சென்னை; போலீசாரின் மனிதாபிமான உணர்வை மீட்டெடுக்க கோரி, வணிகர் சங்க பேரமைப்பினர், போலீஸ் நிலையங்களில் மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து, வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர், விக்கிரமராஜா விடுத்துள்ள அறிக்கை:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், போலீசாரின் அத்துமீறலால் கொலையுண்ட ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது, துரிதமாக கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்; பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு, விரைந்து நீதி கிடைக்க வேண்டும். இதுபோன்ற அசம்பாவிதங்கள், இனி, எப்போதும் நடக்கக்கூடாது எனவும், போலீசாரின் மனிதாபிமான உணர்வை மீட்டெடுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த, பேரமைப்பின் நிர்வாகிகள் சார்பில், அனைத்து போலீஸ் நிலையங்களிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கால், 'சீல்' வைக்கப்பட்ட கடைகள், அபராத விதிகளால் பாதிக்கப்பட்ட வணிகர்களுக்கும், நியாயம் கிடைக்க தொடர்ந்து வலியுறுத்தப்படும்.ஊரடங்கு மட்டுமே, தொற்றை குணப்படுத்த முடியாது என, நிபுணர் குழுவின் அறிக்கையை அடிப்படையாக வைத்து, முதல்வர் ஊரடங்கை முடிவுக்கு கொண்டு வந்து, முழு சுதந்திரத்துடன் வணிகம் இயங்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்
வணிகர்கள், போலீசார், டாக்டர்கள், செவிலியர்கள் என, அனைவரின் மன அழுத்தம் மற்றும் துயர் துடைத்திட உடனடி நடவடிக்கை அவசியம்.வணிகர்கள் வாழ்வாதாரம், பொது மக்கள் இயல்பு வாழ்க்கை, அரசின் வரி வருவாய் அனைத்திற்கும் உடனடி தீர்வு, ஊரடங்கு நீக்கமும், சமூக பாதுகாப்பு மட்டுமே என்பதை கவனத்தில் கொண்டு, அரசு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE