காரியாபட்டி :சுற்றுச்சூழலை பாதிக்கும் கேரி பேக், பாலிதீன், பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களால் மழை வளம் குறைந்து மண் மலட்டுத் தன்மைக்கு மாற விவசாயம் பாதித்த நிலையில் இதற்கு அரசு தடைவிதித்தது.
இருந்தாலும் இதன் பயன்பாடு இன்றும் தொடர்கிறது. இந் நிலையில் வெளிநாடுகளில் வேலை பார்த்த காரியாபட்டி இளைஞர்கள் கண்ணன், மகேந்திரன் அங்கு வேலையை விட்டு உள்ளூரில் சுற்றுச்சூழலை காக்கும் வகையில் துணி, பேப்பர் பைகள் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் கூறியதாவது: இருவரும் நண்பர்கள். என்னதான் வெளிநாட்டில் வேலை பார்த்தாலும் உறவுகளோடு இருப்பதில் தான் மகிழ்ச்சி என்பதை உணர்ந்து இங்கு தொழில் செய்ய முடிவு செய்தோம். செய்யும் தொழில் மூலமாக சமுதாயத்துக்கு ஏதாவது செய்யவேண்டும் என்கிற எண்ணம் பிரதானமாக இருந்தது. மண் வளத்தை கெடுக்கும் கேரி பை, பிளாஸ்டிக், பாலிதீன் உள்ளிட்டவற்றை ஒழிக்க அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதை உணர்ந்தோம்.
அதன்படி துணிப்பை, பேப்பர் பேக் தொழில் துவங்கினோம். வரவேற்பு கிடைத்ததையடுத்து வெளி மாவட்ட ஜவுளி, பேக்கரி, பழக்கடை, அங்காடிகளுக்கு ஆர்டரின் பெயரில் தயாரித்து கொடுக்கிறோம். தையல் தெரிந்த பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவதோடு இயற்கையை பாதிக்காத வகையில் தொழில் செய்வது மனதுக்கு மகிழ்ச்சியாக உள்ளது, என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE