கொரோனா பிடியில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம்! கோவை கலெக்டர் நம்பிக்கை| Dinamalar

தமிழ்நாடு

கொரோனா பிடியில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம்! கோவை கலெக்டர் நம்பிக்கை

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share
மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மக்கள் ஒத்துழைத்தால், விரைவில் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்.இது தொடர்பாக, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி... கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் ?சென்னை உள்ளிட்ட பிற மாவட்டம், மாநிலகங்களில் இருந்து, வந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த உள்ளூர்வாசிகள்
கொரோனா பிடியில் இருந்து விரைவில் தப்பித்து விடலாம்! கோவை கலெக்டர் நம்பிக்கை

மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மக்கள் ஒத்துழைத்தால், விரைவில் நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என்று உறுதியாக கூறுகிறார்.
இது தொடர்பாக, அவர் 'தினமலர்' நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி... கொரோனா பாதிப்பு, நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் ?சென்னை உள்ளிட்ட பிற மாவட்டம், மாநிலகங்களில் இருந்து, வந்தவர்கள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு சென்று வந்த உள்ளூர்வாசிகள் மூலம் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, விதிமுறை மீறி, இ-பாஸ் இன்றி வந்தவர்களால் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை முழுமையாக கட்டுப்படுத்த, அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது. சமூக பரவல் ஏற்பட்டு விட்டதாக கூறப்படுகிறதே; பொது முடக்கத்தின் அவசியம் உள்ளதா ?சமூக பரவல் என்பது, நம் கட்டுப்பாட்டை விட்டு, நிலைமை கைநழுவும் போதுதான் கூறமுடியும். கோவை மாவட்டத்தில், நேற்று (நேற்று முன்தினம்) 65 பாதிப்புகள் பதிவானது உண்மை. இன்றைய தினம்(நேற்று) குறைந்துள்ளது.
பாதிக்கப்பட்ட அனைவரின் தொடர்பையும், உடனடியாக கண்டுபிடித்து பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம். நோய் முழுமையாக நம் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதால், பதட்டம் கொள்ள வேண்டிய அவசியம். இல்லை. பொது முடக்கத்திற்கான அவசியம் தற்போது ஏற்படவில்லை. சென்னை, மதுரை போன்று சந்தைகளில் பாதிப்புகள் துவங்கியுள்ளதே ? பூ மார்க்கெட், அண்ணா மார்க்கெட், எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுகளை இடமாற்றம் செய்ய பணிகள் துரிதமாக நடக்கின்றன. மீன் மார்க்கெட்டை கண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளோம். மேட்டுப்பாளையம் மார்க்கெட் பகுதியும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. சரக்கு வாகன ஓட்டுனர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
பீளமேடு, ஆர்.ஜி.புதுார் பகுதிகளில், பாதிப்பு அதிகரிக்க காரணம்? சென்னை தொடர்பு கொண்ட ஒரு நபரால் ஆர்.ஜி., புதுார் பகுதியிலும், பீளமேடு மசக்காளிபாளையம் பகுதியில் தனியார் துணிக்கடை உரிமையாளருக்கு, பிற மாவட்ட தொடர்பு காரணமாக தொற்று ஏற்பட்டு, அவர் வாயிலாக அவரது கடையில் பணிபுரிந்த, 20 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
தற்போது, அப்பகுதிகளை முழுமையான கண்காணிப்பு வளையத்திற்குள் வைத்துள்ளோம். அத்துணிக்கடை உரிமையாளர் மீது, வழக்கு பதிவு செய்து, சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் கடைகள், நிறுவனங்கள், பொது இடங்களில் விதிமுறை மீறல்களை கண்காணிக்க, 20 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது.
இக்குழு அதிகாரிகளுக்கு முழுமையான அதிகாரமும், தலையீடு இல்லாத சுதந்திரமும் அளித்துள்ளேன். விதிமுறை மீறும் நபர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இனி, விதிமுறை மீறும் கடைகள் மூடப்படுவதுடன் அபராதமும் விதிக்கப்படும்.அதிக பாதிப்புள்ள பகுதிகள் எவை? சின்னியம்பாளையம், துடியலுார், செல்வபுரம், ஆர்.எஸ்.புரம், தெலுங்குபாளையம், கவுண்டம்பாளையம், இடையர்பாளையம், வெள்ளலுார், ஒண்டிபுதுார். கோவையின் பாதிப்பு நிலவரம் குறித்து... இ.எஸ்.ஐ., மருத்துவமனையில், 273 பேர் சிகிச்சை பெறுகின்றனர் இதில், 209 பேர் கோவையை சேர்ந்தவர்கள், பி.எஸ்.ஜி., மருத்துவமனையில், சிகிச்சை பெறும் 105 பேரில், 48 பேர் கோவையை சேர்ந்தவர்கள். மீதமுள்ளவர்கள் வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தவிர, கோவிட் சிறப்பு மையத்தில், 19 பேர் என மொத்தம் கோவையை சேர்ந்தவர்கள், 276 பேர், தற்சமயம் தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். திருப்பூர், ஊட்டி பகுதிகளில் இருந்து, இனிமேல் பாதிப்பு இல்லாதவர்களை, அவரவர் மாவட்டங்களில், அதற்காக தனி மையம் ஏற்படுத்தியுள்ளனர். பாதிப்பு உள்ளவர்கள் மட்டும், இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து வரப்படுவார்கள். பொதுமக்களிடம் தாங்கள் எதிர்பார்ப்பது ?இச்சவாலான காலகட்டத்தில், பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். தற்போது வரை, கோவை மாவட்டத்தில் பாதிப்புகள் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு, பொதுமக்கள், வியாபாரிகள், நிறுவனங்கள் அனைவரின் ஒத்துழைப்புதான் முக்கிய காரணம். தற்போது இன்னும் கூடுதல் அலர்ட் ஆக இருக்க வேண்டியுள்ளது.
முககவசம், சமூக இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல் போன்ற விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அறிகுறியிருப்பின் அலட்சியம் இன்றி, உடனடியாக பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். வெளி மாவட்ட, மாநிலங்களில் இருந்து வந்தவர்கள், தனிமைப்படுத்திக்கொள்ளாமல் அண்டை வீட்டில் இருப்பின் கட்டாயம், 1077 என்ற எண்ணுக்கு புகார் அளிக்கவேண்டும். நிறுவனங்கள், வணிக கடைகள் சுய பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும். இப்படி, எல்லோரும் ஒத்துழைத்தால், வெகு விரைவில் நம்மால் மீண்டு விட முடியும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X