நவம்பர் வரை நாடு முழுதும் இலவச ரேஷன் பொருட்கள்:புதிய அறிவிப்பு

Updated : ஜூன் 30, 2020 | Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி : ''நாடு முழுதும் உள்ள, 80 கோடி ஏழை மக்களுக்கு, பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், ரேஷனில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொருவருக்கும், 5 கிலோ அரிசி வழங்கப்படும். அத்துடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும், நவம்பர் மாதம் வரை, 1 கிலோ கடலைப் பருப்பு இலவசமாக வழங்கப்படும்,'' என, பிரதமர் மோடி
food grains, ration, ration card, modi government, pm modi,
நவம்பர் ,நாடு முழுதும் இலவச ரேஷன் பொருட்கள்

புதுடில்லி : ''நாடு முழுதும் உள்ள, 80 கோடி ஏழை மக்களுக்கு, பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், ரேஷனில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டம், நவம்பர் வரை நீட்டிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொருவருக்கும், 5 கிலோ அரிசி வழங்கப்படும். அத்துடன், ஒவ்வொரு குடும்பத்துக்கும், நவம்பர் மாதம் வரை, 1 கிலோ கடலைப் பருப்பு இலவசமாக வழங்கப்படும்,'' என, பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த, நாடு முழுதும், மார்ச், 25ல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின், ஏப்ரல், 14ல் ஊரடங்கு, மே, 3 வரை நீட்டிக்கப்பட்டது. அடுத்து, பல தளர்வுகளுடன் ஊரடங்கு, மே, 18 வரையும், பின், மே, 31 வரையும், தொடர்ந்து, ஜூன், 30 வரையும் நீட்டிக்கப்பட்டது.


ஊரடங்குஇதை முதல் கட்ட ஊரடங்கு தளர்வு என அறிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், ஜூலை, 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக, நேற்று முன்தினம் தெரிவித்தது. இதற்கான, வழிகாட்டு நெறிமுறைகளையும், மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்தது. இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வுகள், இன்று துவங்க உள்ளன. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, 'டிவி' சேனல்கள் வழியாக, நாட்டு மக்களிடம் நேற்று பேசினார். அவர் கூறியதாவது:கொரோனா வைரசுக்கு எதிரான போரில், நாம், இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வு விதிமுறைக்குள் நுழைய உள்ளோம். இப்போது, பருவமழையும் துவங்கி விட்டது. இனி, சளி, இருமல், காய்ச்சல் ஆகியவையும், நம்மை தாக்க உள்ளன. இதனால், நாம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.


கொரோனாவின் இறப்பு விகிதம், மற்ற நாடுகளை விட, இந்தியாவில் குறைவாகவே உள்ளது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது.முதல் கட்ட ஊரடங்கு தளர்வுகளின் போது, பல பகுதிகளில், அவற்றை மக்கள் முறையாக கடைப்பிடிக்கவில்லை. சிலர் அலட்சியமாக நடந்து கொண்டனர். இது மிகவும் கவலையளிக்கிறது. முக கவசம் அணிதல், சமூக விலகல் மற்றும் 20 வினாடிகளுக்கு கைகளைக் கழுவுதல் ஆகியவற்றில் முன்பு, நாம் மிகவும் கவனமாக இருந்தோம். ஆனால், இப்போது இன்னும் கவனமாக இருக்க வேண்டிய நேரத்தில், அதிகரிக்கும் அலட்சியம் வருத்தமளிக்கிறது.


எச்சரிக்கைசிறிய அலட்சியம் கூட, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தி விடும் என்பதை நாம் உணர வேண்டும். அதனால், இரண்டாம் கட்ட ஊரடங்கு தளர்வில், அரசு அதிகாரிகள், மக்கள், விழிப்புடன் இருக்க வேண்டியது மிகவும் அவசியம்.ஊரடங்கு விதிகளை மீறி செயல்படுபவர்களை, மக்கள் அடையாளம் காண வேண்டியது அவசியம்.தளர்வுகள் அற்ற ஊரடங்கின் போது, விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டன. அரசுகள், உள்ளாட்சி அமைப்புகள், மக்கள் ஆகியோர், அதே எச்சரிக்கை உணர்வை, இப்போதும் வெளிப்படுத்த வேண்டும். குறிப்பாக, கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில், நாம் கவனம் செலுத்த வேண்டும். விதிகளை பின்பற்றாதவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, எச்சரிக்கப்பட வேண்டும்.பொது இடத்தில் முக கவசம் அணியாததற்காக, ஒரு நாட்டின் பிரதமருக்கு, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட செய்தியை நாம் அறிவோம். இந்தியாவிலும், உள்ளாட்சி நிர்வாகம், இதே உத்வேகத்துடன் பணிபுரிய வேண்டும். ஏனென்றால், இது, 130 கோடி மக்களின் உயிர்களை காப்பாற்றும் நடவடிக்கையாகும்.ஊராட்சி தலைவரோ, பிரதமரோ, யாராக இருந்தாலும், நாட்டின் சட்டத்தை விட, மேலானவர் யாரும் இல்லை.


ரூ.75 ஆயிரம் கோடியாரும் பசியோடு இருக்கக்கூடாது என்பதை உறுதி செய்வது தான், ஊரடங்கின் போது, உச்சக்கட்ட முன்னுரிமையாக இருந்தது. யாரும் பசியுடன், துாங்கக் கூடாது என்பதை உறுதி செய்ய, மத்திய அரசு, மாநில அரசுகள், குடிமை சமூகம் ஆகியவை, தங்களால் முடிந்தவற்றை செய்தன.
தேசமாக இருந்தாலும், தனிநபராக இருந்தாலும், சரியான நேரத்தில் எடுக்கப்படும் அறிவுப்பூர்வமான முடிவுகள், எந்த நெருக்கடியையும் எதிர்த்து போரிடுவதற்கான சக்தியை அதிகரிக்கின்றன. அந்த வகையில், ஊரடங்கு அறிவிக்கப்பட்டவுடன், பிரதமரின் ஏழைகள் நல திட்டத்தின் கீழ், 1 லட்சத்து, 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டன.கடந்த மூன்று மாதங்களில், 20 கோடி ஏழை குடும்பங்களுக்கு, நேரடி பண உதவியாக, 31 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், 18 ஆயிரம் கோடி ரூபாய், விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கிராமப் பகுதிகளில் உள்ள தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க, பிரதமரின் ஏழைகள் வேலைவாய்ப்பு திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு, 50 ஆயிரம் கோடி ரூபாய் செலவிடப்பட உள்ளது. அதே நேரத்தில், ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்படுத்திய மற்றுமொரு பெரிய விஷயமும் உள்ளது. நாட்டில், 80 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு, கடந்த மூன்று மாதங்களாக, ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன.

குடும்பத்தின் ஒவ்வொரு நபருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி இலவசமாக வழங்கப்பட்டது.அமெரிக்காவின் மக்கள் தொகையை விட, 2.5 மடங்கு அதிகமான, இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட, 12 மடங்கு அதிகமான, ஐரோப்பிய யூனியனின் மக்கள் தொகையை விட, இரண்டு மடங்கு அதிகமான இந்திய மக்களுக்கு, மத்திய அரசு, இலவசமாக ரேஷன் பொருட்களை வழங்கியது.இது தொடர்பான ஒரு பெரிய அறிவிப்பை இப்போது வெளியிடுகிறேன். ஜூலை மாதம், பண்டிகைகளின் துவக்க காலமாக அமைந்துள்ளது.

வரும், 5ம் தேதி, குரு பூர்ணிமா கொண்டாடப்பட உள்ளது. அதன் பின், ரக் ஷா பந்தன், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, ஓணம் ஆகிய பண்டிகைகள் வர உள்ளன.அதை தொடர்ந்து, நவராத்திரி, துர்கா பூஜை, தீபாவளி, சாத் பூஜை கொண்டாடப்பட உள்ளன. இந்த பண்டிகைகள், மக்களின் தேவைகளையும், செலவுகளையும் அதிகரிக்கச் செய்கின்றன.இவற்றையெல்லாம் மனதில் கொண்டு, பிரதமர் ஏழைகள் நல உதவி திட்டத்தை, நவம்பர் மாத இறுதி வரையில் நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதாவது, 80 கோடி மக்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்கும் இந்த திட்டம், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர், நவம்பர் ஆகிய மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளது. 80 கோடி ஏழை சகோதர - சகோதரிகளுக்கு, அரசு, ஐந்து மாதங்களுக்கு இலவச உணவுப் பொருட்களை வழங்க உள்ளது.


'ஒரே நாடு; ஒரு ரேஷன் அட்டை'குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி வழங்கப்படும். கூடுதலாக ஒவ்வொரு மாதமும், ஒரு குடும்பத்துக்கு, 1 கிலோ கடலை பருப்பு இலவசமாக வழங்கப்படும்.நீட்டிக்கப்படும் இந்த, 'பிரதமர் ஏழைகள் நல உதவி திட்ட'த்திற்கு, 90 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. கடந்த மூன்று மாதங்களாக, இந்த திட்டத்திற்காக செலவழிக்கப்பட்டு வந்த தொகையுடன் சேர்த்து, மொத்தம், 1.5 லட்சம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட உள்ளது. நாம், நாடு முழுவதற்குமான ஒரு கனவை கண்டு வருகிறோம். அதில், சில மாநிலங்கள் மிகச் சிறப்பாக பணிபுரிந்துள்ளன. பிற மாநிலங்களிலும் இதை முன்னெடுத்துச் செல்ல, நாம் கோரிக்கை விடுத்துள்ளோம்.அது என்னவாக இருக்கும் என, நீங்கள் வியப்படையலாம். அது, 'ஒரே நாடு; ஒரு ரேஷன் அட்டை' என்ற கோரிக்கையாகும்.

இந்தத் திட்டத்தையும் அமல்படுத்த, மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.வேலை தேடி, வெளி மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள், இந்த திட்டத்தின் மூலம் பெருமளவு பயனடைவர்.தேவைப்படுவோருக்கும், ஏழை மக்களுக்கும், இலவச உணவுப் பொருட்களை, அரசால் வழங்க முடிகிறது என்றால், அதற்கு இரண்டு தரப்பினர் முக்கிய காரணமாக உள்ளனர். முதலாவது, கடுமையாக உழைக்கும் நம் விவசாயிகள்; இரண்டாவது, நேர்மையான முறையில் வரி செலுத்தும் மக்கள். இவர்கள் தான், அரசின் இந்த முயற்சிக்கு காரணமாக விளங்குகின்றனர்.
அவர்களின் கடுமையான உழைப்பும், அர்ப்பணிப்பு உணர்வும் தான், இந்த அரிய செயலை செய்ய உதவியுள்ளன. தேசத்தின் உணவுப் பொருள் கிட்டங்கிகளை, விவசாயிகள், தங்களின் கடுமையான உழைப்பால் நிறைத்து வைத்துள்ளனர்.அதனால் ஏழை மக்கள், பணியாளர்கள் ஆகியோரது சமையலறைகளில், உணவு கிடைக்க ஏதுவாகி உள்ளது.

நேர்மையான முறையில் வரி செலுத்தியதன் காரணமாக, இந்த நாட்டிற்கான கடமையை, மக்கள் சரியாக நிறைவேற்றியுள்ளனர். அதனால் தான், இந்த நாட்டின் ஏழை மக்கள், மிகப் பெரும் இடர்ப்பாடுகளிலிருந்து, தங்களை தற்காத்துக் கொள்ள முடிகிறது.நாட்டின், ஏழை மக்களின் சார்பாக, வரி செலுத்துவோருக்கும், விவசாய பெருமக்களுக்கும், என் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு, நான் தலை வணங்குகிறேன்.வரும் காலங்களில், ஏழைகள், நலிவடைந்தோர் மற்றும் பின்தங்கிய பிரிவினருக்கு அதிகாரம் அளிக்கும் முயற்சிகளை, நாம் தொடர்ந்து மேற்கொள்வோம்.

