அண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அண்ணன், தம்பி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்: கடலுார் கோர்ட் தீர்ப்பு

Added : ஜூலை 01, 2020
Share

கடலுார் : முன் விரோதம் காரணமாக, அண்ணன், தம்பியை வெட்டிக் கொன்ற வழக்கில், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 9 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனையும் விதித்து, கடலுார் கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கடலுார் மாவட்டம், ரெட்டிச்சாவடி போலீஸ் நிலையம் அருகே உள்ள நாகவள்ளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் மகன்கள் சதீஷ், 29; வினோத்குமார், 21; இருவரும், கீழ் அழிஞ்சிப்பட்டைச் சேர்ந்த உறவினர் லட்சுமணனுக்கு, 37; எதிர் கோஷ்டியாக செயல்பட்டனர்.கீழ் அழிஞ்சிப்பட்டில் சாலையோரம் சதீஷ், வினோத்குமார் மது குடித்ததை, அதே பகுதியைச் சேர்ந்த சிலர் கண்டித்தனர். தகவலறிந்த லட்சுமணன் சென்று, வினோத்குமாரை தாக்கினார்.இதனால் ஆத்திரமடைந்த சகோதரர்கள், லட்சுமணனை கொல்ல திட்டமிட்டனர்.

இதையறிந்த லட்சுமணன், சகோதரர்களை கொல்ல திட்டம் வகுத்தார்.அதன்படி, கடந்த 2016ம் ஆண்டு மே 21ம் தேதி காலை, லட்சுமணன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், வீட்டிற்குள் புகுந்து, சதீஷ், வினோத்குமாரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். இதுகுறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிந்தனர்.கொலை தொடர்பாக, லட்சுமணன்,40; கீழ் அழிஞ்சிப்பட்டு டேவிட்ராஜ், 28; அருண்குமார்,30; சதீஷ்,28; ராஜ்குமார்,28; கணபதி,27; மேல் அழிஞ்சிப்பட்டு பாலமுருகன்,28; சவுந்தர்ராஜன்,27; உடலப்பட்டு ஆனந்தராஜ்,28; சுமன்,25; ஆகியோரை, ரெட்டிச்சாவடி போலீசார் மற்றும் டெல்டா பிரிவு எஸ்.ஐ., நடராஜன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

இவ்வழக்கில், கடலுார் கூடுதல் மாவட்ட கோர்ட்டில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது.வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், லட்சுமணனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை, 7 ஆண்டு சிறை தண்டனையும், 7,500 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.மேலும், டேவிட்ராஜ் உள்ளிட்ட 9 பேருக்கு தலா ஒரு ஆயுள் தண்டனை, தலா 7 ஆண்டு சிறை, தலா 4,500 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X