கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சாத்தான்குளம் விவகாரத்தில் ஐகோர்ட் உத்தரவு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (51)
Share
Advertisement
மதுரை : சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில், தந்தை, மகன் இறந்த வழக்கில், உயர் நீதிமன்றம், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், நேற்றும் தொடர்ந்து விசாரணை நடத்தியது. இதன் முடிவில், 'விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லாததாலும் ஆவணங்களை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாலும், உடனடியாக, நெல்லை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., விசாரணையை துவங்க
court news, Sathankulam case, Jayaraj, Bennix, Kovilpatti, custodial death, சாத்தான்குளம் விவகாரம், ஐகோர்ட் உத்தரவு

மதுரை : சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில், தந்தை, மகன் இறந்த வழக்கில், உயர் நீதிமன்றம், தொடர்ந்து அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல், நேற்றும் தொடர்ந்து விசாரணை நடத்தியது.

இதன் முடிவில், 'விசாரணைக்கு போலீஸ் ஒத்துழைப்பு இல்லாததாலும் ஆவணங்களை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாலும், உடனடியாக, நெல்லை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., விசாரணையை துவங்க வேண்டும்' என உத்தரவிட்டது. இதன்படி, நேற்று மாலையே, சி.பி.சி.ஐ.டி., விசாரணை துவங்கியது.துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர், ஜெயராஜ், 63, மரக்கடை நடத்தினார். இவரது மகன் பெனிக்ஸ், 31, அலைபேசி கடை நடத்தினார்.
வழிகாட்டுதல்ஜூன், 19 இரவு, 9:00 மணிக்கு ரோந்து வந்த உள்ளூர் போலீசார், ஊரடங்கு காலத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து, கடையை திறந்து வைத்திருப்பதாகக் கூறி, கடைகளை மூடுமாறு கூறினர்.இரு தரப்பிலும் வாக்குவாதம் ஏற்பட்டது. தந்தை, மகன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, கொடூரமாக தாக்கப்பட்டனர். இருவர் மீதும் வழக்கு பதியப்பட்டு, கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.ஜூன், 22ல் பெனிக்ஸ், மறுநாள் ஜெயராஜ் இறந்தனர். சம்பவம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அமர்வு, தானாக முன்வந்து பொதுநல வழக்காக விசாரித்தது.நேற்று முன்தினம், அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராகி, 'வழக்கு விசாரணையை, சி.பி.ஐ.,க்கு மாற்ற, அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு அனுமதி தேவை' என்றார்.நீதிபதிகள் உத்தரவு:சி.பி.ஐ.,க்கு மாற்ற அரசாணை பிறப்பிக்கும் முன், கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை, சம்பந்தப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டும். அதன்படி, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் விசாரணை அறிக்கையை, 'சீல்' வைத்த உறை மூலம், இந்நீதிமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.அசல் ஆவணங்களை பாதுகாத்து, சி.பி.ஐ., விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். சம்பவம் தொடர்பாக, கோவில்பட்டி கிழக்கு போலீசில் பதிவான வழக்கு நாட்குறிப்பு ஆவணங்களை, துாத்துக்குடி தலைமை நீதித்துறை நடுவரின் பாதுகாப்பில் வைக்க, கோவில்பட்டி, டி.எஸ்.பி., அனுப்ப வேண்டும்.
நடவடிக்கைசாத்தான்குளம் போலீசில் பதிவான வழக்கு நாட்குறிப்பு மற்றும் இதர ஆவணங்களை, தலைமை நீதித்துறை நடுவரிடம், துாத்துக்குடி, எஸ்.பி., ஒப்படைக்க வேண்டும். பின், அனைத்து ஆவணங்களையும், சி.பி.ஐ., விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.வருவாய்த் துறை அலுவலர்களை நியமித்து, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் உள்ள ஆதாரங்களை, தடய அறிவியல் உதவி இயக்குனர் மூலம், கோவில்பட்டி மாஜிஸ்திரேட் உதவியுடன் சேகரித்து பாதுகாத்து வைக்க, உடனடியாக துாத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவு பிறப்பித்து, நேற்றைக்கு ஒத்தி வைத்தனர்.

நேற்று, நீதிபதிகள், பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி அமர்வு விசாரித்தது. நெல்லை டி.ஐ.ஜி., பிரவீன்குமார் அபினபு, துாத்துக்குடி, எஸ்.பி., அருண் பாலகோபாலன் ஆஜராகினர். வழக்கு விசாரணை, சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது குறித்த அரசாணை, அரசு தரப்பில் சமர்ப்பிக்கப்பட்டது.நீதிபதிகள்: மாநில போலீசாரின் மீது நம்பிக்கை உள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இதை, மக்கள் தீவிரமாக கண்காணிக்கின்றனர்.
கோவில்பட்டி மாஜிஸ்திரேட் அறிக்கையில், 'சாத்தான்குளத்தில், ஏட்டு ரேவதியிடம் சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. அவர் மிகுந்த பயத்துடன் இருந்தார். தான் உண்மைகளை சாட்சியாக சொல்வதை வெளியில் கூற வேண்டாம் என தெரிவித்தார்' என குறிப்பிடப்பட்டுள்ளது.இவர்களை நாம் பாதுகாக்க வேண்டும். சி.பி.ஐ., யிடம் ஒப்படைப்பதற்கு முன், நெல்லை டி.ஐ.ஜி., அல்லது சி.பி.சி.ஐ.டி.,யிடம் இடைக்காலமாக விசாரணையை ஒப்படைக்கலாமா என, கூடுதல் தலைமை வழக்கறிஞர், அரசிடம் கேட்டு தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு கூறி, சிறிது நேரம் ஒத்தி வைத்தனர். அரசுத் தரப்பில், 'டி.ஐ.ஜி.,யை விசாரணை அதிகாரியாக நியமிக்கலாம்' என தெரிவிக்கப்பட்டது.


இதை நிராகரித்த, நீதிபதிகள் உத்தரவு:ரேவதியின் வாக்குமூலம் அடிப்படையில், மாஜிஸ்திரேட் தாக்கல் செய்த அறிக்கையின்படி, மரணம் குறித்து, கொலை வழக்கிற்குரிய பிரிவில், வழக்கை மாற்றி பதிவு செய்வதற்கான முகாந்திரம் இருப்பதாகவும், தடயங்களை மறைக்க முயன்றுள்ளதும் தெரிய வந்துள்ளது.சி.பி.ஐ.,க்கு நெல்லை, துாத்துக்குடியில் அலுவலகம் இல்லை. ஊழல் மற்றும் 'ஒயிட் காலர்' குற்றங்கள் தொடர்பாக தான், சி.பி.ஐ.,விசாரிக்கும்.தற்போதைய ஊரடங்கு காலத்தில், சி.பி.ஐ., அதிகாரிகள் அங்கு சென்று, உதவிக்கு ஆட்களை நியமித்து விசாரணை மேற்கொள்வது சாத்தியமா என கேள்வி எழுகிறது. உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில் ஆஜராக, சிறப்பு வழக்கறிஞர்கூட இல்லை.டி.ஐ.ஜி., மூன்று மாவட்டங்களில், சட்டம் - ஒழுங்கை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. தற்போதைய சூழலில், அவர் விசாரணை மேற்கொள்ள வாய்ப்பில்லை.

எனவே, நெல்லை சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., அனில்குமார், விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார்.அவரிடம், வழக்கு ஆவணங்களை, சம்பந்தப்பட்டவர்கள் ஒப்படைக்க வேண்டும். அனில்குமாரின் விசாரணையானது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் கண்ணீரை துடைக்கும் வகையில் இருக்க வேண்டும். அனில்குமாரின் விசாரணை, மாநில அரசுக்கு திருப்தி அளிக்கும் வகையில் இருந்தால், அதை தொடரலாம்.

இல்லையெனில், சி.பி.ஐ.,க்கு மாற்றலாமா என்பது குறித்து, அரசே முடிவு செய்து கொள்ளலாம்.ரேவதியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிக்க, துாத்துக்குடி கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்நீதிமன்றம் நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவை ஏற்று, வருவாய்த் துறை அலுவலர்களை நியமித்து, சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில் ஆதாரங்களை சேகரிக்க நடவடிக்கை எடுத்த, துாத்துக்குடி கலெக்டரை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது.விசாரணை ஜூலை, 2க்கு ஒத்தி வைக்கப்படுகிறது.இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.உயர் நீதிமன்ற கிளை உத்தரவையடுத்து, சி.பி.சி.ஐ.டி., - டி.எஸ்.பி., அனில்குமார், டி.ஐ.ஜி., பிரவீன் குமார் அபினபுவிடம், சாத்தான்குளம் வழக்கு தொடர்பான ஆவணங்களை பெற்று, நேற்று மாலையே விசாரணையை துவக்கினார்.
தடயங்கள் சேகரிப்புசமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்துார்ராஜன் தலைமையில், துணை தாசில்தார் சுவாமிநாதன் உள்ளிட்ட வருவாய்த் துறையினர், நேற்று சாத்தான்குளம் போலீஸ் ஸ்டேஷனில், ஆவண பாதுகாப்பு பணிகளை துவக்கினர்.திருநெல்வேலி தடயவியல் பிரிவு துணை இயக்குனர் விஜயலதா, உதவி இயக்குனர் கலா லட்சுமி ஆகியோர், குழுவினருடன் வந்து, சாத்தான்குளம் ஸ்டேஷனில் ஆய்வு செய்தனர். அறை, மேஜையில் படித்திருந்த ரத்தக்கறை, லத்திகள் போன்றவற்றில் இருந்து தடயங்களை சேகரித்தனர்.


