எல்லை விரிவாக்கம் செய்ய முற்படாதே: சீனாவுக்கு மோடி அறிவுரை

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (9+ 117)
Share
Advertisement
எல்லை விரிவாக்கம் , முற்படாதே: சீனா, மோடி அறிவுரை, expansionism, pm modi, Narendra Modi, Ladakh, india, china, border crisis

புதுடில்லி :''ஒரு நாடு, தன் எல்லையை விரிவுபடுத்தும் காலம் முடிந்துவிட்டது. எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள், அவற்றின் படைகள் தோல்வி அடைந்ததையும், திரும்பிச் சென்றதையும் தான், வரலாறு உணர்த்துகிறது. அதனால், எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்,'' என,
சீனாவுக்கு, பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

கடந்த மாதம், 15ம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது.
இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். சீன தரப்பில், 43க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனால், சீனா இதை மறுத்து வருகிறது. இதையடுத்து, நம் ராணுவம், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. சீன ராணுவமும், எல்லையில் ராணுவத்தை குவித்து வருகிறது.
இதற்கிடையே, இரு நாட்டு ராணுவத்தின் கமாண்டர்கள் அளவில், இதுவரை மூன்று சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. எனினும், எல்லையில் பதற்றம் குறையவில்லை.


latest tamil news
திடீர் பயணம்இந்நிலையில், பிரதமர் மோடி, நேற்று திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன், முப்படை களின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உடன் சென்றனர்.தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், லே பகுதியில் உள்ள நிமு பகுதிக்கு, பிரதமர் மோடி சென்றார். அப்போது, அங்கிருந்த வீரர்கள், 'வந்தே மாதரம், பாரத் மாதா கி ஜெய்' என, கோஷங்கள் எழுப்பி, பிரதமரை வரவேற்றனர்.


latest tamil news


Advertisementதொடர்ந்து, நிமு பகுதி யில் இருக்கும் ராணுவ வீரர்கள், விமானப் படை வீரர்கள், இந்தோ - திபெத் படை வீரர்கள் ஆகியோருடன், மோடி ஆலோசனை நடத்தினார். லடாக் மோதல் பற்றி, அவர்களிடம் கேட்டறிந்தார். பின், வீரர்களிடம் பிரதமர் மோடி பேசியதாவது:நம் வீரர்களின் வலிமை, இமயத்தை விட உயர்ந்தது. அவர்கள், பாறாங்கற்கள் போன்ற மன உறுதியுடன், எல்லையை காத்து வருகின்றனர். உங்களின் வீரம், நீங்கள் பணியில் ஈடுபட்டிருக்கும் மலையை விட உயரமானது. உங்களின் வீரம், தைரியம் மூலம் ஒட்டு மொத்த உலகத்திற்கும், நம் ராணுவம் முக்கியமான மற்றும் வலுவான தகவலை அளித்துள்ளது.நாட்டின் பாதுகாப்பு, ராணுவ வீரர்களான உங்களின் கைகளில் தான் உள்ளது. உங்களின் வீரத்திற்கு நிகரானது எதுவும் இல்லை. ஒட்டு மொத்த இந்திய மக்களின் நம்பிக்கை, நீங்கள் தான்.உங்களின் வீரத்தால், மக்கள் பெருமை கொள்கின்றனர். உங்களின் தியாகத்தால், தேசம் தலைநிமிர்ந்து நிற்கிறது.


latest tamil news


வீர அஞ்சலிநம் எதிரிகளின் ஒவ்வொரு திட்டத்தையும், நாம் தவிடுபொடியாக்கி வருகிறோம். நம் நிலத்தை, யாரும் ஆக்கிரமிக்க முடியாது. நம் வீரர்களின் செயலுக்கு தலை வணங்குகிறேன்.நாடு தற்போது, உடைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளது. நாட்டைக் காக்க உயிர் இழந்தவர்களுக்கு, வீர அஞ்சலி செலுத்துகிறேன். எதையும் எதிர்கொள்ள, இந்தியா தயாராக உள்ளது. நாட்டின் எதிரிகளுக்கு, உரிய பாடம் புகட்டியுள்ளோம்.


