சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இழந்த மானுடத்தை இப்போது மீட்போம்!

Updated : ஜூலை 05, 2020 | Added : ஜூலை 03, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
சிந்தனைக்களம்

நதியோரங்களில் நாகரிகம் வளர்த்தவன்; இயற்கையை நேசித்துக் கடவுளாக வழிபட்டவன்; விலங்குகளையும் சமமாகப் பாவித்தவன்; பெண்களைத் தெய்வமாக போற்றியவன்; செல்விருந்தோம்பி, வருவிருந்து காத்திருந்தவன்; கற்றவைப் போற்றி, மற்றவை உணர்ந்தவன்.

காலங்கள் அறிந்து, பயிர் செய்து, விவசாயம் வளர்த்தவன்; தொழில்களை மதித்து மேம்படுத்தியவன். மருத்துவம், வானியல், தர்க்கம் என்று பல சாஸ்திரங்களையும் அறிந்து, பிறரை மதித்து நடந்தவன்; பெரியோர் வாக்கை வேத வாக்கு எனக் கொண்டு அடக்கம் காத்தவன். வேதம், இலக்கியம் என சகலத்தையும் படித்தறிந்து, வாதங்கள் புரிந்து, பேதம் அகற்றியவன். பிறன் மனை நோக்கா பேராண்மையாளன் என்று பல பரிமாணங்களில் பரிமளித்தவன் மானுடன்.தன் எல்லைக்குள், எல்லா வளங்களும் கொண்டு, நற்பண்புகளுடன், நிறைவான மனதுடன் வாழ்ந்து வந்தவன், சிறிது சிறிதாக தன் எல்லைகளை விரிவுபடுத்தி, பல்வேறு கலாசாரங்களை தெரிந்து, அறிவை விசாலமாக்கிக் கொள்ள ஆரம்பித்தான்.

அந்த அனுபவ அறிவும், கல்வி அறிவும், அவனை மேம்படுத்திக் கொள்ள உதவின; நாகரிகம் வளர்ச்சி காண ஆரம்பித்தது; வசதிகள் பெருகின; மருத்துவம், அறிவியல் என எதிலும் பெரும் வளர்ச்சி கண்டது, மனித குலம். பூமியின் எல்லையையும் தாண்ட ஆரம்பிக்கும் அளவுக்கு சிறந்தான் மனிதன்.ஆயினும், மனித குலம் இன்று, சிறப்பான உச்சத்தில் இல்லை என்பது தான் உண்மை. மமதை ஏறி, தன்னை இழந்து கொண்டிருக்கிறான் மனிதன். நதிகள், மலைகள், எல்லைக் கோடுகள் என, எல்லாவற்றிற்கும் நாடுகள் சண்டை பிடிக்கின்றன; அரசுகள் ஒத்துப்போவதில்லை.


மனிதம் துறந்து நிற்கிறோம்தானே உயர்ந்தவன் என்ற அகம்பாவத்துடன், தான்தோன்றித் தனமாக அலையும் போக்கு, ஒவ்வொரு மனிதனிடமும் காணப்படுகிறது. இதை எல்லாம் காணும் போது, இந்த வளர்ச்சி உண்மையில் நம்மை, பின் நோக்கி அழைத்துச் சென்றுள்ளதோ என்று தோன்றுகிறது. கல்வி, தொழில், வாழ்வு என எல்லாவற்றிலும் மேம்பாடு காண்பதாக நினைத்து, நாகரிகம் இழந்து, தார்மீகம் மறந்து, மனிதம் துறந்து நிற்கிறோம்.இவ்வுலகம் என்பது, அண்ட சராசரத்தில் ஒரு துகளே. அதில் மனித குலம் என்பது ஒரு சிறு உயிரினம். மிருகங்கள், பறவைகள், தாவரங்கள் போன்ற பிற உயிரினங்களும் தத்தம் பங்கை, இதில் கொண்டுள்ளன.

