கண்டுக்க மாட்டேங்கறாங்க தலைவா! பா.ஜ., மாவட்ட கவுன்சிலர்கள் புகார் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கண்டுக்க மாட்டேங்கறாங்க தலைவா! பா.ஜ., மாவட்ட கவுன்சிலர்கள் புகார்

Added : ஜூலை 01, 2020
Share

கோவை:கோவைக்கு வருகை தந்த பா.ஜ., மாநில தலைவர் நடத்திய, மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் தாங்கள் கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக மாவட்ட கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தது, கட்சியினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பா.ஜ., சார்பில், கோவை கணபதி சத்தி சாலையில், நேற்று முன் தினம் செய்தியாளர் சந்திப்பும், தொடர்ந்து கோவை வடக்கு மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகளுக்கான கூட்டமும் நடந்தது. மாநில பொதுசெயலாளர் வானதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். மாநில தலைவர் முருகன் தலைமை வகித்தார்.நன்றாக போய்க் கொண்டிருந்த கூட்டத்தில், சூலுாரை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் கோபால்சாமி பேச எழுந்தார்.''உள்ளாட்சி தேர்தலில் சூலுார் ஒன்றியத்தில் நானும், காரமடையில் சங்கீதாவும் மாவட்ட கவுன்சிலர்களாக வெற்றி பெற்றோம். ஆனால் எங்களை அங்கீகரித்து எந்த கூட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் அழைப்பதில்லை. தலைவர்களின் வருகையின் போதும், அழைப்பதில்லை. கட்சிக்காக நாங்கள் பாடுபடுகிறோம்.எங்களது பகுதியில் நாங்கள் மக்களால் மதிக்கப்படுகிறோம். மக்களுக்காக களப்பணி செய்கிறோம். ஆனால் கட்சியில் எங்களுக்கு எந்த நிகழ்ச்சிக்கும் அழைப்பு இல்லை. இது, இன்று நேற்றல்ல; நீண்ட நாட்களாக தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்,'' என்று ஆவேசமாக பேசி அமர்ந்தார். இதே கருத்தை கவுன்சிலர் சங்கீதாவும் ஆமோதித்தார்.இதை பொறுமையுடன் கேட்ட மாநிலத்தலைவர் முருகன், வடக்கு மாவட்ட தலைவர் ஜெகன்நாதனிடம் விசாரித்தார். பின் மாவட்ட கவுன்சிலர்களிடம், ''உங்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படும்; கவலை வேண்டாம்,'' என்று ஆறுதல் கூறினார். அதன் பின் அவர், ''அனைவரும் இணைந்து கட்சி பணியாற்ற வேண்டும். நமக்குள் பிணக்குகள் வேண்டாம்,'' என்று வேண்டுகோள் விடுத்தார்.தொடர்ந்து பா.ஜ., மாவட்ட நிர்வாகிகள் பலர் தங்களது பணிகள் குறித்தும், கட்சி வளர்ச்சி குறித்தும், கோவையில் கட்சி சார்பில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் கருத்துக்களை தெரிவித்தனர்.மாநகர் மாவட்டத்திலும்...கூட்டத்தில் பேசிய பா.ஜ., தலைவர் முருகன், ''மாநகர் மாவட்டத்திலும் இது போன்று பிரச்னைகள் இருப்பதாக புகார் வருகிறது. மாவட்ட தலைவர்கள் அனைத்து நிர்வாகிகளையும், உள்ளாட்சி அமைப்புகளில் வெற்றி பெற்றவர்கள், மற்ற நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவரையும், அரவணைத்து செல்ல வேண்டும். அப்போதுதான் மக்களிடம் ஆதரவு பெருகும்,'' என்று கேட்டுக்கொண்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X