latest tamil newsநம் வீரர்களின் மன தைரியத்தை கண்டு எதிரி கள் பயப்படுகின்றனர். எதிரிகளின் எந்த திட்டமும், நம்மிடம் பலிக்கவில்லை. கல்வான் பள்ளத்தாக்கு, இந்தியாவுக்கு சொந்தமானது என்பதில் மாற்றமில்லை. சியாச்சின் முதல், கல்வான் வரை உள்ள பகுதிகள், நம் கட்டுப்பாட்டில் உள்ளன. தற்போது நாம் எதிர்கொண்டுள்ள சவால், நம்மை வலுப்படுத்திஉள்ளது.இந்தியா, அமைதியை விரும்பக்கூடிய நாடு என்பதை, உலகம் அறியும். வீரம் என்பது, அமைதியை நோக்கிச் செல்வது; அமைதியை எதிர்பார்ப்பது. நாம் அமைதியை எதிர்பார்த்தாலும், நம் நிலத்தை பாதுகாக்கும் விவகாரத்தில், அச்சம் கொள்ளப்போவதில்லை.

ராணுவ வீரர்கள் தீரமுடன் உள்ளது, அவர்களின் முகத்தை பார்க்கும்போது தெரிகிறது. கடந்த காலங்களிலிருந்து, நாம் பல எதிரிகளுடன் போரிட்டு வருகிறோம். நம் வீரம், வழி வழியாக வந்த வரலாறு கொண்டது. நம் ராணுவத்தின் நெருப்பு போன்ற ஆக்ரோஷத்தை, எதிரிகள் பார்த்துள்ளனர்.நாட்டை அபகரிக்கும் கொள்கைக்கு, இந்த உலகம் எதிராக உள்ளது. ஒரு நாடு, தன் எல்லையை விரிவுபடுத்தும் காலம் முடிந்துவிட்டது.இது வளர்ச்சி, மேம்பாட்டுக்கான காலம். தன் எல்லையை விரிவாக்கம் செய்ய நினைக்கும் நாடுகள், அவற்றின் படைகள் தோல்வி அடைந்திருக்கின்றன அல்லது திரும்பிச் சென்றிருக்கின்றன.


latest tamil news

வீரத்தை பறைசாற்றும்இது தான் வரலாறு உணர்த்தும் பாடம். அதனால், எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும்.எல்லைப் பகுதியில் அடிப்படை கட்டமைப்பு களை மேம்படுத்துவது, முழுவீச்சில் நடக்கும். அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதன் மூலம், எல்லையில் ராணுவம் ஒருங்கிணைந்து செயல்பட முடியும்.நாம் புல்லாங்குழல் வைத்துள்ள கிருஷ்ணர்கள் தான்; அதே சமயம், நம்மிடம் சுதர்சன சக்கரமும் உள்ளது. அமைதியை விரும்பும் நாம், எதிரிகளை களத்தில் சந்திக்க தயங்க மாட்டோம். நாட்டை அபகரிக்க, பேராசையுடன் செயல்பட்டோர், எப்போதும் வீழ்ச்சியை தான் சந்தித்துள்ளனர். எனக்கு முன்னால் உள்ள, வீராங்கனையரைப் பார்க்கிறேன். எல்லையில் உள்ள போர்க்களத்தில், இப்படி காண்பது ஊக்கம் அளிக்கிறது. எல்லைப் பகுதியில், உட்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான செலவினங்களை, நாங்கள் மூன்று மடங்கு அதிகரித்துள்ளோம்.

