இந்தியாவுடனான ராணுவ உறவு: அமெரிக்காவில் புது தீர்மானம்

Updated : ஜூலை 01, 2020 | Added : ஜூலை 01, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
military relations, india, US, இந்தியா, ராணுவ உறவு, அமெரிக்கா, புது தீர்மானம்

வாஷிங்டன்: இந்தியாவுடனான ராணுவ உறவை வலுப்படுத்தும் வகையில், இந்தத் துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் இணைந்து செயல்படுவது, போர் விமானத் தயாரிப்பில் உதவுவது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அமெரிக்க பார்லி.,யில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அமெரிக்க பார்லி.,யின் செனட் சபையைச் சேர்ந்த, மார்க் வார்னர் மற்றும் ஜான் கார்னின், தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் திருத்தம் செய்யும், சில தீர்மானங்களை தாக்கல் செய்துள்ளனர். ஜனநாயகக் கட்சியை சேர்ந்த மார்க் வார்னர், சபையின் உளவுத் துறைக்கான நிலைக் குழு துணைத் தலைவராக உள்ளார். ஜான் கார்னின், குடியரசு கட்சியின் கொறடாவாக உள்ளார். மேலும், பார்லி.,யின் இந்திய விவகாரங்களுக்கான குழுவிலும் இவர்கள் இடம் பெற்றுள்ளனர்.


latest tamil news




தேசிய ராணுவ அங்கீகார சட்டத்தில் சில திருத்தங்கள் செய்வதற்காக, இவர்கள் தாக்கல் செய்துள்ள தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளதாவது: அமெரிக்கா - இஸ்ரேல் இடையே உள்ளது போல், இந்தியா -அமெரிக்கா இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் செய்யப்பட வேண்டும். இது குறித்து, ராணுவ அமைச்சர், மார்க் எஸ்பர் விளக்கம் அளிக்க வேண்டும்.ராணுவம் மற்றும் அது தொடர்பான தொழில்கள் மற்றும் தொழில்நுட்பத்தில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது, இரு நாடுகளுக்கு இடையே நிபுணர்களை பரிமாறிக் கொள்வது ஆகியவை குறித்து, ராணுவ அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும்.

இந்தியாவின் ராணுவ தொழில்நுட்பம் மற்றும் தொழில் முயற்சிகளுக்கு நிதி அளிப்பது குறித்தும் ஆராயப்பட வேண்டும். இந்தியா, தற்போது, ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை சுயமாக தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த திட்டத்தில், அமெரிக்கா உதவுவது குறித்து ஆராய வேண்டும். ராணுவ ஒத்துழைப்புக்கான, 'நேட்டோ' எனப்படும் வடக்கு அட்லாண்டிக் ஒத்துழைப்பு அமைப்பில், இஸ்ரேல், நியூசிலாந்து ஆகியவை இடம் பெற்றுள்ளது போல், இந்தியாவையும் சேர்க்க வேண்டும்.அதன் மூலம், அமெரிக்காவின் உயர் ராணுவ தொழில்நுட்பங்கள், ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க முடியும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மற்றொரு செனட் உறுப்பினரான, ஜான் சுலிவான் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், 'இந்தியாவின் ராணுவ பலத்தை உயர்த்தும் வகையில், அதனுடன் அதிக அளவில் போர் பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.'போர் விமானங்கள் தயாரிப்பது உள்ளிட்டவற்றில், அதிக ஒத்துழைப்பு தர வேண்டும்' என, குறிப்பிடப்பட்டுள்ளது.

செனட் சபையைச் சேர்ந்த மற்றொரு உறுப்பினரான, கோரி கார்ட்னர் தாக்கல் செய்துள்ள தீர்மானத்தில், 'சீனாவுடனான எல்லைப் பிரச்னையில் இந்தியாவுக்கு ஆதரவாக அமெரிக்கா இருக்க வேண்டும். 'மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கும் சீனாவின் நடவடிக்கைகள் கவலையளிப்பதாக உள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.


அமெரிக்க உறவு முக்கியமானது


அமெரிக்காவுக்கான இந்தியத் துாதர், தரன்ஜித் சிங் சாந்து, நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ''மிகப் பெரிய ஜனநாயக நாடுகள், அனைவருக்கும் சம வாய்ப்பு, ஒரே மாதிரியான சட்டம், சுதந்திரம் போன்றவற்றில், இந்தியாவும், அமெரிக்காவும் ஒரே கொள்கையுடன் உள்ளன. ''நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களை செயல்படுத்தும் தொலைநோக்கு பார்வை, நடைமுறைக்கு வருவதற்கு, இந்த உறவு முக்கியமானது,'' என்றார்.


சீனாவுக்கு கண்டனம்


குடியரசு கட்சியைச் சேர்ந்த, செனட், எம்.பி., யான மார்க்கோ ரூபியோ கூறியதாவது:இந்திய துாதர், தரன்ஜித் சிங் சாந்துவுடன் பேசினேன். சீனாவுக்கு எதிரான எல்லை பிரச்னையில், இந்தியாவுக்கு எங்களுடைய ஆதரவை தெரிவித்தேன். மற்ற நாடுகளை ஆக்கிரமிக்க, சட்டவிரோதமாக, தனது ராணுவத்தின் மூலம், சீனா மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறது. இது ஏற்கக் கூடியது அல்ல.இவ்வாறு, அவர் கூறினார்.

இந்நிலையில், செனட் சபையில் நடந்த விவாதத்தின்போது, சபையின் தலைவர், மிட்ச் மெக்கானல் உள்ளிட்டோர், இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
01-ஜூலை-202019:27:15 IST Report Abuse
Rajagopal இவர்கள் இப்படித்தான் சீனாவை வளர்த்தார்கள். இப்போது சீனாவிற்கு எதிராக இந்தியாவை தயார் செய்கிறார்கள். நாளை இந்தியாவிற்கு எதிராகவும் கிளம்பும் சாத்தியம் இருக்கிறது. இந்தியா மிகவும் சாக்கிரதையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் எதிர் காலத்தில் துண்டு, துண்டாக ஆகி விடும் நிலைமை வரலாம். அமெரிக்கா காய் வைத்த நாடுகளெல்லாம் எரிந்து சாம்பலாகி விட்டன - ஈரான், ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என்று பல உதாரணங்கள் இருக்கின்றன. அவைகளெல்லாம் அமெரிக்காவின் ஆதரவாளர்களாக இருந்த நாடுகள். இன்று எதிரிப் பட்டியலில் இருக்கின்றன. சீனாவை இந்தியா முடிந்தவரையில் தனியாக எதிர்க்க வேண்டும்.
Rate this:
Cancel
vnatarajan - chennai,இந்தியா
01-ஜூலை-202016:15:02 IST Report Abuse
vnatarajan உலக நாடுகளிடையே சீனாவின் மதிப்பை குறைக்க வந்த சனி வேறொன்றும் இல்லை அது சீனாவை பிடித்துள்ள கொரோனா என்ற ஏரை நாட்டு சனிதான்
Rate this:
Cancel
Balasubramanian Ramanathan - vadakupatti,இந்தியா
01-ஜூலை-202012:58:07 IST Report Abuse
Balasubramanian Ramanathan அமெரிக்காவுக்கு என்ன வந்தது. பேசாம முட்டிக்கோ, வெட்டிக்கோனு விடவேண்டியது தானே. என்ன நான்சொல்வது சரிதானே.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X