சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் போலீஸ் கமிஷனருக்கு, நோட்டீஸ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் போலீஸ் கமிஷனருக்கு, 'நோட்டீஸ்'

Added : ஜூன் 30, 2020
Share

கோவை; எஸ்.ஐ.,யால் சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, அறிக்கை தாக்கல் செய்ய, கோவை போலீஸ் கமிஷனருக்கு, மனித உரிமைகள் ஆணையம், 'நோட்டீஸ்' அனுப்பியுள்ளது.

கோவை, ரத்னபுரி, சாஸ்திரி வீதியில், ஒரு தம்பதி, தள்ளு வண்டியில் இரவு நேர டிபன் கடை நடத்தி வருகின்றனர். ஜூன், 19ம் தேதி இரவு, 8:00 மணிக்கு, ரத்னபுரி போலீஸ் எஸ்.ஐ., செல்லமணி மற்றும் போலீசார் ஜீப்பில் ரோந்து வந்தனர்.'இரவு, 8:00 மணிக்கு மேல், கடை நடத்தக் கூடாது என்றால், கேட்க மாட்டீர்களா' எனக் கூறிய, எஸ்.ஐ., செல்லமணி, தகாத வார்த்தை பயன்படுத்தி, ஒருமையில் திட்டினார்.

இதனால், வாக்குவாதம் ஏற்பட்டது.இதை, தம்பதியின், 16 வயது மகன், தன் மொபைல் போனில் வீடியோ எடுத்தார். இதை கவனித்த, எஸ்.ஐ., மொபைல் போனை பறித்து, பைக்கில் ஏறி புறப்பட்டார். உடனே அந்த சிறுவன், எஸ்.ஐ.,யின் பைக் சாவியை பிடுங்கினார். இதனால், இருவருக்கும், 'தள்ளுமுள்ளு' ஏற்பட்டது. சிறுவனை, எஸ்.ஐ., செல்லமணி தாக்கினார். இச்சம்பவத்தை சிலர், வீடியோவில் பதிவிட்டு, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.உயர் அதிகாரிகள் அறிவுரைப்படி, சிறுவனிடம் மன்னிப்பு கடிதம் பெறப்பட்டது. சிறுவனின் தந்தை மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.சிறுவன் தாக்கப்பட்ட விவகாரம், ஊடகங்களில் வெளியானது.

இதை கவனித்த, சென்னையிலுள்ள, மாநில மனித உரிமைகள் ஆணையம், 16 வயது சிறுவன் தாக்கப்பட்ட விவகாரத்தை, தாமாக முன்வந்து விசாரித்தது.இதையடுத்து, கோவை போலீஸ் கமிஷனருக்கு, மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், '16 வயது சிறுவன், போலீசாரால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, தாங்கள், இரண்டு வாரத்திற்குள், விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X