கவுஹாத்தி: 'கைகளில் வளையல்,நெற்றியில் பொட்டு வைக்க மறுத்த மனைவியை கணவன் விவாகரத்து செய்யலாம்' என, கவுஹாத்தி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


அசாமில், புது மணப் பெண் ஒருவர், கணவர் தனிக் குடித்தனம் வராத ஆத்திரத்தில், அவர்களின் குடும்பத்தார் சித்ரவதை செய்வதாக, போலீசில் புகார் அளித்துள்ளார்.
சித்ரவதை:
இதைத் தொடர்ந்து, கணவர், குடும்ப நீதிமன்றத்தில், விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:மனைவியுடன் ஒன்றரை ஆண்டுகள் வாழ்ந்தேன். தனிக் குடித்தன பிரச்னையால், ஐந்தாண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். வயதான என் தாயை பராமரிக்கிறேன். அவரை கைவிட்டு வருமாறு மனைவி கூறுகிறார். நான் மறுத்ததால், குடும்பத்தார் சித்ரவதை செய்ததாக பொய் புகார் அளித்துள்ளார்.
மேலும், ஹிந்து முறைப்படி, திருமணமான பெண்கள் அணியும், வளையல், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை, மனைவி உதறி விட்டார். இதில் இருந்து, அவருக்கு திருமண பந்தத்தில் விருப்பமில்லை என்பதை புரிந்து கொள்ளலாம். ஆகவே, விவகாரத்து வழங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை, குடும்ப நல நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, கணவர், கவுஹாத்தி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

விருப்பமில்லை:
இந்த மனுவை, நீதிபதி, அஜய் லம்பா தலைமையிலான அமர்வு விசாரித்து அளித்த தீர்ப்பு:வாதியின் மனைவி, கை வளையல்கள், நெற்றிப் பொட்டு ஆகியவற்றை அணியாமல் இருக்கிறார். இது, தான் திருமணமாகாதவர் என்பதை காட்டுவதற்காகவோ அல்லது கணவருடனான திருமண பந்தத்தை ஏற்கவில்லை என்பதை உணர்த்துவதற்காகவோ இருக்கலாம்.
இதில் இருந்து, அவருக்கு கணவருடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதை குடும்ப நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டது. மேலும், கணவரின் குடும்பத்தார் சித்ரவதை செய்ததற்கு ஆதாரம் இல்லை. இதுபோல ஆதாரமற்ற புகார்களை கணவர் மீது மனைவி கூறுவது, கிரிமினல் குற்றம் என, உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தெரிவித்துள்ளது. எனவே, வாதியின் கோரிக்கையை ஏற்று, விவாகரத்து வழங்கப்படுகிறது. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement