கோவை வனப்பகுதியில் 3 மாதத்தில் 12 யானை உயிரிழப்பு: வனத்துறையினர் அதிர்ச்சி| 12 elephants found dead in Coimbatore forest division in 3 months | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோவை வனப்பகுதியில் 3 மாதத்தில் 12 யானை உயிரிழப்பு: வனத்துறையினர் அதிர்ச்சி

Updated : ஜூலை 04, 2020 | Added : ஜூலை 04, 2020 | கருத்துகள் (4)
Share
elephant, forest, death, coimbatore, elephant death, கோவை, வனப்பகுதி, யானை,  வனத்துறை, உயிரிழப்பு, பலி
5

கோவை: கோவை வனப்பகுதியில் மூன்று மாதங்களில், 12 யானைகள் பலியானது, வனத்துறையினர், பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் சில நாட்களாக, நோயுற்ற யானைகளும், காயம்பட்ட யானைகளும், வனப்பகுதியில் ஆங்காங்கே விழுந்து கிடப்பதும், சிகிச்சை பலனின்றி இறந்து போவதுமான செய்திகள், வனத்துறையினர், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. பல்லுயிர் பரவலுக்கு உறுதுணையாக இருந்து, வன வளத்தை உறுதிப்படுத்தும் விலங்கான யானைகளின் தொடர் மரணம், பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதுவும், கோவை வனப்பகுதியில், மூன்று மாதங்களில் மட்டும், 12 யானைகள் பலியாகி விட்டதாகவும், தீவனம், தண்ணீர், சத்து பற்றாக்குறையே யானைகளின் உயிரிழப்புக்கு பிரதான காரணமாக உள்ளதாகவும், ஆர்வலர்கள் கூறுகின்றனர்.


'நிபுணர் குழு அவசியம்'


ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி பத்ரசாமி கூறியதாவது:மின் தாக்குதல், துப்பாக்கிச்சூடு, 'அவுட்டுக்காய்' எனப்படும் நாட்டு வெடி, ரயிலில் அடிபடுதல் போன்ற சம்பவங்களில் யானை இறந்தால், அது அசாதாரணமான நிகழ்வாக கருதப்பட்டு, வனத்துறை நடவடிக்கை எடுக்கிறது. பவானி சாகர் அணைப்பகுதி, கேரளா, தமிழகம், கர்நாடகா என மூன்று மாநிலங்களில் வசிக்கும் யானைகள், ஒன்று சேருமிடம். இங்கு வரக்கூடிய யானைகளில், வயதில் முதிர்ந்தவை நோயுற்று இறப்பது சாதாரணமானது தான்.

எனினும், நோய் வராமல் தடுக்க வேண்டியது, ஏன் அந்த நோய் வந்தது என்று ஆராய வேண்டியது ஆகியவையும் செய்யப்பட வேண்டிய பணிகளே. காட்டு யானை, நோய் முற்றி, நடக்க முடியாமல் கீழே விழுந்தபிறகு தான், அது நோயுற்ற விஷயமே தெரியவரும். அதன்பிறகு தான், சிகிச்சை அளிக்க முடியும்.அனைத்து யானைக்கூட்டத்துக்கும், ஆள்போட்டு கண்காணிப்பதும், சிகிச்சைஅளிப்பதும் சாத்தியமற்றது. இதில், இளம் வயது யானைகள் நோயுற்று இறந்திருந்தால், நிபுணர் குழுவை நியமித்து உரிய ஆராய்ச்சி செய்ய வேண்டியது அவசியம்.இவ்வாறு பத்ரசாமி கூறினார்.


latest tamil news
'ஆய்வு நடத்த திட்டம்'


மாவட்ட வன அலுவலர் வெங்கடேசன்கூறியதாவது:கடந்த ஜனவரியில் இருந்து மேட்டுப்பாளையத்தில் மூன்று யானைகள் இறந்துள்ளன. அவற்றில், இரண்டு யானைகள் தந்தத்தால் குத்திய காயத்துடன் இறந்துள்ளன. ஒரு யானை உடல் மெலிந்து இறந்துள்ளது. சிறுமுகை சரகத்தில் மட்டும், ஆறு யானைகள் உடல் மெலிந்து இறந்துள்ளன.

சத்தியமங்கலம், பவானி சாகர், மேட்டூர் போன்ற யானை நடமாட்டம் அதிகமுள்ள வனச் சரகங்களிலும், இதேபோன்று யானைகள் உடல் மெலிந்து, இறந்த சம்பவங்கள் சமீபத்தில் நடந்துள்ளன. அனைத்து யானைகளின் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் வாங்கி, நிபுணர் குழுவினரின் ஆய்வுக்கு அனுப்பவும், உரிய தீர்வு காணவும், வனத்துறை முயற்சி மேற்கொண்டு வருகிறது.இவ்வாறு, மாவட்ட வன அலுவலர் கூறினார்.


latest tamil news

ஆராய விஞ்ஞானிகள் குழு

கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் தேபாஷிஷ் ஜனா கூறியதாவது:கடந்த பத்தாண்டுகளில் யானைகள் இறப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. பவானி சாகர் அணைப்பகுதி, யானைகள் காலம் காலமாக வந்து செல்லும் பாதை.வறட்சி காலத்தில், காட்டுக்குள் தீவனம் குறைந்திருப்பது உண்மை தான். வேறு வழியில்லாத யானைகள், வேலி முட்செடிகளை தீவனமாக உட்கொள்வதும், அவை உடல் நலிவுக்கு காரணமாக அமைந்து விடுகின்றன. இப்படி நலிவுற்ற யானைகளே, அதிகம் உயிரிழக்கின்றன.

தந்த வேட்டைக்காக யானைகள் கொல்லப்படும் நிலை தற்போது இல்லை.தற்போதைய நிகழ்வுகளில், மின் தாக்குதல் எதுவும் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது. மற்ற காரணங்களும் ஆய்வு செய்யப்படுகின்றன. இறந்த யானைகளின் உள் உறுப்புகள், ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.பவானி சாகர் அணையின் நீர்த்தேக்கப் பகுதியில், சிலர் பயிர் சாகுபடி செய்துள்ளனர். தண்ணீர் தொட்டிகளில், ஏதேனும் விஷம் கலந்துள்ளதா என்று அறிவதற்காக, ஆய்வக பரிசோதனை, தண்ணீர் மாதிரி பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.யானைகள் மரணம் குறித்து ஆய்வு செய்வதற்காக, உயர் மட்ட விஞ்ஞானிகள் குழுவினரை அனுப்பி வைக்கும்படியும், வனத்துறையிடம் கேட்டுள்ளோம்.இவ்வாறு, தேபாஷிஷ் ஜனா தெரிவித்தார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X