பொது செய்தி

இந்தியா

கொரோனா பேரிடரில் போரிடும் உங்களுக்கு சல்யூட் :இன்று டாக்டர்கள் தினம்

Added : ஜூன் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 கொரோனா பேரிடரில் போரிடும் உங்களுக்கு சல்யூட் :இன்று டாக்டர்கள் தினம்

மதுரை : 'தாண்டவமாடும் கொரோனாவை துரத்தியடிக்க குடும்பத்தோடு வீட்டில் இருங்கள். சமூக இடைவெளியை கடைபிடியுங்கள். சுய சுத்தம் பேணுங்கள்...' என்று அரசு அறிவுறுத்துகிறது. நம்மை நாமே காத்துக்கொள்ள நமக்காக அரசு வழங்கும் அறிவுரை இவை. எத்தனை பேர் கடைபிடிக்கிறோம்... எத்தனை பேர் வீட்டில் இருக்கிறோம்...

நம்மை காக்கவே இத்தனை அலட்சியம் காட்டுகிறோம். இன்னொரு புறம் பாருங்கள். கொரோனா நோயாளிகளுக்கு ஊடே கவச உடையணிந்து உலாவும் டாக்டர்கள். தொற்று தங்களை தாக்கும் என தெரியும். பல டாக்டர்களை தாக்கியும் இருக்கிறது. ஆனாலும் ஒருவர் கூட பின்வாங்காமல் தொற்றாளர்களை வைரஸிடம் இருந்து மீட்கும் சேவையை செய்கின்றனர். இவர்களால் வீட்டில் இருக்க முடியாது. வீட்டிற்கு சென்றாலும் குடும்பத்திடம் விலகி தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அத்தனை துயரும் நமக்காக அவர்கள் சந்திப்பவை.தேசிய டாக்டர்கள் தினமான இன்று, இப்பேரிடர் காலத்தில் நமக்காக போரிடும் போர்ப்படை தளபதிகளாய் ஜொலிக்கும் டாக்டர்களுக்கு ஒரு சல்யூட்.எத்தனையோ டாக்டர்கள் கொரோனாவிற்கு எதிரான களத்தில் உள்ளனர்.
அவர்களில் மனந்திறந்த சிலர்...


பத்து நாளில் குணப்படுத்துவோம்கொரோனா உலகத்தையே ஆட்டுவிக்கும் பெருந்தொற்று. இதை தடுத்து மக்களைக் காக்கும் தலையாய பணியில் டாக்டர்கள், நர்ஸ், சுகாதார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணிக்கு மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். குடும்பத்தை மறந்து அர்ப்பணிப்புடனும், தியாக மனப்பான்மையுடனும் இதில் ஈடுபட்டுள்ளோம். சில இடங்களில் டாக்டர்கள் இறக்க நேரிட்ட துயர சம்பவங்களும் நடந்துள்ளன. நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து அதன் மூலம் தொற்றுக்கு ஆளாகும் டாக்டர்கள் எண்ணிக்கையும் அதிகம். இந்த தொற்று விரைவில் நம்மை விட்டு போக வேண்டுமானால், வீட்டுத்தனிமையில் இருத்தல், கைகளை சுத்தமாக வைப்பது, முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது முக்கியம். இதை எவ்வளவு சரியாக கடைபிடிக்கிறோமோ, அவ்வளவு வேகமாக கொரோனா வைரஸை விரட்டி விடலாம். ஒரு வேளை நீங்கள் தொற்றுக்கு ஆளானாலும் பெரிதும் அச்சப்படத் தேவையில்லை. எளிதில் குணப்படுத்த நாங்கள் இருக்கிறோம். ஒத்துழைத்தால் 10 நாட்களில் குணப்படுத்தி விடுவோம். பாதிப்புகளை மட்டுமே கண்டு மனம் நோக வேண்டாம். குணமடைந்தோரின் விகிதத்தையும் பாருங்கள். டாக்டர்களின் தியாகத்திற்கு மதிப்பளியுங்கள்.- டாக்டர் சங்குமணிடீன், அரசு மருத்துவக் கல்லுாரி, மதுரை


டாக்டர் என்பதில் பெருமைநாங்கள் வைரஸ் நிரம்பிய வார்டில் பணி செய்கிறோம். எப்போது வேண்டுமானாலும் தொற்றால் பாதிக்கப்படலாம். குறிப்பிட்ட நாட்கள் தொடர்ச்சியாக பணி செய்துவிட்டு, சில நாட்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்கிறோம். அனைத்துவிதமான பாதுகாப்பு அம்சங்களை அணிந்திருந்தாலும், தொற்று வருவதற்கான வாய்ப்பு உள்ளது. மாநிலத்தில் இதுவரை நுாற்றுக்கணக்கான டாக்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 'பி.பி.இ., கிட்' அணிந்து பணிபுரிவதே பெரும் சிரமம். குறிப்பாக பெண் டாக்டர்கள் படும்பாடு சொல்லிமாளாது. பணி துவங்கியதில் இருந்து முடியும் வரை இயற்கை உபாதைகளை கழிக்க முடியாது. தண்ணீர் கூட அருந்த முடியாது. வியர்க்க, விறுவிறுக்க பணி செய்ய வேண்டும். பேசவோ, தும்மவோ கூட முடியாது. 95 மாஸ்க், சர்ஜிக்கல் மாஸ்க் என ஒரே சமயத்தில் இரண்டை அணிய வேண்டும். இதனால் மூச்சுவிடுவது கடினமாக இருக்கும். வீட்டிற்கு சென்றால் குழந்தைகளுடன் நெருக்கம் காட்ட முடியாது. தனிமையில் இருக்க வேண்டும். கொரோனாவை துரத்தியடிக்கும் வரை களத்தில் நிற்போம். குடும்பத்தை விட்டு விலகி சமூகத்திற்காக நாங்கள் உழைக்கிறோம். இந்த பேரிடரில் டாக்டராக பணிபுரிவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்.- டாக்டர் ஜெயலட்சுமிதேவி அரசு மருத்துவமனைசிவகங்கை


