எங்களை ஏன் சாகடிக்கிறீர்கள்: தொற்று உறுதியான பெண் குமுறல்: ஸ்டாலின் உதவி| Dinamalar

தமிழ்நாடு

எங்களை ஏன் சாகடிக்கிறீர்கள்: தொற்று உறுதியான பெண் குமுறல்: ஸ்டாலின் உதவி

Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (9)
Share
எங்களை ஏன் சாகடிக்கிறீர்கள்: தொற்று உறுதியான பெண் குமுறல்: ஸ்டாலின் உதவி

அம்பத்துார் : கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, அரசின் மருத்துவ உதவி கிடைக்காமல் பரிதவித்த பெண்ணுக்கு, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மருத்துவ உதவி செய்தார்.

சென்னை, பாடி, பாரதி நகரைச் சேர்ந்த, 42 வயது பெண், நேற்று முன்தினம், தான் மருத்துவ உதவி கிடைக்காமல் தவிப்பதாக, முதல்வரின் கவனத்திற்காக, 'வீடியோ' வெளியிட்டார். அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அதில், அவர் பேசியதாவது:வணக்கம் முதல்வர் சார். என் பெயர் ரஜினி பிரியா, அம்பத்துார் மண்டலம், பாடியில் இருந்து பேசுகிறேன். எனக்கு, சில தினங்களாக, ஜலதோஷம், தொண்டை வலி அதிகமாக இருந்தது.

கொரோனா அறிகுறியாக இருக்கும் என்ற சந்தேகத்தில், தனியார் மருத்துவ ஆய்வகத்தில், பரிசோதனை செய்து கொண்டேன்.நேற்று மாலை பரிசோதனை முடிவு வந்தது. அதில், எனக்கு தொற்று உறுதியானது. அந்த இரண்டு நாளும், கடும் தலைவலியால் அவதிப்பட்டேன். அவசர தேவைக்காக, வீட்டில் இருந்த மருந்தை பயன்படுத்தினேன்.ஆனாலும், வலியும் தீரவில்லை. என்னிடம் மருந்தும் இல்லை. அதனால், வீட்டிற்கு அருகில் உள்ள மருந்தகத்தில் சென்று, தலைவலிக்காக மருந்து கேட்டேன். ஆனால், அரசு உத்தரவுப்படி, கொடுக்க முடியாது என மறுத்துவிட்டனர்.

பரிசோதனை:

அதன்பின் மாலை, 5:00 மணிக்கு, 'வாட்ஸ் ஆப்' மூலம், மருத்துவ பரிசோதனை முடிவு வந்தது.அந்த முடிவு, ஐ.சி.எம்.ஆருக்கும், மாநகராட்சி சுகாதார துறைக்கும் போய்விடும். அதன் மூலம், உங்களுக்கு உடனே சிகிச்சைக்கான வசதி கிடைக்கும் என, போனில் பேசிய மாநகராட்சியினர் தெரிவித்தனர்.அதனால், நமக்கு மருத்துவ உதவி கிடைக்கும் என, வேறு எந்த மருந்தும் உட்கொள்ளாமல், வலியோடு காத்திருந்தேன். ஆனால், மாநகராட்சி தரப்பில் இருந்து, சிறு உதவியும் கிடைக்கவில்லை.

அன்று இரவு முழுக்க, தலைவலியால் துாங்க முடியாமல் கஷ்டப்பட்டேன். எங்கள் பகுதிக்கு வரும் மாநகராட்சி சுகாதார துறை அதிகாரியிடம் தெரிவித்தோம்.அவர்கள், காலையில் வந்து பார்த்து விட்டு, எனக்கு உதவியாக இருந்த, என் கணவர் மற்றும் மாமியாரை, கொரோனா பரிசோதனைக்காக அழைத்து சென்றனர்.மாலை, 3:30 மணியாகியும் அவர்கள் வீட்டிற்கு வரவில்லை. தலைவலியால் தவிக்கும், என்னை யார் கவனித்துக் கொள்வர். வலியுடன், சாப்பாடும் இன்றி மிகவும் கஷ்டப்பட்டேன்.

இப்போது தான், எனக்கு பயம் வர துவங்கி உள்ளது. வீட்டிலேயே இந்த நிலை என்றால், மருத்துவமனையில் என்னை எப்படி கவனிப்பர் என்ற பயம் தான். நான் கொரோனா தொடர்பான செய்திகளை பார்த்தும், படித்தும் வருகிறேன்.இன்று, நான் பாதிக்கப்பட்ட நிலையில் தான், சென்னையில் ஏன் கொரோனா தொற்றும், உயிரிழப்பும் அதிகமாகியிருக்குன்னு, என்னால் தெரிந்து கொள்ள முடிகிறது.என் கணவருக்கும், மாமியாருக்கும் தொற்று வந்தால், அதற்கு, உங்கள் அரசு தான் பொறுப்பு. ஏன் இப்படி, எங்களை உயிரோடு சாகடிக்குறீங்க. இது யாருடைய அலட்சியம் என்று தெரியவில்லை.அலட்சியம்ஒவ்வொரு உயிரும் அவ்வளவு முக்கியம். என்னால் தலைவலி, தொண்டை வலியை சமாளிக்க முடியவில்லை. என்னை மாதிரி யாரும் கஷ்டப்படக் கூடாது. நோயாளிகளின் வலியை உணராத, அதிகாரிகளின் இதுபோன்ற அலட்சியம் தான், இறப்புகள் அதிகரிக்க காரணம் என்பது புரிகிறது.

நான், மார்ச் முதல், ஊரடங்கு உத்தரவுகளை மதித்து, வீட்டில் இருந்து வருகிறேன். இந்த நிலையில், எனக்கு கொரோனா எப்படி வந்தது என்றே தெரியவில்லை.என்னை மருத்துவமனையில் அனுமதித்து, சிகிச்சை அளிக்க வேண்டும் எனக் கேட்கவில்லை. தயவு செய்து மருந்தகத்தில், மருந்து வாங்க, அனுமதியாவது வழங்கலாமே.

இத்தனை ஆண்டும் அப்படித்தானே வாழ்ந்தோம். அப்படியே வாழ்ந்து விட்டு போகிறோம். ஆனால், எங்களின் பிரச்னையை உணராத உத்தரவாலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும், எங்களை போன்றவர்கள், எப்படி உயிர் வாழ முடியும்.முதல்வர், இந்த பிரச்னைக்கு, தீர்வு காண வேண்டும்.இவ்வாறு தன் குமுறலை வெளிப்படுத்தி இருந்தார்.

அந்த வீடியோவை, நேற்று முன்தினம் மாலை பார்த்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அந்த பெண்ணிடம், மொபைல் போனில் பேசினார்.மருத்துவ சிகிச்சைக்கான உதவிகளை செய்வதாக உறுதி அளித்த அவர், நேற்று முன்தினம் இரவு, 9:40 மணியளவில், கட்சி நிர்வாகிகள் மூலம், பெண்ணின் வீட்டிற்கு சென்று, மருந்துகள் வழங்க, நடவடிக்கை எடுத்தார்.நேற்று காலை, தி.மு.க., மாவட்ட செயலர் சேகர்பாபு, அம்பத்துார் மண்டல அதிகாரிகளிடம் பேசியதை தொடர்ந்து, அந்த பெண், ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X