தீட்சிதர்களின் வீடுகளில் நோட்டீஸ் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தீட்சிதர்களின் வீடுகளில் 'நோட்டீஸ்' எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதம்

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (1)
Share

சிதம்பரம் : சிதம்பரத்தில், தீட்சிதர்களின் வீடுகளில், 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள்' என, நகராட்சியின் சுகாதார ஊழியர்கள் நோட்டீஸ் ஒட்டினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நுாற்றுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் திரண்டு, ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தரிசன விழாவில் 150 தீட்சிதர்கள் மட்டும் பங்கேற்க, மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இரு தீட்சிதர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பல்கலைக்கழக மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுடன் தொடர்பிலிருந்த 10 பேர் தனிமைப்படுத்தினர். பின், அவர்களுக்கு தொற்று இல்லை என தெரிந்தது. தொடர்ந்து, கோவில் பூஜையில் பங்கேற்க 60 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், 200க்கும் மேற்பட்ட தீட்சிதர்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு, வருவாய் துறை உத்தரவின்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர்கள் அறிவுறுத்தி, 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' என, நேற்று எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்டினர்.கீழ வீதி, கீழ சன்னதி, தேரடி பிள்ளையார் கோவில் தெரு உட்பட பல பகுதிகளில், தீட்சிதர்களின் வீடுகளில் இந்த நோட்டீஸ் ஒட்டப்பட்டது. அதில், பாதிக்கப்பட்டவர் பெயர் குறிக்கப்படவில்லை.

இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த தீட்சிதர்கள் 100க்கும் மேற்பட்டோர், கீழ சன்னதியில் கூடினர். 'கொரோனா தொற்று பாதிக்காதவர்களின் வீடுகளில், அறிவிப்பின்றி நோட்டீஸ் ஒட்டியது ஏன்' என கேட்டு, நகராட்சி சுகதார ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.'இது குறித்து சிதம்பரம் சப் கலெக்டர், தாசில்தார், நகராட்சி ஆணையர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். ஒட்டிய நோட்டீசை அகற்ற வேண்டும்' என கூச்சல் எழுப்பினர். தீட்சிதர்களுக்கு ஆதரவாக மா.கம்யூ., மாநிலக் குழு மூசா, தி.மு.க., மாமல்லன் ஆகியோர் வந்து பேசினர்.தகவலறிந்து வந்த தாசில்தார் அரிதாஸ், டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் தீட்சிதர்களிடம் பேசினர்.

அதை தீட்சிதர்கள் ஏற்காமல், 'அதிகாரிகள் நேரிலோ, அல்லது மொபைல் போன் மூலமோ மன்னிப்பு கேட்க வேண்டும்' என்றனர்.'உரிய அதிகாரிகளிடம் இதுகுறித்து தெரிவிக்கிறேன். அமைதியாக கலைந்து செல்லுங்கள்' என டி.எஸ்.பி., கூறியதை ஏற்று, தீட்சிதர்கள் கலைந்து சென்றனர்.அதையடுத்து 3 மணி நேரமாக நீடித்த பிரச்னை முடிவுக்கு வந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X