பொது செய்தி

தமிழ்நாடு

அத்திவரதர் வைபவம் ஓராண்டு நிறைவு

Added : ஜூன் 30, 2020
Share
Advertisement
 அத்திவரதர் வைபவம் ஓராண்டு நிறைவு

அத்திவரதர் வைபவம்காரணமாக, கடந்தாண்டு, பக்தர்கள் கூட்டத்தால் குலுங்கிய காஞ்சிபுரம், கொரோனா தொற்று ஊரடங்கால், இந்தாண்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

நாட்டின் பழமை வாய்ந்த, புராதன நகரங்களில் ஒன்றான காஞ்சிபுரம், கடந்தாண்டு இதே நாளில், விழாக்கோலம் பூண்டது. சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள, வரதராஜ பெருமாள் கோவிலில், ஜூலை, 1ம் தேதி, அத்திவரதர் வைபவம் துவங்கி, 48 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.கோவிலின் அனந்தசரஸ் குளத்தில் வீற்றிருந்த அத்திவரதர், 40 ஆண்டுகளுக்கு பின் வெளியே வந்ததால், நாட்டுக்கும், தங்களுக்கும் மகிழ்ச்சி கிடைக்கும் என, அவரை தரிசிக்க, வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

பக்தர்கள் வசதிக்காகவும், நிர்வாக காரணத்திற்காகவும் வழங்கப்பட்ட சிறப்பு தரிசன அனுமதி சீட்டை வைத்து, பக்தர்கள், அத்திவரதரை தரிசித்தனர்.வைபவம் துவங்கப்பட்ட, அடுத்தடுத்த நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால், காலை, 5:00 மணி முதல், மாலை, 5:00 மணி வரை வெளியூர் பக்தர்களுக்கும், மாலை, 5:00 மணிக்கு மேல் உள்ளூர் பக்தர்களுக்கும், சிறப்பு தரிசனத்திற்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.எனினும், இந்த தரிசன முறையில் எழுந்த குளறுபடியால், கடும் நெரிசல் ஏற்பட்டு, சிலர் இறந்தனர்; பலர் காயமடைந்தனர். கூட்டம் அதிகரித்ததால், 7,000 போலீசார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

ஜூலை, 31 வரை, சயன கோலத்தில் வீற்றிருந்த அத்திவரதர், ஆகஸ்ட், 1ம் தேதிக்கு பின், நின்ற கோலத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து, 17ம் தேதி, அனந்தசரஸ் குளத்தில், மீண்டும் ஸ்தாபிக்கப்பட்டார்.அத்திவரதர் வைபவம் நினைவாக, மாவட்டத்தின், 13 ஒன்றியங்களில், 204 இடங்களில், 40 ஆயிரம் அத்தி மரக்கன்றுகள் நடப்பட்டன. மேலும், வைபவம் நினைவாக, கலெக்டர் அலுவலக வளாகத்தில், நினைவு மண்டபம் மற்றும் அத்தி மரம் நடப்பட்டது. இவை அனைத்தும், புகைப்படம், 'வீடியோ' மூலம் ஆவணம் செய்யப்பட்டு உள்ளது.

விழா குறித்து அறநிலையத் துறையினர் கூறுகையில், 'அத்தி வரதர் வைபவத்தை, 1.4 கோடி பக்தர்கள் கண்டு ரசித்தனர். அவர்கள் உண்டியல்களில் செலுத்திய காணிக்கை மூலம், 8 கோடி ரூபாய் கிடைத்தது' என்றனர். கடந்தாண்டு இதே நாளில், பக்தர்களால் குலுங்கிய காஞ்சிபுரத்தில், தற்போது பரவி வரும் கொரோனா தொற்று காரணமாக, வரதராஜ பெருமாள் கோவில் மட்டுமின்றி, பல இடங்களும் வெறிச்சோடி காணப்படுகின்றன.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X