கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரியும் 63 பேர் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி நகர பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் உறவினர்கள் மற்றும் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்பு உள்ளவர்களை சுகாதாரத் துறையினர் கண்டறிந்து அவர்களின் உமிழ்நீர் சேகரிக்கும் பணி நடக்கிறது.கிராமப்புறங்களில் அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், மாவட்டத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் தனியார் டாக்டர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்களும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.அதேபோன்று, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணிபுரியும் டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட 60க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணி முடிந்ததும், வழக்கம் போல் வீட்டிற்குச் செல்கின்றனர்.
இவர்களின் மூலம், குடும்பத்தினருக்கும், மற்றவர்களுக்கும் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.இதனைத் தவிர்க்க கொரோனா வார்டில் பணிபுரியும் 15 டாக்டர்கள், 28 செவிலியர்கள், 20 பணியாளர்கள் என மொத்தம் 63 பேர் தனியார் லாட்ஜ் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.கொரோனா பிரச்னை முடிவடையும் வரை அவர்கள் வீட்டிற்குச் செல்லாமல், லாட்ஜிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் மாவட்ட மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.