அரசு பண்ணையில் கொக்கோ சாக்லெட் தயாரிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பண்ணையில் கொக்கோ சாக்லெட் தயாரிப்பு

Added : ஜூலை 01, 2020
Share
 அரசு பண்ணையில் கொக்கோ சாக்லெட் தயாரிப்பு

தேனி:தேனியில் கொக்கோ சாகுபடி அதிகரிப்பால் அரசு பண்ணையில் சாக்லெட் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தோட்டக்கலை துறையின் புதிய முயற்சியால் விவசாயிகள் கூடுதல் லாபம் பெற வழிகாட்டுகின்றனர்.உலகம் முழுவதும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை விரும்பி சுவைப்பது 'சாக்லெட்'. இதில் உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தரும் ஒருவகை ஸ்டீராய்டு உள்ளதால் சுவைப்போர் உற்சாகமடைவர்.

சாக்லெட் தயாரிப்பின் மூலப்பொருளான கோக்கோ பீன்ஸ் பரப்பு தேனி மாவட்டத்தில் அதிகரித்து கூடுதல் லாபம் தரும் தொழிலாக மாறி வருகிறது. முன்னர் தென்னையில் ஊடுபயிராக கொக்கோ சாகுபடி செய்ய அதிகாரிகள் வலியுறுத்தினால் மகசூல் பாதிக்கும் என விலகி செல்வர். ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறி கூடுதல் வருவாய் ஈட்டி தருகிறது.

10டன் பீன்ஸ் கொள்முதல்

வெயில் குறைவாகவும், காற்றின் ஈரப்பதம் அதிகம் உள்ள இடங்களில் தென்னையில் ஊடு பயிராக 3 மீ. இடைவெளியில் கொக்கோ செடி நடவு செய்து 4 ஆண்டு முதல் 20 ஆண்டு வரை பலன் கிடைக்கும். மாவட்டத்தில் 120 எக்டேரில் ஊடு பயிராக சாகுபடியாகிறது.மாதம் 10 டன் பீன்ஸ் கொள்முதலாகிறது.

ஆண்டுக்கு இருமுறை அறுவடை

ஒரு மரத்திற்கு 2 முதல் 3 கிலோ வீதம் ஏக்கருக்கு 350 கிலோ பீன்ஸ் கிடைக்கும். பீன்ஸ் உலர வைத்தால் சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாங்குகின்றனர்.

ரூ.1.28 லட்சம் லாபம்

கெங்குவார்பட்டி - கொடைக்கானல் ரோடு காமாக்கபட்டி விவசாயி கே.வி. காமராஜ் கூறிய தாவது ''10 ஏக்கர் தென்னையில் ஊடுபயிராக கொக்கோ, வாழை சாகுபடி செய்தேன். தற்போது கொக்கோ 8 ஆண்டு மரமாக மகசூல் தருகிறது. கொக்கோ இலைகள் நிலத்தில் விழுந்து மக்குவதால் தென்னைக்கு உரமாகிறது. நிலம் ஈரப்பதமாக இருப்பதால் தென்னையிலும் மகசூல் அதிகரித்துள்ளது.

பீன்ஸ் கிலோ ரூ.220 விலை போகிறது. ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.1.28 லட்சம் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. 3 மாதத்திற்கு ஒரு உரம்,பராமரிப்பு செலவு குறைவு. இச் சாகுபடி கூடுதல் பலன் தருகிறது'' என்றார்.சாக்லெட் தயாரிப்புகொக்கோ பீன்ஸ் மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றினால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் தேனி மாவட்ட தோட்டக்கலை துறை பெரியகுளம்அரசு பண்ணையில் சாக்லெட் யூனிட் ஏற்படுத்தி தயாரிப்பை துவக்கியுள்ளது.

பீன்ஸ் விவசாயிகளிடம் வாங்கி, அதை 120 டிகிரியில் மிஷினல் வறுத்து 40 டிகிரியில் உலர வைத்து கிராக்லிங் மிஷனில் உடைக்கப்படுகிறது. இதில் பீன்ஸ் தனியாகவும், ஓடு தனியாக பிரிகிறது. பீன்ஸ்சை கிரைண்டரில் குறிப்பிட்ட நேரம் வரை அரைத்து மாவு பதமாகிறது.

பின் குறிப்பிட்ட வெப்பநிலையில் பக்குவப்படுத்தி, இனிப்பு சுவைக்கு 10 சதவீத சர்க்கரை சேர்த்து மோல்டிங்கில் ஊற்றி ப்ரீசரில் குளிரூட்டினால் சாக்லெட் ரெடி. ஒரு கிலோ பீன்ஸ்சில் 30 கிராம் எடையிலான 12 பாக்கெட் சாக்லெட் தயாராகிறது. பாக்கெட் ரூ.30 வீதம் 12 பாக்கெட் ரூ.360 விற்கலாம். இனி விற்பனைக்கு அனுப்பப்பட உள்ளது.

கோடை வாசல் தலங்களில் 'ேஹாம் மேட்' சாக்லெட் விற்பனை செய்வது போல் கலப்பட மில்லாத கொக்கோ பீன்ஸ் சாக்லெட் தயாரித்து லாபம் பெறலாம். தனியார் சாக்லெட் தயாரிப்பு நிறுவனங்கள் கொக்கோ பீன்சை போட்டிபோட்டு வாங்குகின்றன.

விற்பனைக்கு நல்ல வாய்ப்பு

ராதாகிருஷ்ணன், துணை இயக்குனர் தோட்டக்கலை துறை, தேனி: சாக்லெட் தயாரிப்பால் பீன்ஸ்க்கு குறைந்த பட்ச விலை நிர்ணயம் ஆகும். கம்பெனிகள் விலை குறைவாக கொள்முதல் செய்ய முடியாது. இதே போல் திராட்சை, மாங்கோ ஜூஸ் தயாரித்து மாநில அளவில் விற்பனைக்கு அனுப்பும் திட்டம் செயல்படுத்தப்படும்,

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X