ஆனால், மனிதன் தமக்கு மட்டுமே கிடைத்துள்ளதாக நம்பியுள்ள ஆறாம் அறிவு என அழைக்கப்படும் பகுத்தறிவை, எவ்வாறு பயன்படுத்திக் கொள்கிறான் என்று ஆராய்கையில், அந்த அறிவு, உண்மையில் அவனது மேன்மைக்குப் பயன்படுகிறதா, இல்லை, அவனையே அழித்துக்கொள்ள வழிவகுக்கிறதா என்ற சந்தேகமே எழுகிறது.நதிகள், மலைகள், காற்று என, இயற்கை நமக்கு தந்த அனைத்து கொடைகளையும், சிறிதும் தயக்கமின்றி மாசுபடுத்தி வருகிறோம்.

எதையும், எவரையும் அழித்துத் தான் முன்னேற வேண்டும் என்றால், அதை செய்யத் தயக்கம் காட்டுவதில்லை. காட்டை அழித்து, மிருகங்களைக் கொன்று, பறவைகளைத் துன்புறுத்தி, தம் இனம் தான் பெரியது, வாழத் தகுதியானது, மற்ற இனங்கள் அழிக்கப்பட வேண்டும் அல்லது அடிமைப் படுத்தப்பட வேண்டும் என்று ஆரம்பித்தான்.இன்று, தமது இனத்திலேயே நாடு, மொழி, ஜாதி, மதம் என்ற பிரிவுகளைக் கண்டுபிடித்து, அடித்துக் கொள்ளவும், அழித்துக் கொள்ளவும் ஆரம்பித்து, எங்கு போகிறோம் என்று தெரியாமல் அலைந்துக் கொண்டிருக்கிறான்.
சரித்திரங்கள் நமக்கு சொல்லும் பாடங்கள் ஏராளம். மனிதனுக்கு வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொள்வதற்கு எத்தனையோ பாடங்களும், அதற்கான சந்தர்ப்பங்களும் உண்டு. பிறப்பு முதல் இறப்பு வரை, எல்லா அனுபவங்களும் நமக்காகக் கற்றுத்தரக் காத்திருக்கின்றன. முன்னோர் பலவற்றை உணர்ந்தறிந்து நமக்கு விட்டுச் சென்றுள்ளவை ஏராளம். அவர்கள் போதிக்க மறந்தவற்றையோ அல்லது நாம் கற்க மறந்ததையோ நமக்கு ஏற்படும் அனுபவங்கள் உணர்த்துகின்றன. நாம் அதையும் அலட்சியம் செய்து, 'எல்லாம் அறிவோம்' என்ற இறுமாப்புடன் அலையும் போது, இயற்கை நம்மைப் பார்த்து சிரிக்கிறது.இயற்கைப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம், 'இனி, வாழ்க்கையில் நாலு பேருக்கு உதவி, நன்மைமட்டும் செய்து, நற்பெயருடன் வாழ்ந்து செல்வோம்...' என்று, உறுதி எடுத்துக் கொள்கிறோம். பிரசவ வைராக்கியம், மயான வைராக்கியம் போல அவை மாறி விடும். உப்பும், காரமும், உணவுடன் உட்செல்லச் செல்ல, அவை மறந்துவிடும். அதுபோன்று, இந்த உறுதியும், சில நாட்களில் தளர்ந்து விடுகிறது.
ஆரோக்கியமான போட்டிபணம், வசதி, மேலும் வசதி என, ஆசைகள் மீண்டும் விரியத் துவங்குகின்றன. வசதி என்பது, தேவைகளின் அடிப்படையில் என்பது மறைந்து, அதுவே அடிப்படை தேவை என்றாகிவிட்டது. அடுத்தவனை அடித்தாவது, அவனை விட உயர வேண்டும் என்ற அவல நிலைக்கு, 'போட்டிகள் உலகம்' என்ற மாயபிம்பம் நம்மைக் கொண்டு சென்றுள்ளது. ஆரோக்கியமான போட்டி என்பது, அறிவை வளர்க்கும். ஆனால், இங்கு, அழிவை நோக்கி செலுத்தப்படுகிறோம். அறிவு பூர்வமாக சிந்தித்து செயல்படும் முறையிலிருந்து, மாயைகளால் கட்டுப்பட்டு, கண்களாலும், மனதாலும் செலுத்தப்படுகிறோம். மனம் கட்டுப்பாட்டில் இருந்தால், சரியான வழியில் செல்லலாம். ஆயினும், மதியை மீறி செயல்படும் மனதால், ஆக்கிரமிக்கப்படுகிறோம்.

தேவைக்கு அதிகமான செலவுகள் செய்ய யோசிப்பதில்லை. வரவுக்கு மீறினாலும், ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவேண்டும் என்ற வெறியால் துாண்டப்படுகிறோம்; அழிவை நோக்கி நகர்கிறோம். இன்று, தனிமனித ஒழுக்கம், நேர்மை, நீதி, நியாயம் என்பதெல்லாம் அருகி, ஒழுங்கின்மை, சுயநலம், பொது வாழ்வில் ஊழல், ஆடம்பரம், அநியாயம், அடாவடித்தனம் என்பன தலை துாக்கியுள்ளன. பணமே பிரதானம் என்ற பேராசையுடன் தனக்கும், தன் குடும்பத்திற்கும், பல தலைமுறைகளுக்குத் தேவையான சொத்து சேர்ப்பதே குறி என்று அலைபவனே, தலைவனாக கொண்டாடப்படுகிறான்.
அவனது ஆடம்பரங்கள், அவனை எப்போழுதும் வெளிச்சத்தில் வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வெளிப்படுத்தப்படுகின்றன. பணத்தால் பெற முடியாது என்று கூறப்படும் கல்வியையும், பட்டங்களையும் கூட விலைக்கு வாங்கி, கல்வி பெற்று விட்டதாகக் காட்டிக் கொள்கிறான். தகுதியற்ற போதும், பதவிகளை எளிதாக பெற்று விடுகிறான். தகுதியிருந்தும், கல்வி, வேலை முதலியன மறுக்கப்பட்டவர்களாக பலர் அலையும் அவல நிலை நிலவுகிறது.

இன்றும் வாய்ப்பு கிட்டாத பலர், தவறானவனுக்கு அடிமைகள் ஆகி, இது தான் வாழ்க்கை என, மதிமயங்கி வாழ்ந்து வருகின்றனர்.

நாகரிக வளர்ச்சி என்ற போர்வையில், அநாகரிகச் செயல்கள் நடக்கின்றன. 'கடவுள் கிடையாது; ஆனால், நான் தான் தொழுபட வேண்டியவன்' என்று கூறாமல் கூறும் அரசியல்வாதிகள் நடமாடுகின்றனர். அதுபோல, 'கடவுளை மறுப்பேன்; ஆனால், புதிதாகத் தோன்றிய தலைவனை தொழுதேற்றுவேன்' என, துதி பாடும் தொண்டர்களை முன்னேற விடாமல், அடிமைகளாகவே வைத்திருக்கும் அவல அரசியல் நடத்தும் தலைவர்கள் நிறைந்து விட்டனர்.'பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள்' என்பர். மெத்தப் படித்தவர்களும், இதைத் தட்டிக் கேட்காமல் பொறுத்துச் செல்கின்றனர்.

பயந்து, ஒதுங்கச் செய்யும் படிப்பு, எதற்குப் பயன்படும்... நியாயம் எடுத்துச் சொல்லும் தைரியம் தரா படிப்பு, ஏட்டுச் சுரைக்காயாகும். தோன்றி மறையும் நீர் குமிழிகளாக நாம் இருக்கிறோம் என்றால் என்ன பயன்?போதும் இந்த அவலநிலை. 'நாமார்க்கும் அடிமை அல்லோம்; நமனை அஞ்சோம்' என்று, அப்பர் பெருமான் கூறியதை நினைவு கொண்டு, ஆடம்பரம் காட்டும் அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினருக்கு அஞ்சிடாமல், அவர்களது பகட்டுகளுக்கு மயங்காமல், நம் நோக்கங்களில் தெளிவுடன், அமைதியாக இயங்குவோம். யாருடனும் ஒப்பிட்டுக் கொள்ளாமல், சரியான பாதையில் எளிமையுடன், நேர்மையாக நடந்தால் மனதும், வாழ்வும் சிறக்கும். பொறாமை என்ற தீயில் வேகாமல், பெருந்தன்மை என்ற வேள்வியில் நம்மை அர்ப்பணித்துக் கொண்டால், உலகம் நன்மை பெறும்.

அவரவர் கடமையை அதற்கான விதிகளுடனும், ஒழுங்குகளுடனும் மேற்கொண்டால், சர்ச்சைகள் இன்றி, சமரசம் நிலவும். அடுத்தவர் சுதந்திரத்தில் தலையீடுயின்றி, அதே சமயம், தவறுகளைத் தட்டிக்கேட்கும் தார்மீகத் துணிச்சலுடன் வாழப் பழகுவோம். பணம், பதவி, அதிகாரம் ஆகியவற்றால் நம்மை யாரும் அடிமைப்படுத்திவிடாமல், ஒற்றுமையாய், துணிச்சலுடன் முன்னேற வேண்டும். சக மனிதனை மதித்து, நேசித்து வாழ்வதுடன் இயற்கையை நேசிப்பதும் அவசியம். முன்னேற்றம் என்ற பெயரில் இழந்துள்ள ஏராளச் செல்வங்களை மீட்டெடுக்க வேண்டியதும் அவசியம். மானுடம் தழைக்க, மாறுதல் தேவை. அது நம்மை செம்மைப்படுத்தும் மாற்றமாக இருக்க வேண்டும். நம்மை தடம் புரட்டியவற்றை இனி புறந்தள்ள வேண்டும். அது பழக்கமாயினும், சரி சகமனிதனாயினும் சரி. உலகிலுள்ள அனைத்து இனங்களும், அவற்றிக்கான இடத்தை பெற்றிருந்தால் தான், சரிவிகித வளர்ச்சியாகும். ஒன்று மட்டும் வளர்ந்தால், அது வீக்கம்.


ஆக்க பூர்வமாக செயல்படுவோம்எது நாகரிகம், எது வளர்ச்சி என்பன சரியான அளவீடுகளால் உணரப்படவேண்டும். வளர்ச்சியும், பலமும் அனைவருக்கும், அனைத்திற்கும் பொது என்று உணர்வோம்.இன்று நிலவும் அசாதாரண சுழல், நமக்கு ஒரு விதத்தில் வரப்பிரசாதமே. நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொண்டு, தவறுகளைத் திருத்திக்கொண்டு, செழுமைப்படுத்திக் கொள்ள கிடைத்துள்ள வாய்ப்பு.
நதிகள் துாய்மை, காற்று மாசு குறைப்பு, இயற்கை போற்றுதல் ஆகியவை பிரதானம் பெற வேண்டும். இயற்கையுடன் இணைந்து வாழுதல் நமக்கு சக மனிதனையும் மதித்து, நேசித்து வாழும் முறையை கற்றுத் தரும். இதுவே, அறிவார்ந்த நம் முன்னோரின் தெள்ளிய வாழ்வியல். அதை பழகுவோம். நம் மேம்பட்ட அறிவை அழிவிற்குப் பயன்படுத்தாமல், ஆக்க பூர்வமாக செயல்படுவோம். ச.பாலசுப்பிரமணியன்பொதுத்துறை வங்கி ஊழியர்இ - மெயில் balucbeu@gmail.com-

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
04-ஜூலை-202019:06:19 IST Report Abuse
Endrum Indian இப்போ தான் மனிதர்களே இல்லையே இந்த உலகத்தில் நாடு இனம் மதம் மொழி என்று பிரித்து பாகுபாடு செய்பவர்கள் மனிதர்கள் ஆகவே முடியாதே
Rate this:
Cancel
A.Gomathinayagam - chennai,இந்தியா
04-ஜூலை-202014:00:37 IST Report Abuse
A.Gomathinayagam ஒரு மனிதனை தனது சக மனிதனாக பார்க்காமல் அவன் எந்த சமூகம், மதம், கட்சி சேர்ந்தவன் என கூறுபோட்டு பார்க்கும் நிலை மாறினால் தான் மானிடம் உயிர் பிழைக்கும் .
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
04-ஜூலை-202010:11:56 IST Report Abuse
vbs manian நீங்கள் குறிப்பிட்ட தமிழனின் உயர்ந்த அடையாளங்கள் எல்லாம் இன்றைய பகுத்தறிவு சுனாமியில் அழிந்து போய்விட்டன. பூங்காவனம் பாலைவனம் ஆகிவிட்டது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X