அதிகாரிகள் மாற்றம்துாத்துக்குடி, எஸ்,பி., அருண் பாலகோபாலன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு, புதிய, எஸ்,பி.,யாக ஜெயகுமார் நியமிக்கப்பட்டார். தென்மண்டல, ஐ.ஜி., சண்முக ராஜேஸ்வரன் நேற்று ஓய்வு பெற்றதால், பொருளாதார குற்றப்பிரிவு, ஐ.ஜி., முருகன் தென்மண்டல, ஐ.ஜி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார்.


விடிய விடிய தாக்கினர்: ஏட்டு ரேவதி வாக்குமூலம்சாத்தான்குளம் சம்பவத்தை விசாரித்த, கோவில்பட்டி மாஜிஸ்திரேட் பாரதிதாசன், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பதிவாளருக்கு அனுப்பிய அறிக்கை:சாத்தான்குளம் ஸ்டேஷனுக்கு, ஜூன், 28ல் சென்றேன். அங்கு, கூடுதல் எஸ்.பி., குமார், டி.எஸ்.பி., பிரதாபன் இருந்தனர். அவர்கள் எவ்வித வரவேற்பு அறிகுறியும் இன்றி, ஒருமுறை கூட வணக்கம் செலுத்தாமல், அலட்சிய மனப்பான்மையுடன் இருந்தனர்.
அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். பதிவுகளை சேமிக்க, கம்ப்யூட்டரில் போதிய வசதிகள் செய்யப்படவில்லை. தினமும் தானாக அழிந்து போகும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஜூன், 19ல் நடந்த சம்பவம் பற்றிய எவ்வித பதிவுகளும் இல்லை. அவை அழிக்கப்பட்ட நிலையில் இருந்தன. சம்பவ இடத்தை பார்வையிட்டு, அனைத்தும் வீடியோ பதிவு செய்யப்பட்டது.போலீஸ்காரர் மகாராஜனின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. அவர், சரியாக பதில் அளிக்க முன்வரவில்லை. சம்பவ இடத்தில், சாட்சியாக இருந்த ஏட்டு ரேவதியிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.அவர் மிகுந்த பயத்துடன், 'உண்மைகள் அனைத்தையும், சாட்சியாக சொல்வதை வெளியில் சொல்ல வேண்டாம். நான் சாட்சியம் அளிப்பதை வெளியில் உள்ளவர்கள் கேட்டுக் கொண்டிருப்பர்' என்றார்.

அப்போது, காவல் துறையினர், ஸ்டேஷன் வேப்ப மரத்தின் கீழ் கூட்டம் சேர்த்து, நீதிமன்ற ஊழியர்களை கிண்டல் செய்தனர். இதனால், சாட்சியம் பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டது.சாட்சியம் அளித்தால் தனக்கு மிரட்டல் வரும் என்ற பயம், பதற்றத்துடன் ரேவதி காணப்பட்டார். அவரது வாக்குமூலத்தில், 'கைதிகள் இருவரையும், அங்கிருந்த போலீசார் விடிய விடிய லத்தியால் தாக்கினர். அதில் லத்தி மற்றும் டேபிளில் ரத்தக்கறை படிந்துள்ளது. அவற்றை அவர்கள் அழிக்க நேரிடும். அவற்றை உடனடியாக கைப்பற்ற வேண்டும்' என்றார்.

லத்திகளை கொடுக்குமாறு போலீசாரிடம் கேட்ட போது, அவர்கள் காதில் ஏதும் விழாதது போல் இருந்தனர். கட்டாயப்படுத்தியதை அடுத்து, அனைவரும் லத்தியை ஒப்படைத்தனர்.போலீஸ்காரர் மகராஜன், என்னை பார்த்து, ஆட்சேபகரமாக கருத்து தெரிவித்தார். அசாதாரண சூழலை உருவாக்கினார். அவர், லத்தி சொந்த ஊரில் உள்ளது, பின் போலீஸ் குடியிருப்பில் உள்ளது என்றவாறு, விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து, ஒருமையில் பேசினார்.