தற்சார்பு இந்தியாவை படைப்பதற்காக, நாம் தங்கு தடையின்றி உழைப்போம். உள்ளூர் தயாரிப்பு பொருட்களுக்கு, நாம் குரல் கொடுப்பதையும் தொடர்வோம்.இந்த லட்சியத்துடனும், உறுதியுடனும், நாட்டின், 130 கோடி மக்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும். முன்னேற்றத்தை நோக்கி, நடைபயில வேண்டும்.
மக்கள் அனைவரும், ஆரோக்கியத்தோடு இருக்க வேண்டுமென இறைவனைப் பிரார்த்திக்கிறேன். மூன்றடி அடி துார சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும்; முக கவசம் அணிந்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும் என, மீண்டும் ஒரு முறை, மக்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். உங்களுக்காக வேண்டிக் கொள்கிறேன்; உங்களிடம் மன்றாடுகிறேன். தயவு செய்து அலட்சியமாக இருக்க வேண்டாம். இந்த கோரிக்கையோடு, உங்கள் அனைவருக்கும் என் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.


குறைந்த விலையில் தடுப்பூசி: மோடி வலியுறுத்தல்கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டால், அதை மக்களுக்கு அளிப்பதற்கான வழிமுறைகளை வகுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம், பிரதமர் மோடி தலைமையில், டில்லியில் நேற்று நடந்தது. இது தொடர்பாக, பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:
இந்தக் கூட்டத்தில், பிரதமர் மோடி, நான்கு முக்கிய அம்சங்களை முன் வைத்தார். முதலில், வைரசால் அதிகம் பாதிக்கப்படக் கூடிய அபாயம் உள்ளவர்களை அடையாளம் காண வேண்டும். உதாரணத்துக்கு, டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் உள்ளிட்டோர்.
அடுத்ததாக, எவருக்கும், எந்த இடத்திலும் இந்த மருந்து கிடைப்பதற்கான வழிமுறைகளை உருவாக்க வேண்டும். மூன்றாவதாக, அனைத்து தரப்பு மக்களும் வாங்கும் விலையில் இந்த தடுப்பூசி இருக்க வேண்டும். நான்காவது, தடுப்பூசி தயாரிப்பில் இருந்து, அது மக்களை சென்றடைவதை, தொழில்நுட்ப உதவியுடன் உறுதி செய்ய வேண்டும் என, பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, 'பாரத் பயோடெக்' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம், கொரோனாவுக்கு எதிரான முதல் தடுப்பூசியை தயாரித்துள்ளதாக அறிவித்து உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்துடன் இணைந்து தயாரித்துள்ள இந்த மருந்தை, மனிதர்களுக்கு அளித்து பரிசோதனை செய்வதற்கு, இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக, அந்த நிறுவனம் கூறியுள்ளது.