லே பகுதியிலிருந்து சியாச்சின் வரை ஒவ்வொரு அங்குலமும், நம் ராணுவ வீரர்களின் வீரத்தை பறைசாற்றும்.உங்களின் தியாகத்தால், இந்தியாவின் தற்சார்பு பொருளாதாரம் வலிமையடையும். நம் வீரர்களின் வீரம், துணிச்சல், அனைத்து இடங்களிலும் பேசப்படும். தேசத்தின் ஒவ்வொரு வீட்டிலும், உங்களின் வீரம், துணிச்சல் போற்றப்படும்.இந்தியாவின், 130 கோடி மக்களின் பெருமை யின் அடையாளமாக, லடாக் இருக்கிறது. இந்த நாட்டுக்காக விருப்பப்பட்டு, தன் இன்னுயிரை தியாகம் செய்தவர்களுக்கு, சொந்தமான பூமி லடாக். இந்தப் பகுதியைப் பிரிப்பதற்காக, பிளவுபடுத்துவதற்காக செய்யப்பட்ட ஒவ்வொரு முயற்சி யையும், லடாக் மக்கள் முறியடித்துள்ளனர். இவ்வாறு பிரதமர் பேசினார்.

சீனாவுடன் நடந்த மோதலில், காயமடைந்த வீரர்கள், லேவில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, பிரதமர், ''எதிரிகளுக்கு நீங்கள் சரியான பதிலடி கொடுத்துள்ளீர்கள்; உங்களின் வீரம், 130 கோடி மக்களை பெருமை கொள்ள வைத்துள்ளது,'' என்றார்.
நிமு பற்றிய ஒரு பார்வைராணுவ வீரர்கள் மத்தியில், பிரதமர் மோடி நேற்று உரையாற்றிய இடம் நிமு. இது, லடாக் யூனியன் பிரதேசத்தில், லே மாவட்டத்தில் உள்ள மலைகள் சூழ்ந்த பகுதி. லே நகரில் இருந்து, கார்கில் செல்லும் வழியில், 34 கி.மீ., தொலைவில் நிமு உள்ளது. இந்திய - சீன வீரர்கள் மோதல் நடந்த கல்வான் பள்ளத்தாக்கு, இங்கிருந்து, 250 கி.மீ., தொலைவில் உள்ளது. இதன் வெப்பநிலை கோடைக்காலத்தில், 40 டிகிரி செல்ஷியஸ்; குளிர்காலத்தில் மைனஸ், 29 டிகிரி செல்ஷியஸ். இங்கு நிலவும் கடினமான காலநிலை, சவாலானது. இதன் மக்கள் தொகை, 1,134.மலையின் கீழ் சிந்து நதி ஓடுகிறது. 2010ம் ஆண்டில் லடாக்கில் ஏற்பட்ட வெள்ளத்தில், இப்பகுதி பாதிக்கப்பட்டது. இங்கு, 'டீ - சமோசா, சோளா பூரி' உணவு பிரபலம். 'நிமு ஹவுஸ்' உள்ளிட்ட, பல சுற்றுலா தலங்கள் உள்ளன.


திருக்குறளை மேற்கோள்காட்டிய பிரதமர்லடாக்கில், ராணுவ வீரர்களிடம் பிரதமர் பேசியபோது, ஒரு படை எப்படியிருக்க வேண்டும் என்பதற்கு, ஒரு திருக்குறளை கூறி, மேற்கோள் காட்டினார். திருக்குறளில், படைமாட்சி என்ற அதிகாரத்தில் இடம் பெற்றுள்ள, 766வது திருக்குறளை பிரதமர் கூறினார்.

மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம்
எனநான்கே ஏமம் படைக்கு
என கூறிய பிரதமர், அதற்கான அர்த்தமாக, 'வீரம், மானம், சிறந்த போர் நெறியில் செல்லுதல், போர் நோக்கத்தில் தெளிவு ஆகிய நான்கு பண்புகளும், ஒரு படைக்கு சிறந்தவை' என, திருவள்ளூர் கூறியுள்ளதாக, பிரதமர் தெரிவித்தார்.
'பதற்றத்தை அதிகரிக்கக் கூடாது'லடாக் பகுதியில், பிரதமர் மோடி சென்றது பற்றி, சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர், ஷாவோ லிஜியன் கூறுகையில், ''எல்லையில் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கைகளில், சீனாவும், இந்தியாவும் ஈடுபட்டுள்ளன. இந்த நேரத்தில், எந்த ஒரு தரப்பும், பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது,'' என்றார்.


உண்மையான தலைமை


நாட்டின், 130 கோடி மக்களின் உணர்வுகளுக்கு வார்த்தைகள் மூலம் மதிப்பளிப்பது; வீரர்களிடம் பேசி, அவர்களின் தைரியத்தை ஊக்குவிப்பது ஆகியவை தான், உண்மையான தலைமையின் செயல்பாடு. இதற்கு உதாரணமாக, பிரதமர் மோடி உள்ளார். வீரம், நம் பூமியின் மரபு என்பதை, பிரதமர் வெளிப்படுத்தியுள்ளார்.ஜே.பி.நட்டா,

தேசிய தலைவர்,

பா.ஜ.,
ஊக்கத்தை அளிக்கும்பிரதமர் மோடி, லடாக் பகுதிக்குச் சென்று, ராணுவ வீரர்களிடம் பேசியுள்ளார். இது, கடினமான சூழ்நிலையில் நாட்டை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, பெரும் ஊக்கத்தையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தும்.அமித் ஷா,

மத்திய உள்துறை அமைச்சர்,
பா.ஜ.,
பொய் சொல்வது யார்?தங்கள் நிலங்களை சீனா ஆக்கிரமித்து விட்டதாக, லடாக் மக்கள் சொல்கின்றனர். ஆனால், நம் பிரதமர், 'நம் நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கவில்லை' என, சொல்கிறார். இரண்டு தகவல்களும் வெவ்வேறாக உள்ளன. இதில், யாரோ ஒருவர் பொய் சொல்கின்றனர்.
ராகுல், எம்.பி.,

காங்கிரஸ்

Advertisement
வாசகர் கருத்து (9+ 117)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
04-ஜூலை-202013:25:46 IST Report Abuse
Vijayan Singapore இந்தியா ஒரு தலைசிறந்த வீரரை பிரதமராக கொண்டுள்ளது.
Rate this:
Cancel
S....lai - CIT ,இந்தியா
04-ஜூலை-202012:45:11 IST Report Abuse
S....lai சீனா வின் போக்கை கண்டிக்கும் போது - இந்தியன் என்ற உணர்வு கொண்டு தங்கள் கருத்துக்கள் இருந்தால் தனிமனித விமர்சனம் இருக்க வாய்ப்புஇல்லை,தனிமனிதாக நாம் கூறும் கருத்துக்கள் உலகரங்கில் தெரியவாய்ப்பில்லை, ஆகையால் நம் எண்ணமாக நமது இந்தியா பிரதமர்கள் உலகிற்கு வெளிப்படுத்துவார்கள் அது நேருஜி முதல் இன்று மோடிஜி வரை. நமது அரசியல் எதிர்க்கட்சிகள் செய்கின்ற அரசியல் விமர்சனம் கொண்டு உலகரங்கில் ஏதும் வெளிப்படப்போவதில்லை, இது அறியாத சில பதர்களின் கருத்துக்கள் பதர்களாக தான் இருகின்றன. அரசின் எந்த ஒரு செயலும் அந்த துறைகளின் ஆலோசானை படி தான் அமையும் அதில் சில சமயங்களில் சிலருக்கு வெற்றியும் இருக்கும் சிலர்க்கு தோல்வியும் இருக்கும். அனைவரின் எண்ணப்படி மற்றும் மகிழ்ச்சிப்படி அமையும் என்பது இயலாமையின் உச்சம் ஆகும். தமிழன் / இந்தியன் என்று சொல்லும்போது ஒற்றுமை உணர்வு கொண்டு வருவது திராவிடன் என்பது பிரிவினை என்ற எண்ணத்தில் வருவது.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஜூலை-202010:01:06 IST Report Abuse
vbs manian மோடியை பார்த்தால் பெருமையாக இருக்கிறது.ஏசி ரூமில் உட்கார்ந்து கொண்டு அறிக்கை விடும் தலைவர்கள் மத்தியில் லடாக் சென்று உயிரை பயணம் வைத்து காவல் செய்யும் வீரர்களோடு கைகோத்து நின்று நன்றிக்கடமை உணர்வோடு பேசியது மறக்க முடியாதது ஒரு உண்மையான தலைவனின் இலக்கணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X