தமிழ்நாடு

ராமாபுரம் ஏரி முழுமையாக சீரமைக்கப்படுமா?

Added : ஜூலை 01, 2020
Share
Advertisement
 ராமாபுரம் ஏரி முழுமையாக சீரமைக்கப்படுமா?

வளசரவாக்கம் : ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி, அழிவின் விளிம்பில் இருந்த ராமாபுரம் ஏரி, தற்போது, துார் வாரி கரையமைக்கப்பட்டுள்ளது. ஏரியை முழுமையாக மீட்டு, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை எழுப்பிஉள்ளனர்.

பராமரிப்பு:

சென்னை மாநகராட்சி, வளசரவாக்கம் மண்டலம், 155வது வார்டு, ராமாபுரத்தில், சர்வே எண், 239/2க்கு உட்பட்ட, 17 ஏக்கர் பகுதி, ராமாபுரம் ஏரி என, வருவாய் துறை ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.ஒரு காலத்தில், விவசாயத்திற்கு பயன்பட்ட இந்த ஏரி, தற்போது ஆக்கிரமிப்பால், 10 ஏக்கருக்கும் குறைவாக சுருங்கிஉள்ளது.

ராமாபுரம் ஏரியில் நடக்கும் ஆக்கிரமிப்புகள் குறித்து, 2012 முதல் தொடர்ந்து நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டு வந்தது. இந்த ஏரி, எந்த துறை பராமரிப்பில் உள்ளது என்பதே, ஆரம்பத்தில் பெருங்குழப்பமாக இருந்தது. இது குறித்தும், நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. இதையடுத்து, 100 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரிகள் மட்டுமே, எங்கள் பராமரிப்பில் வரும் எனவும், ராமாபுரம் ஏரி, வருவாய் துறை பராமரிப்பில் உள்ளது எனவும், பொதுப்பணித் துறை தெரிவித்தது.

வருவாய் துறையோ, ஏரியை, மாநகராட்சி பராமரிக்க கேட்டுக் கொண்டதுடன், 2015 ஏப்ரலில், ராமாபுரம் ஏரி, சென்னை மாநகராட்சி வசம், முறையாக ஒப்படைக்கப்பட்டது.

பூங்கா:

இதையடுத்து, மாநகராட்சி சார்பில், ஏரியை சர்வே செய்து, 9 லட்சம் ரூபாய் செலவில் வேலி அமைக்கப்பட்டது. சில மாதங்களிலேயே அந்த வேலி மாயமானது.ராமாபுரம் ஏரியில், தண்ணீர் மிஞ்சியுள்ள பகுதியில், கழிவு நீர் கலப்பதாக, நம் நாளிதழில் மீண்டும் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, 2016 ஜூலையில், ஏரியை சுத்தம் செய்யும் பணியை, மாநகராட்சி நிர்வாகம் துவங்கியது.

ராமாபுரம் ஏரியில் தண்ணீர் நிற்கும் பகுதியில், 20 லட்சம் ரூபாய் மதிப்பில், மிதவை இயந்திரம் மூலம் குப்பை அகற்றி, சுத்தம் செய்யும் பணி நடந்தது. அதன்பின், 2017ல், 94 லட்சம் ரூபாய் செலவில், ஏரியைச் சுற்றி சுவர் எழுப்பி, நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைக்க, மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால், அந்த பணிகள் நடக்கவில்லை. ஏரி கரையோரம் ஆக்கிரமிப்பாக இருந்த, 24 கட்டடங்களில், 54 கடைகளும், 24 வீடுகளும், 2018 ஏப்ரலில் இடித்து தள்ளப்பட்டன.

கடந்த, 2019 ஜூலையில், ராமாபுரம் ஏரியில், 88.86 லட்சம் ரூபாய் மதிப்பில், துார்வாரி, கரை சீரமைக்கும் பணியில், மாநகராட்சியின், மழைநீர் வடிகால் துறை ஈடுபட்டது. பின், இப்பணி, வளசரவாக்கம் மண்டல அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஏரி துார் வாரும் பணி, மழை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், அவ்வப்போது தடைபட்டது. தற்போது, ஏரியில் கரைகள் அமைத்து, நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. ஏரியின் ஒரு பகுதியில், பூங்கா அமைக்கவும், ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

கோரிக்கை:

கொரோனாவால் பணிகள் தடைபட்டிருந்த நிலையில், தற்போது, மீண்டும் ஏரியை துார் வாரி சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.ஆனால், ஏரியின் இன்னொரு பகுதியில், குடிநீர் வாரியம் சார்பாக, கழிவு நீர் ஏற்று நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மீதமுள்ள பகுதி, மண் திட்டையாக காட்சியளிக்கிறது.இந்த பகுதியையும் துார் வாரி, ஏரியை முழுமையாக சீரமைத்து, மழைநீர் சேகரிப்பு மையமாக மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X