சென்னை; தமிழகத்தில், ஜூன் மாதத்தில் மட்டும், கொரோனாவால், 67 ஆயிரத்து, 834 பேர் பாதிக்கப்பட்டு, 1,028 பேர் இறந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு, ஓமன் நாட்டில் இருந்து வந்த காஞ்சிபுரத்தைச் சேர்ந்த நபரால், மார்ச், 7ம் தேதி கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.எனினும், கொரோனா படிப்படியாக அதிகரிக்க துவங்கியது. இதற்கிடையில், டில்லியில் நடந்த மத மாநாட்டில் பங்கேற்றவர்களால், மாநிலம் முழுதும் தொற்று அதிகரிக்க துவங்கியது.
வைரஸ் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வர, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும் என, எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாநகராட்சி, சுகாதாரத் துறை, சி.எம்.டி.ஏ., ஆகிய மூன்று துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படாததால், கோயம்பேடு தொற்று, மாநிலம் முழுதும் பரவியது. அதுவரை, 1,000த்துக்குள் இருந்த பாதிப்பு, 2,000 என்ற எண்ணிக்கையில் அதிகரிக்க துவங்கியது.இந்நிலையில், தமிழகத்தில், மார்ச், 7 முதல் நேற்று வரை, 90 ஆயிரத்து, 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், ஜூன் மாதத்தில் மட்டும், 67 ஆயிரத்து, 834 பேர் பாதிக்கப்பட்டு, கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டியுள்ளது.இதுவரை, 1,201 பேர் கொரோனாவால் இறந்துள்ள நிலையில், 1,028 பேர், ஜூனில் இறந்துள்ளனர். மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மட்டும், அதிகளவு தொற்று கண்டறியப்பட்டு வந்த நிலையில், மதுரை, வேலுார், திருவண்ணாமலை என, 15 மாவட்டங்களில் அதிகரிக்க துவங்கியுள்ளது.தற்போது, 4,000 என்ற எண்ணிக்கையில் தொற்று கண்டறியப்படுவதால், கொரோனாவை கட்டுப்படுத்துவது, சுகாதாரத் துறைக்கு புதிய சவாலை ஏற்படுத்தி உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE