லக்னோ: உத்தர பிரதேசத்தில், சி.ஏ.ஏ., எனப்படும், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களை சேதம் செய்தவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யும் பணி, லக்னோவில் நேற்று துவங்கியது.
வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், மதரீதியாக பாதிக்கப்பட்டு, நம் நாட்டுக்கு வந்த, அந்நாடுகளின் மத சிறுபான்மையினருக்கு, குடியுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது.
பெரும் சேதம்

இதற்காக, குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து, மசோதா, பார்லி.,யின் இரு அவைகளிலும், கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாட்டின் பல பகுதி களில் போராட்டம் நடந்தது. உ.பி., தலைநகர், லக்னோவில், கடந்த, டிசம்பர், 19ல் நடந்த போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், பொது சொத்துக்களுக்கு பெருத்த சேதத்தை விளைவித்தனர். அரசு பஸ்களுக்கு தீவைத்தும், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கியும், சாலைத் தடுப்புகளை உடைத்தும், வன்முறையில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களை கண்டுபிடித்து, அவர்களிடம் உரிய இழப்பீட்டை வசூலிக்க, உ.பி., அரசு முடிவு செய்தது.இதற்கிடையே, கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த மூன்று மாதங்களாக, லக்னோ நகரில் இழப்பீடு வசூலிப்பதற்கான நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டிருந்தன. ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமல்படுத்தப்பட்டதையடுத்து, லக்னோவில் இழப்பீடு வசூலிக்கும் பணி துவங்கியது.
வழக்கு பதிவு
இதுபற்றி தாசில்தார், சாம்பு சரன் சிங் கூறியதாவது:சி.ஏ.ஏ., எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுச் சொத்துக்களுக்கு பெரும் சேதம் ஏற்படுத்திய, 54 பேர் மீது, போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.அவர்களிடமிருந்து, 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வசூலிக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, 54 பேருக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது.
அவர்களிடமிருந்து அபராத தொகை அல்லது அதற்கு சமமான மதிப்புடைய சொத்துக்களை பறிமுதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.லக்னோவில், ஹஸன்கஞ்ச் பகுதியில், மகானீர் சவுத்ரி என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடையும், சிற்றுண்டி கடையும் பறிமுதல் செய்யப்பட்டன.இவ்வாறு, அவர் கூறினார்.