பாட்னா : பீஹாரின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மின்னல் தாக்கியதில் 20 பேர் வரை பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் உத்திரப்பிரதேசம், பீஹார், அசாம் மற்றும் மேகாலயா போன்ற மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் பீஹாரின் பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாநிலத்தில் தற்போது பலத்த மழை பெய்து வருகிறது. பீஹார் தலைநகரான பாட்னாவில் இன்று மதியம் அதிகமாகவே மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. நேற்று ஒரே நாளில் பீஹாரின் 5 மாவட்டங்களில் இருந்து 15 பேர் மின்னல் தாக்கி பலியானதாக கூறப்படுகிறது. அவர்களில், வைசாலியில் 6 பேர், லகிசரையில் 2 பேர், சமஸ்திபூரில் 3 பேர், கயா, பாங்கா, நாலந்தா மற்றும் ஜமுய் மாவட்டங்களில் தலா ஒருவரும் அடங்குவர் என பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்தது.
நேற்று முன்தினம், சுமார் 8 மாவட்டங்களில் இருந்து 26 பேர் மின்னல் தாக்கி பலியாகினர். இதில் பாட்னாவில் 6 பேர், கிழக்கு சம்பாரனில் 4 பேர், சமஸ்திபூரில் 7 பேர், கதிஹாரில் 3 பேர், சிவார் மற்றும் மாதேபுராவில் தலா 2 பேர் மற்றும் பூர்னியா மற்றும் மேற்கு சம்பாரன் மாவட்டங்களில் தலா ஒருவர் அடங்குவர். கடந்த ஒரு வாரத்தில் மாநிலத்தில் மின்னல் தாக்கியதால் 100 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை, பீகார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் மின்னல் விழுந்ததில் 11 பேர் இறந்தனர், ஜூன் 26 அன்று மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 96 பேர் உயிரிழந்தனர்.

தொடர்ந்து, மாநிலத்தின் பாட்னா, போஜ்பூர், வைசாலி மற்றும் நாலந்தா உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இயற்கையின் தற்போதைய காலநிலை சீரற்றதாக இருப்பதால் மின்னல் போன்ற பாதிப்புகளில் இருந்து பாதுகாக்க, மக்கள் வீட்டினுள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பேரிடர் மேலாண்மை வழிகாட்டிய அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் என மாநில முதல்வர் நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE