காரியத்துக்கு வந்த இருவருக்கு தொற்று: கோபி ஈஸ்வரன் கோவில் வீதிக்கு சீல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

காரியத்துக்கு வந்த இருவருக்கு தொற்று: கோபி ஈஸ்வரன் கோவில் வீதிக்கு 'சீல்'

Added : ஜூலை 01, 2020
Share

கோபி: கோபி ஈஸ்வரன் கோவில் வீதி, கலெக்டர் உத்தரவின் படி, நேற்று முதல் தனிமைப்படுத்தப்பட்டது.
கோபி அருகே ஈஸ்வரன் கோவில் வீதியை சேர்ந்த, 93 வயது முதியவர், வயது முதிர்வால், சமீபத்தில் இறந்தார். உறவினர் இருவர் இறுதிச்சடங்கில் பங்கேற்க, கடந்த, 20ல் சென்னையில் இருந்து காரில் வந்தனர். பவானி, லட்சுமிநகரில், சுகாதாரத்துறையினர் இருவருக்கும், சளிமாதிரி பரிசோதனை மேற்கொண்டனர். சடங்கில் பங்கேற்ற இருவரும் சென்னை திரும்பினர். பரிசோதனை முடிவில் இருவருக்கும் கொரோனா தொற்று நேற்று முன்தினம் உறுதியானது. இதனால் முதியவரின் வீடு மட்டும் தனிமைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சீல் வைக்கப்பட்டுள்ள, கோபி, கமலா ரைஸ் மில் வீதிக்கு ஆய்வு செய்ய, கலெக்டர் கதிரவன் நேற்று மாலை வந்தார். ஈஸ்வரன் கோவில் வீதிக்கும் சென்ற அவர், வீட்டில் வசிப்பவர்களிடம் விபரம் கேட்டறிந்தார். இதையடுத்து ஈஸ்வரன் கோவில் வீதியை தனிமைப்படுத்த உத்தரவிட்டார். அப்பகுதியில் உள்ள, 50 வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டன.

இது இரண்டாவது முறை...: கடந்த மார்ச், 31ல், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கோபி அருகே வாய்க்கால்ரோடு பகுதியில், 1,800 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டன. அப்போது ஈஸ்வரன் கோவில் வீதியும் தனிமைப்படுத்தப்பட்டது. இரண்டாவது முறையாக நேற்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

'சமூக தொற்று இல்லை'; கலெக்டர் திட்டவட்டம்: கோபியில் நேற்று ஆய்வுக்கு வந்த, கலெக்டர் கதிரவன் கூறியதாவது: மாவட்டத்தில், 26ம் தேதி முதல், பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதற்கு முன் வெளி மாவட்டம் மற்றும் மாநிலத்தில் இருந்து வந்தவர்களால், நேற்று முன்தினம் வரை, 119 பேருக்கு தொற்று இருந்தது. இதில், 77 பேர் குணமடைந்த நிலையில், நான்கு பேர் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும், 32 லேப் டெக்னீசியன் குழு மூலம், சளி மாதிரி எடுக்கும் பணி நடக்கிறது. புதியதாக எவரேனும் வந்தால், உடனே தகவல் தெரிவித்து, மக்கள் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை, 6,300 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை சமூக தொற்று ஏற்படவில்லை. மக்கள் சுய கட்டுப்பாடு கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X