ஏழைகளிடம் அக்கறைநாட்டின், 80 கோடி மக்களுக்கு, நவம்பர் வரை, இலவச ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் நீட்டிக்கப்படுவதாக, பிரதமர் அறிவித்துள்ளார். இது, ஏழைகளின் நலனில் அவர் கொண்டுள்ள அக்கறையையும், அதற்காக செயல்படுவதையும் தான் காட்டுகிறது. இந்த நெருக்கடியான நேரத்தில், பிரதமர் மோடி, நாட்டை, தைரியத்துடனும், மக்களின் நலனில் அக்கறையுடனும், வழிநடத்தி செல்கிறார். கொரோனாவிலிருந்து பல லட்சம் உயிர்களை காப்பாற்றியதற்காக, பிரதமரை பாராட்ட வேண்டும்.ஜே.பி.நட்டாதேசிய தலைவர், பா.ஜ.,பட்டினியை தடுத்துள்ளார்நாட்டில் ஒருவர் கூட, பசியுடனும், பட்டினியுடனும் துாங்கக் கூடாது என்பதில், பிரதமர் உறுதியாக உள்ளார். பட்டினியால் ஏழைகள் பாதிக்கப்படுவதை தடுத்துள்ளார். அடுத்த ஐந்து மாதங்களில், 80 கோடி பேர், 25 கிலோ உணவுப் பொருட்களை இலவசமாக பெற உள்ளனர். வேறு எந்த நாட்டிலும், இது போன்ற உணவு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படவில்லை.பிரகாஷ் ஜாவடேகர்மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், பா.ஜ.,சிறப்பான அறிவிப்புநாட்டில், 80 கோடி ஏழை மக்களுக்கு, ரேஷனில்இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை, நவம்பர் மாதம் வரை நீட்டித்து, பிரதமர் அறிவித்துள்ளது மிகவும் சிறப்பானது. பிரதமருடன், 'வீடியோன கான்பரன்ஸ்' வழியாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசித்த போது, நான் விடுத்த கோரிக்கையை, பிரதமர் ஏற்றுக் கொண்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.உத்தவ் தாக்கரேமஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனாபிரதமர் மோடி உரையின் 'ஹைலட்ஸ்'* கொரோனா தடுப்பில் 'தளர்வுகள் 2.0' வுக்குள் நுழைகிறோம்.

* சரியான நேரத்தில் அமல்படுத்திய ஊரடங்கால், இறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தியதில் மற்ற நாடுகளை விட இந்தியா நல்ல நிலையில் உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

* முக கவசம் அணிவது, ஒருவருக்கொருவர் ஆறு அடி தள்ளி நிற்பது, அடிக்கடி கை கழுவுவதை கடைபிடிப்பது அவசியம்.

* அரசின் சட்ட திட்டங்களை மதிப்பது அவசியம்.

* நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

* பொது இடங்களில் முக கவசம் அணிவது அவசியம்.

* சாதாரண குடிமகன் முதல் பிரதமர் வரை சட்டத்துக்கு மேல் யாருமில்லை. சட்டத்தை மதிப்பது அவசியம். இது 130 கோடி மக்களுக்கும் பொருந்தும்.

* ஒவ்வொருவரும் சட்ட விதிமுறைகளை பின்பற்றுவதை உறுதிபடுத்த வேண்டும்.

* நாட்டில் யாரும் பட்டினியால் இருக்கக்கூடாது.

* ஊரடங்கு சமயத்தில் பிரதமரின் காரிப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ், 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. இது நவம்பர் வரை தொடரும்.

* ஒரே நாடு; ஒரே ரேஷன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

* 20 கோடி ஏழை குடும்பங்களின் வங்கி கணக்கில் ரூ. 31 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

* 9 கோடி விவசாயிகளுக்கு வங்கிக்கணக்கில் ரூ. 18 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
01-ஜூலை-202020:30:02 IST Report Abuse
g.s,rajan Sub standard groceries given at free of cost is definitely mere waste . g.s.rajan, Chennai.
Rate this:
Cancel
01-ஜூலை-202013:07:01 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் ஒரே ஒரு ஆள் மோடி அவருக்கு 2000 , ரேஷன் பொருள் இவர் கொடுத்தது தான் , இவர்க்கு இந்த மூன்று மாதத்திற்கு போதுமா கோபால் , இவர்க்கு பத்தாத பொது ஒரு குடும்பத்திற்கு எப்படி போதும் கோபால் சொல்லு
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
01-ஜூலை-202012:04:30 IST Report Abuse
Bhaskaran இன்று மயிலை பகுதி ரேஷன் கடைகளில் அரிசி மட்டும்விலையில்லை மற்றவற்றிற்கு பணம் வாங்கிவிரட்டார்கள் ஐயா
Rate this:
01-ஜூலை-202014:09:13 IST Report Abuse
ஸ்டாலின் ::அவர் ஏதோ நீ சந்தோசமா இருப்ப என்று சொல்லி சில பல ஆறுதல் வார்த்தைகள் சொன்னார் அதையே நீ நம்பி அவரிடம் "" AYYA என்று எல்லாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X