புதுடில்லி: எல்லை பிரச்னை குறித்து பிரதமர் மோடியின் எந்த உரையிலும் சீனாவின் பெயரை குறிப்பிடவில்லை என்றும், அதன் மர்மம் என்னவென்றும் காங்., எம்.பி., சிதம்பரம் கேள்வியெழுப்பியுள்ளார்.
கடந்த மாதம், 15ம் தேதி, லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு, இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்தது. இந்தத் தாக்குதலில், இந்திய வீரர்கள், 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். சீன தரப்பில், 43க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். ஆனால், சீனா இதை மறுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்கனவே நிலவி வந்த எல்லை பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இதையடுத்து, சீன ஆக்கிரமிப்பு தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், பிரதமர் மோடி, நேற்று (ஜூலை 03) திடீர் பயணமாக லடாக் சென்றார். அவருடன், முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி நரவானே உடன் சென்றனர். லே பகுதியில், தரைமட்டத்திலிருந்து, 11 ஆயிரம் அடி உயரத்தில், உள்ள நிமு பகுதிக்கு, மோடி சென்றார். அப்போது, அங்கிருந்த வீரர்களிடையே உரையாற்றிய மோடி, ‛எல்லையை விரிவுபடுத்த துடிக்கும் நாடுகள், அதை கைவிட்டு, வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதி இந்தியாவுக்கு சொந்தமானது இதில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும், உறுதிபட தெரிவித்தார்.

இது குறித்து காங்., எம்.பி., ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: முதல்வர்கள் கூட்டத்தில் உரை, தொலைக்காட்சியில் உரை, லடாக்கில் ஜவான்கள் மத்தியில் உரை என்று எந்த உரையிலும் 'சீனா' என்று பிரதமர் மோடி குறிப்பிடுவதில்லையே, இதன் மர்மத்தை யாராவது விளக்குவார்களா? இந்திய நிலப்பகுதியில் ஆக்கிரமித்தது சீனத் துருப்புகளா அல்லது சந்திரமண்டலத்திலிருந்து வந்த அந்நியர்களா? பிரதமர் மோடி அஞ்சுகிறார் என்று சொல்லமாட்டேன், ஆனால் தயங்குகிறார் என்று சொல்வேன். ஏன் இந்தத் தயக்கம்?. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE