பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ் அமைச்சர்கள் குழு முடிவெடுக்குமென தகவல்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு சான்றிதழ் அமைச்சர்கள் குழு முடிவெடுக்குமென தகவல்

Added : ஜூன் 30, 2020
Share

சென்னை; 'பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமான சான்றிதழ் வழங்குவது குறித்து, மூத்த அமைச்சர்கள் அடங்கிய குழு, கொள்கை முடிவெடுக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்து உள்ளது.

அகில பாரத பிராமணர் சங்கத் தலைவர், குளத்துமணி தாக்கல் செய்த மனு:பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்கி உள்ளது. இதனால், மத்திய அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்களில், இடஒதுக்கீட்டு பிரிவில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

இந்நிலையில், ஜூன், 4ல், வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து கலெக்டர்களுக்கும், ஒரு உத்தரவை பிறப்பித்து உள்ளார். அதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு, வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ் அளிக்க வேண்டாம் என, தெரிவித்துள்ளார்.அரசின் இந்த உத்தரவால், எங்கள் சங்க உறுப்பினர்கள், மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. வருவாய் நிர்வாக ஆணையரின் உத்தரவு, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது.எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோன்று, ரெட்டி நல சங்க நிர்வாகி, கிருபாகரன் என்பவரும் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் ஆர்.சுப்பையா, கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல், விஜய் நாராயண் வாதாடியதாவது:வருவாய் நிர்வாக ஆணையராக இருந்தவர், அரசிடம் ஆலோசிக்காமல், சான்றிதழ் வழங்கும்படி ஒரு சுற்றறிக்கையை பிறப்பித்தார்.

இதையடுத்து, தற்போதைய ஆணையர், அரசிடம் ஆலோசித்து, ஏற்கனவே பிறப்பித்த சுற்றறிக்கையை வாபஸ் பெற்றார்.இந்த விஷயத்தில் கொள்கை முடிவெடுக்க, மூத்த அமைச்சர்கள் குழு முன், இப்பிரச்னை உள்ளது. அமைச்சர்கள் குழு எடுக்கும் முடிவை, வரும், 13ம் தேதி நீதிமன்றத்தில் தெரிவிக்கிறோம்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.இதையடுத்து, விசாரணையை, 13ம் தேதிக்கு, நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X