உயிரை காப்பாற்றுவது முதல் கடமைஉயிரை காப்பாற்றுவது முதல் கடமை என்பதால் அவசர சிகிச்சைக்கு வருபவரை கொரோனா நோயாளியாக கருதி தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சையை தொடங்குகிறோம். பரிசோதனை முடிவில் 'பாசிட்டிவ்' வர வாய்ப்புள்ளது என்பதால் இந்த முன்னெச்சரிக்கை. அண்மையில் 43 வயது நபர் கடும் நெஞ்சுவலியுடன் வந்தார். கொரோனா பரிசோதனை முடிவு வரும் முன்பே தொற்று அபாயம் உள்ள நோயாளிகளுக்கான பிரத்யேக ஆப்பரேஷன் தியேட்டரில் பாதுகாப்பு உடை அணிந்து வெற்றிகரமாக பைபாஸ் சர்ஜரி செய்தோம். பிறகு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதித்தோம். இதன்பிறகே அவருக்கு கொரோனா 'பாசிட்டிவ்' என ரிசல்ட் வந்தது. இதனால் அதற்கும் சேர்த்து சிகிச்சை அளித்து குணமாக்கினோம். நானும், எனது குழுவும் தனிமைப்படுத்திக்கொண்டோம். எங்களுக்கு சோதனையில் 'நெகட்டிவ்'. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு வருவோரை இக்காலத்தில் கொரோனா நோயாளியாக கருதி சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் டாக்டர்கள், நர்சுகள், பணியாளர்களுக்கு தொற்று ஏற்படாது.
- டாக்டர் எம்.எஸ். ராம்பிரசாத் இருதயவியல் அறுவை சிகிச்சை நிபுணர், வேலம்மாள் மருத்துவமனை, மதுரை


பேராபத்திலும் பணி பெருமையளிக்கிறதுஇந்த வேதனையான காலகட்டத்தில் கொரோனாவிலிருந்து மக்களை காப்பாற்றும் முக்கிய பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் ஈடுபடுவது பெருமையளிக்கிறது. காலரா, டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவாமல் கட்டுபடுத்தியதில் டாக்டர் சமுதாயத்தின் பங்கு முக்கியமாக இருந்தது. ஆனால் அதை காட்டிலும் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்துவதில் பேராபத்தை டாக்டர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இதில் ஒரிரு டாக்டர்கள் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர். டாக்டர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக இருந்தால் கொரோனா காலகட்டத்தில் அரசின் ஊரடங்கு விதிகளை கட்டாயம் பின்பற்றி வெளியில் வருவதை மக்கள் தவிர்க்க வேண்டும். கொரோனாவை எதிர்கொண்டு நுாறு நாட்களுக்கு மேலாகியும் கூட சேலம் அரசு மருத்துவமனையில் இந்த அரிய பணியில் ஈடுபட்டுள்ள டாக்டர்கள், செவிலியர்கள் ஒருவர் கூட நோய் தொற்றுக்குள்ளாகாதது மனநிறைவை தருகிறது. பரிசோதனை மேற்கொண்டதில் மாநிலத்தில் சேலம் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. நோய் தொற்றை தடுப்பதில் மூன்று கட்ட கண்காணிப்பு முறையை செயல்படுத்தியது வரவேற்பை பெற்றது.- டாக்டர் ஆர்.பாலாஜிநாதன் டீன், அரசு மருத்துவமனை, சேலம்

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
T.S.SUDARSAN - Chennai,இந்தியா
01-ஜூலை-202011:38:09 IST Report Abuse
T.S.SUDARSAN டாக்டர்களின் பங்கு மகத்தானது. தன்னையும் தன் குடும்பத்தினரையும் எப்போது வேண்டும் ஆனாலும் காரோண தாக்கும் என்று தெரிந்தும் சேவை மனப்பாவையுடன் செய்கிறார்கள். இவர்களுக்கு தமிழ்நாட்டில் மரியாதை இல்லை. இறந்த டாக்டர் குடும்பத்தினருக்கு சாத்தான்குளம் குடும்பத்தினரை விட 10 கோடி ரூபாய்களை அரசு தரவேண்டும். தி மு க , அ தி முக ,காங்கிரஸ் ,எல்லா கட்சியினரும் மின்மம் 10 கோடி கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X