்து கவனித்து வருகிறோம். வெளிநாடுகளை மையமாக வைத்து செயல்படும் சீன வர்த்தக நிறுவனங்கள், முதலீட்டாளர்கள், சம்பந்தப்பட்ட நாடுகளின் சட்டதிட்டங்கள், விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு செயல்பட வேண்டும் என, ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம்.
எனவே, தற்போது இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை வருத்தம் அளிப்பதாக உள்ளது. சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் முதலீட்டாளர்களின் நியாயமான சட்ட உரிமைகளை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு, இந்திய அரசுக்கு உள்ளது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர நட்புறவின் அடிப்படையிலானது. தற்போது இந்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை, அவர்களுக்கு எந்த வகையிலும் நலன் அளிக்காது.இவ்வாறு, அவர் கூறினார்.
தொடரும் பேச்சு
இதற்கிடையே, கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பின், இரு நாட்டு ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. ராணுவ அதிகாரிகளுக்கு இடையே, நேற்று மூன்றாம் கட்டமாக பேச்சு நடந்தது. இதில், எல்லையில் அமைதியான சூழலை ஏற்படுத்துவது என்றும், அனைத்து பிரச்னைகளுக்கும், ராணுவ அதிகாரிகள், துாதரக அதிகாரிகள் அளவில் தொடர்ந்து பேச்சு நடத்துவது என்றும், இரு தரப்பிலும் வலியுறுத்தப்பட்டதாக தெரிகிறது.
பிரான்ஸ் இரங்கல்
சீன ராணுவ தாக்குதலில், நம் வீரர்கள், 20 பேர் உயிரிழந்ததற்கு, ஐரோப்பிய நாடான பிரான்சின் ராணுவ அமைச்சர் ப்ளோரன்ஸ் பேர்லி, இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:இது, மிகவும் நெருக்கடியான சூழ்நிலை. எல்லையில், 20 வீரர்கள் உயிரிழந்தது வருத்தம் அளிக்கிறது.
அவர்களது குடும்பத்தினருக்கு, பிரான்ஸ் அரசு மற்றும் ராணுவத்தின் சார்பில் அனுதாபத்தை தெரிவிக்கிறேன். இந்திய அரசுக்கு, எப்போதுமே பிரான்சின் ஆதரவு உண்டு.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
'நிறைவேற்ற தயார்'
'டிக்டாக்' இந்தியா நிறுவனத்தின் தலைவர் நிகில் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய சட்டப்படி, அனைத்து தனிநபர் தகவல் மற்றும் பாதுகாப்பு தேவைகளை, டிக்டாக் பின்பற்றி வருகிறது. இந்தியாவில் டிக்டாக் பயன்படுத்துவோரின் தகவல்கள் எதையும், சீனா உட்பட எந்த வெளிநாடுகளுக்கும் நிறுவனம் பகிரவில்லை. இனி எதிர்காலத்திலும் அவ்வாறு பகிரக் கூடாது என உத்தரவிட்டாலும், அதை நிறைவேற்ற நிறுவனம் தயாராக உள்ளது.
டிக்டாக் பயனரின் தகவல் மற்றும் ஒருங்கிணைப்புக்கு, நிறுவனம் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இது தொடர்பாக, மத்திய அரசு அதிகாரிகளை சந்தித்து, எங்கள் நிலையை தெளிவுபடுத்த உள்ளோம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
'நமோ' செயலிக்கு தடை எப்போது?
சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்த மத்திய அரசின் நடவடிக்கையை பாராட்டுகிறோம். அதேபோல், பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ, 'மொபைல் ஆப்'பான, 'நமோ ஆப்' என்ற செயலிக்கும் தடை விதிக்க வேண்டும். இந்த செயலியை பயன்படுத்தும் இந்தியர்களின் தனிப்பட்ட விபரங்கள், அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
பிரித்விராஜ் சவான், மூத்த தலைவர், காங்கிரஸ்
காங்கிரஸ் பாராட்டு
சீன மொபைல் செயலிகளுக்கு தடை விதித்து உள்ளதை, காங்கிரஸ் வரவேற்கிறது. சீன ராணுவம், நம் பகுதிக்குள் நுழைந்து, ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக, மேலும் பல அதிரடி நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
அகமது படேல், மூத்த தலைவர், காங்கிரஸ்
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE