பொது செய்தி

தமிழ்நாடு

காத்திருப்போர் பட்டியலில் அருண் பாலகோபாலன் துாத்துக்குடி புதிய எஸ்.பி.,யாக ஜெயகுமார் நியமனம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 காத்திருப்போர் பட்டியலில் அருண் பாலகோபாலன் துாத்துக்குடி புதிய எஸ்.பி.,யாக ஜெயகுமார் நியமனம்

சென்னை,; துாத்துக்குடி மாவட்ட, எஸ்.பி., அருண் பாலகோபாலன், திடீரென மாற்றப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அம்மாவட்டத்தின் புதிய எஸ்.பி.,யாக, ஜெயகுமார் நியமிக்கப்பட்டு உள்ளார்.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், மரக்கடை வைத்திருந்த ஜெயராஜ், 63; மொபைல் போன் கடை நடத்திய, அவரது மகன், பென்னிக்ஸ், 31 ஆகியோரை, போலீசார் அடித்து கொன்று விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, சி.பி.ஐ., விசாரணை நடத்த, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நியமனம்
இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட, எஸ்.பி., அருண் பாலகோபாலன், நேற்று திடீரென மாற்றப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவருக்கு பதிலாக, விழுப்புரம் மாவட்ட, எஸ்.பி., ஜெயகுமார், துாத்துக்குடி எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தேனி, மதுரை மாவட்டங்களை உள்ளடக்கிய, தென் மண்டல, ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் நேற்று ஓய்வு பெற்றார். அந்த இடத்திற்கு, பொருளாதார குற்றப்பிரிவு, ஐ.ஜி., முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை, உள்துறை செயலர், பிரபாகர் நேற்று பிறப்பித்தார். முருகன் யார்?தென்மண்டல, ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ள முருகன், 1997ல், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, காவல் துறையில், டி.எஸ்.பி.,யாக பணியில் சேர்ந்தவர்.விழுப்புரம், நெல்லை, டி.ஐ.ஜி., மற்றும் தென்மண்டல, ஐ.ஜி.,யாக ஏற்கனவே பணியாற்றிய அனுபவம் பெற்றவர்; சி.பி.ஐ.,யிலும் பணிபுரிந்துள்ளார்.இவர், 2019 ஆகஸ்டில், சென்னையில், லஞ்ச ஒழிப்பு துறை, இணை இயக்குனராக பணியாற்றிய போது, உடன் பணிபுரிந்த, பெண் எஸ்.பி.,க்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கினார்.முருகன் மீது, அந்த பெண் எஸ்.பி., முதல்வர் தனிப்பிரிவு, உள்துறை செயலர், டி.ஜி.பி., ஆகியோரிடம் புகார் அளித்தார். சென்னை, உயர் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார்.முருகன் மீதான புகார் குறித்து, பணியிடங்களில், பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை குறித்து விசாரிக்கும், கூடுதல், டி.ஜி.பி., சீமா அகர்வால் தலைமையிலான, 'விசாகா' குழு விசாரித்தது. இந்த குழு, ஐ.ஜி., மீது, சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு பரிந்துரை செய்தது.அதனால், முருகன் மீது, சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அதை எதிர்த்து, முருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில், இடைக்கால தடை பெற்றார்.இந்த பாலியல் தொல்லை விவகாரம் குறித்து, தெலுங்கானா மாநில உயர் போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், முருகன், தடை உத்தரவு பெற்றார். இதற்கிடையில், லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்த முருகன், பொருளாதார குற்றப் பிரிவுக்கும், அந்த பெண் எஸ்.பி., சென்னை மாநகர போலீசுக்கும் மாற்றப்பட்டனர்.புதிய எஸ்.பி.,துாத்துக்குடி, எஸ்.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ள ஜெயகுமார், ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., ஜாங்கிட்டின், தீவிர விசுவாசிகளில் ஒருவர். 'குரூப் - 1' போலீஸ் அதிகாரியான இவர், சென்னை மாநகர போலீசில், மத்திய குற்றப் பிரிவு, துணை கமிஷனர், வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் என, பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியவர்.ரவுடிகள் ஒழிப்பில், 'என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்' என்றும், பெயர் பெற்றவர்.சென்னையில், சட்ட விரோதமாக குட்கா தயாரிப்பு நடந்த இடத்தில், ரெய்டு நடத்தியவர். அதுபற்றி, தன்னிடம் முழு விபரங்களை தெரிவிக்கவில்லை; ஜெயகுமார் திறமையற்றவர் என, சென்னை, போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து, ஓய்வு பெற்ற, டி.ஜி.பி., ஜார்ஜ் குற்றம்சாட்டியிருந்தார். குட்கா ஊழல் குறித்து இவரிடமும், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
01-ஜூலை-202008:01:31 IST Report Abuse
Ramachandran Rajagopal எல்லாம் லஞ்ச வசூல் மன்னர்களாக இருந்துகொண்டு காவல் துறையை அடி ஆட்கள் துறையாக மாற்றிவிட்டதால் இந்த நாட்டில் நேர்மையானவர்கள் நசுக்கப்படுகின்றனர்.குற்றவாளிகள் சொகுசாக உல்லாசமாக வாழ்கின்றனர் வளம் வருகின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X