பின், 'லத்தியே எனக்கு இல்லை' என்றார்.ஒரு போலீஸ்காரரிடம் லத்தியை கேட்டபோது, எகிறி குதித்து தப்பி ஓடினார். இவை அனைத்தையும், அங்கிருந்த போலீசார் வீடியோ எடுத்தனர். சூழல் சரியில்லாததால் நாங்கள் புறப்படும்போது, சாட்சியம் அளித்த ரேவதி கையெழுத்திட மறுத்தார். அவரது பாதுகாப்பு குறித்து உறுதியளித்த பின், வாக்குமூலத்தில் கையெழுத்திட்டார். அங்கு, நிலைமை பாதுகாப்பாக இல்லாததாலும், போலீசார் சூழ்ந்து நின்று, நிகழ்வுகளை அலைபேசிகளில் பதிவு செய்தபடியும், நீதிமன்ற ஊழியர்களை மிரட்டியபடியும் இருந்ததால், அங்கிருந்து புறப்பட்டோம்.இவ்வாறு, மாஜிஸ்திரேட் குறிப்பிட்டுள்ளார்.Advertisement
வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.krishnan -  ( Posted via: Dinamalar Android App )
01-ஜூலை-202020:48:00 IST Report Abuse
s.krishnan ellam sari. police station moodiruvom
Rate this:
Cancel
SIVA G india - chennai,இந்தியா
01-ஜூலை-202019:55:21 IST Report Abuse
SIVA G  india 1 சட்டத்தை மதித்திருந்தால் இவர்கள் இருவர் உயிர் தப்பி இருக்கும் பாதிப்பு யாருக்கு .அவர்கள் குடும்பத்துற்கு மட்டுமே ஆதாயம் அரசியல்வாதிகளுக்கு .கடந்த 40 வருட காலங்களில் எத்தனயோ மரணங்கள் நிகழ்ந்த போது கட்சிகளால் கொடுக்கா நிதி இந்த அளவு கொடுக்க படவில்லை .அதிபட்சம் 2 லடசம் வரை 2).தேசத்திற்காக உயிர் இழந்தோ படு கொலை செய்யபட்ட ராணுவத்திற்ருக்கோ, காவலருக்கோ நேரில் சென்று இரங்கல் கொரானா இல்லாத காலத்தில் தெரிவித்தார்களா இந்த அரசியல்வாதிகள். 3) இவர்கள் ரணமான மரணம் மிகவும் வருத்தம் அளிக்க கூடியதே. ஒரு வேளை இவர்களை கடைகாரர் போலவோ, இ பாஸ் இல்லாமல் பணத்தை பெற்றுகொண்டு அனுப்பும் காவலர்களாலோ நோய் தொற்றில் நம் போன்ற குடும்ங்களில் பாதிப்பு வந்து ,காரணம் இவர்கள்தான் என தெரியவந்தால் எந்த அளவுக்கு இவர்கள் மேல் உங்களுக்கு கோபம் வரும் எனபது உங்களுக்கே தெரியும் 4 ) காவலர்களில் மனிதாபிமானம் உள்ளவர்கள் குறைவு பேராசை பிடித்தவர்களும் ,உணர்ச்சிவசபடகூடியவர்கள் ஆதிகம். அவர்களின் பணிசுமையும் மேலிட அழுத்தங்களும், விதண்டாவாதம் செய்யும் பொது மக்கள் மீது திரும்புகிறது.[பல வீடுகளில் அநியாமா ஆதிக்கம் செய்பவர்கள் ஷெல்மேட் இல்லையெண்றால் பம்முவர்கள் அல்லது அவரகளுக்கு தெரியாமல் ஓடிவிடுவர்கள் ] 5) கொரானா காலத்தில் ஆக்சிஜன் குடும்பத்தை காக்க துடிப்பவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் எங்களை வயது முதிர்தவர்களை காக்க வேண்டாம், முதியவர்கள் நாம் வாழ வேண்டியவர்களுக்கு உயிர் தியாகம் செய்வோம் என வாசகர் கருத்தில் ஒரு மாதம் முனபு பதிவிட்டுள்ளேன். 6) இறந்த பிணங்களுக்கு அருகில் உறவினர் செல்லாத போது மற்றவர்கள உயிர் பயத்தில் வீசி செல்கிறார்கள் இறந்த பின் என்னை வீசி சென்றாலும் தவறு இல்லை எனபேன்[கொரோனாவில் இறந்த முதியவர் உடலை ஜெ.சி.பி.யில் எடுத்துச்சென்ற கொடூரம்...பிணத்தை வைத்து அரசியல் செய்யாமல் ,இறந்த பின் பிணத்தை தொற்று இல்லாமல் எப்படி அடக்கமோ,எரியூட்டினாலும் தவறு இல்லை என்னையும் சேர்த்துதான். வாழ வேண்டியவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்]
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
01-ஜூலை-202017:03:58 IST Report Abuse
Srinivas.... அப்பாவிகள் அடித்துக்கொல்லப்பட்ட அன்றே அது சாதாரண இறப்பு என்று தனது அறிக்கையில் சொல்லிவிட்டார். அது போதாதா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X