புதுடில்லி: 'டிக் டாக்' உள்ளிட்ட, 59 சீன மொபைல்போன் ஆப்களுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனால், டிக் டாக் போன்று செயல்படும் இந்திய செயலிகளுக்கு, ஜாக்பாட் அடித்து வருகிறது. குறிப்பாக, 'சிங்காரி' (Chingari) என்ற இந்திய செயலியை, கூகுள் பிளே ஸ்டோரில், ஒரு கோடிக்கும் அதிகமானோர் பதிவிறக்கம் செய்திருக்கின்றனர்.

இந்திய - சீன எல்லையில் ஏற்பட்ட பிரச்னையால், தேசிய பாதுகாப்பு கருதி, சீனாவின், 59 செயலிகளை, இந்திய அரசு தடை செய்தது. இதனால் கலக்கமடைந்த இந்திய டிக் டாக் கிரியேட்டர்கள், பொழுதுபோக்கிற்கு வேறு செயலிகளைத் தேட துவங்கினர். இதனால், யாரும் பெரிதாகக் கண்டுகொள்ளாமல் இருந்த இந்திய செயலிகளின் பக்கம், திடீரென அதிர்ஷ்டக் காற்று வீசத் துவங்கியுள்ளது. 'மித்ரோன்' என்ற செயலியை அதிகப்படியானோர் பதிவிறக்கிவந்த நிலையில், தற்போது, சிங்காரி என்ற செயலியை பலரும் பதிவிறக்கி வருகின்றனர். டிக் டாக் முடக்கப்படும் எனத் தெரியவந்தது முதல், கடந்த, 10 நாட்களில் மட்டும் மூன்று மில்லியன் பதிவிறக்கத்தை இந்த செயலி கண்டுள்ளது. கடந்த, 22 நாட்களில், 10 மில்லியன் பதிவிறக்கத்தைக் கடந்து சாதனை படைத்துள்ளது சிங்காரி.

'சிங்காரி ஆப்' நிறுவனர் பிஸ்வதமா நாயக் கூறுகையில், 'எங்களது செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பலரும் எங்கள் செயலியில் வீடியோ பதிவிட்டு வருகின்றனர். எங்கள் செயலி எப்போதும் இந்திய செயலியாகத்தான் இருக்கும். கூகுள், பேஸ்புக் என, யார் கேட்டாலும் எங்கள் செயலியை விற்க மாட்டோம். ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பங்களா, குஜராத்தி, மராத்தி மற்றும் பஞ்சாபி ஆகிய மொழிகளில் எங்கள் செயலி கிடைக்கும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE