கொரோனாவால் குறைந்த திருமணங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவால் குறைந்த திருமணங்கள்

Added : ஜூலை 01, 2020
Share

பழநி,:ஆன்மிக நகரான பழநியில் ஊரடங்கால் முகூர்த்த நாட்கள் எல்லாம் திருமண ஆரவாரமின்றி அமைதியாக நடக்கின்றன.

பழநி பகுதியில் 600க்கும் மேற்பட்ட திருமண மண்டபங்கள், மடங்கள் உள்ளன.முக்கியமான ஆன்மிக நகர் என்பதால், முகூர்த்த தினங்களில் அனைத்திலும் விழாக்கள் களைகட்டும். சிலசமயம் மண்டபங்கள் கிடைக்காமல் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயில்களிலும் 300க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது கொரோனா பீதியாலும், அரசின் கட்டுப்பாடுகளாலும் முக்கிய முகூர்த்த நாட்களிலும் 5 அல்லது 6 திருமணங்களே நடக்கிறது.

குறைந்தளவில் உறவினர்கள் பங்கேற்பதால் ஆரவாரமின்றி அமைதியாக உள்ளது.சிலர் கொரோனா பிரச்சனை முடிந்த பின் திருமணங்களை நடத்தலாம் என முடிவு எடுத்துள்ளனர். காதுகுத்துதல், நிச்சயதார்த்தம், சீமந்தம் போன்ற விழாக்களையும் மிக குறைந்த நபர்களுடன் வீட்டிலேயே நடத்துகின்றனர்.

கூடுதல் நபர்களுக்கு அனுமதி

ஆர்.பூபாலன், மண்டப உரிமையாளர்:

ஆண்டுக்கு 60 முகூர்த்தங்கள் இருக்கும். இதில் வளர்பிறை முகூர்த்த நாட்களுக்கு போட்டி இருக்கும். கொரோனா ஆரம்பித்த பின் மண்டபங்கள் பதிவு செய்ய யாரும் வருவதில்லை. அதற்கு முன் பதிவு செய்தவர்களும் ரத்து செய்து விட்டனர். சிலர் திருமணத்தையே தள்ளிவைத்து விட்டதாக கூறினர். தற்போது அரசு 50 பேரையே திருமணத்திற்கு அனுமதிக்கிறது. அதை பரிசீலனை செய்து, மண்டபத்தின் அளவை பொறுத்து கூடுதலாக அனுமதிக்க வேண்டும்.

கோயில் வாசலில் திருமணம்

எஸ்.செந்தில்பிரபு குருக்கள், திருஆவினன் குடி

முகூர்த்த நாட்களில் கோயிலில் பதிவு செய்யப்பட்ட திருமணங்கள் 150க்கு மேல் நடக்கும். இதில் நல்ல நாட்களில் அதிகாலை முதல் 10 திருமணங்கள் வரை செய்து வைக்க முடியும். ஆனால் தற்போது திருமணங்கள் மிகக்குறைவாக நடைபெறுகிறது. கோயில் வாசலில்நின்று மணமக்கள் தாலி கட்டி செல்கின்றனர். தற்போது வீடுகளில் நடைபெறும் திருமணங்களும் மிகக்குறைவு.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X