'கொரோனா, கொரோனா...' என்று, முக கவசத்திற்கு உள்ளே இருந்து, ஒலித்துக் கொண்டிருக்கிறது, இந்த உலகம். இந்த கொள்ளை நோய் தொற்று, உலகத்தையே பயமுறுத்தி, வரலாற்றை, கொரோனாவிற்கு முன் என்றும், கொரோனாவிற்கு பின் என்றும் மாற்றி விட்டது. கொரோனா என்ற வைரஸ் தொற்று கிருமி மட்டுமே, இப்போது நம்மை ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்; அது தான் இல்லை. நமக்கும், மருத்துவ உலகத்தின் கண்களிலும் படாமல், லட்சக்கணக்கான நச்சுயிர் கிருமிகள், நம்முடன் உறவாடி கொண்டே தான் இருக்கின்றன.
கடந்த, 1990ம் ஆண்டுகளில், சர்வதேச அளவில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்குப் பிறகு, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உயர் ரக, கலப்பின கோழிகள் மூலம், 'கம்போரா வைரஸ்' என்ற, நச்சுயிர் தாக்கம், நம் நாட்டிற்குள் ஊடுருவியது; நம் நாட்டின் கோழிப்பண்ணைகளை அழித்தது. தெரிந்தோ, தெரியாமலோ பரவிய இந்த நோய், இன்னும், கோழி வளர்ப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டு தான் இருக்கிறது. அதற்கான தடுப்பூசியும் இறக்குமதி செய்யப்பட்டு, நோய் தாக்க காலங்களில், அனைத்து கோழிப் பண்ணைகளிலும், ஐ.பி.டி., என்ற தடுப்பூசி போடப்படுகிறது. அது போன்று தான், மனித சமுதாயம், ஆரம்ப காலங்களில் பிளேக், காலரா, சார்ஸ் போன்ற வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டது. அக்காலங்களில் மருத்துவ தொழில்நுட்பம் இந்த அளவிற்கு வளரவில்லை.
அந்த கால கட்டங்களில் நம் முன்னோர் என்ன பாடுபட்டிருப்பர் என்று யோசித்தால், இப்போதும் பயம் தொற்றிக் கொள்ளும். இப்போது, நம் அனைவருக்கும், எதிர்காலம் எப்படியிருக்குமோ... பொருளாதாரம் எப்படி அமையுமோ... குழந்தைகளின் வாழ்வு, கல்வி, வியாபாரம், தொழில் எப்படி அமையுமோ... என்ற பல கேள்விக்கணைகள், நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக காட்சி அளிக்கின்றன.கவலை வேண்டாம்; இதுவும் கடந்து போகும்.ஒரு கால கட்டத்தில், சிறிய நோய்களின் சிகிச்சைகளுக்கு மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது. சாதாரண காய்ச்சலுக்கு கூட, உடனே மருத்துவரை அணுகி, ஆலோசனை பெற்று, சிகிச்சை எடுத்துக் கொண்டோம்.
தட்ப, வெப்ப மாற்றத்தால் பரவும் அம்மை நோய், டைபாய்டு, பிற குறைபாடுகளான ரத்த அழுத்தம், சர்க்கரை நோயாளிகள் கூட்டம் மருத்துவமனைகளில் நிரம்பி வழிந்தது. தற்போதைய சூழலில், அந்த கூட்டம் எங்கே போனது; எல்லாமே கொரோனா என்ற, கொள்ளை நோயின் தாக்கத்தால் மறக்கடிக்கப்பட்டு விட்டது. அதுபோல, கொரோனாவிலிருந்து விடுபட்டு, வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டிய கால கட்டத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
உலகளாவிய அனைத்து நாடுகளுக்கும், அன்றாட நடைமுறை வாழ்க்கையில் மாற்றம் தேவை. கொரோனா போன்ற நோய்கள் மட்டுமின்றி, இயற்கை வளங்கள், மாறுபட்ட சூழல், மக்கள் நெருக்கம், நலிவடைந்த விவசாயம், உணவு உற்பத்தியில் பின்னடைவு, புதிய நோய்க் கிருமிகள் தாக்கம் போன்றவற்றால், மனித சமுதாயத்தின் வாழ்திறன் குறைய வாய்ப்பு உள்ளது.
எனினும், இனிவரும் காலச் சக்கரத்தில், நிச்சயமாக ஒரு பெரும் புத்துணர்ச்சி ஏற்படும் நிலை வரும். அதை எதிர்நோக்கியதாக நம் பயணம் அமைய வேண்டும்.
மன தைரியம்
உளவியல் ரீதியாக, இரண்டு காரியங்களை முன்னிறுத்தி, மனித சமுதாயம் செயல்படும்போது, மாற்றங்கள் விரைவில் ஏற்பட வாய்ப்புள்ளது. ஒன்று, நேர்மறை சிந்தனை. இரண்டாவது, பிரச்னைகள் நிறைந்த வாழ்க்கையை புரிந்து, அதை சார்ந்து செல்லுதல் அல்லது புதிய சூழலுக்கு பழக்கப்படுத்திக் கொள்ளுதல் ஆகும்.இந்த சூழலில், ஒவ்வொரு மனிதனுக்கும், மனோ தைரியம் வர வேண்டும். அந்த மன தைரியம், நேர்மறை சிந்தனையை ஆளுமை படுத்தப்பட வேண்டும். முக கவசம் அணிதல், சமுதாய இடைவெளி, கைகளை சுத்தமாக பராமரித்தல் போன்ற சுகாதார, ஆரோக்கிய செயல்பாடுகள், இனி அன்றாட வாழ்க்கையில், அவசியம் செயல்படுத்த வேண்டும்.
நேர்மறை சிந்தனையுடன், அனைவரும் செயல்பட வேண்டும். மன தைரியத்தை விட்டு, எதிர்மறையாக சிந்தித்தால், ஆபத்தான விளைவுகள் நம்மை நிழல் போன்று தொடரும். நேர்மறையாக சிந்திப்பது எளிதல்ல; தகுந்த பயிற்சி இருந்தால் தான் அது வாய்க்கும். இன்றைய சூழலில், தனிமனித பொருளாதார மேம்பாட்டை உயர்த்த முக்கிய வழி, தேவையற்ற செலவை குறைத்தல். நிறைவான, உற்பத்தி இல்லாத காரணத்தால், இனி தேவையற்ற செலவை குறைக்க வழி முறைகளை கண்டறிய வேண்டும். நம் சிந்தனை, செயல்பாடு எல்லாம், இனி வரும் காலங்களில் மாறுபட்டதாக இருக்க வேண்டும். நம் சமுதாயத்தில், தேவையான அத்தியாவசிய செலவு, தேவையற்ற செலவு என இரண்டு உள்ளது.
இவற்றை மனதில் கொண்டு, வாழ்க்கை முறையை மாற்றி அமைக்க வேண்டும். ஒரு காலத்தில் விழாக்கள், திருமணம், பண்டிகைகள், அரசியல், சமயம் சார்ந்த கூட்டங்கள் என்று ஊர் கூடி கொண்டாடிய மனிதன், இன்று, அனைத்தையும் சிக்கனமாகவும், கூட்டம் அதிகம் சேராமலும் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகிஉள்ளான்.சமீப நாட்களில், நகர்ப்புறங்களில் நடக்கும் திருமணங்களில் குறைவான உறவினரை வைத்து, விருந்து அளித்து, உபசரித்து அனுப்புகின்றனர். பூச்செண்டுகள், பரிசுகளை கொடுத்து மணமக்களை வாழ்த்துகின்றனர். திருமண விழாக்களில், மொய் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய்விடுமோ என்ற நிலை காணப்படுகிறது.
துக்க வீட்டில் கூட, ஆடம்பர செலவுகளை குறைக்கும் வண்ணம் சூழல் ஏற்பட்டுவிட்டது. இனி வரும் காலங்களில், அனாவசியமான, ஆடம்பர செலவுகளை குறைத்து, தேவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தால், பொருளாதாரம் சீர் பெற வாய்ப்புகள் ஏற்படும்.சமூக சுகாதார சீரமைப்பு
சமூக சுகாதார சீரமைப்பில் கவனம் செலுத்தக் கூடிய முக்கியமான செயல்பாடுகள் அவசியம். வணிக விற்பனை கூடங்களில், சமூக இடைவெளி அவசியம். அந்த இடங்களில், சுகாதாரம் மேம்படுத்த வேண்டும்.பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பறைகள், சரியான முறையில் சுகாதாரத்துடன் செயல்பட வேண்டும். சுற்றுப்புறச்சூழல் மாசுபடுவதை தவிர்த்தால், நோய்க்கிருமிகள், இச்சூழலை வாழ்வாதாரமாக அமைத்துக் கொள்ள முடியாது.
உணவு பழக்க வழக்கம்
நம் நாட்டின் தட்ப, வெப்ப நிலை, கிராமங்கள், நகரங்களில் வாழும் மக்கள் நிலை, அவர்கள் செய்யும் பணிகளை பொறுத்தே, உணவு பழக்க வழக்கங்கள் அமைய வேண்டும். மனித நோய் எதிர்ப்பு சக்தி, துரித உணவு பழக்க வழக்கங்களால் குறைந்து வருகிறது. இயற்கையாக உருவாக வேண்டிய நோய் எதிர்ப்பு திறனை, செயற்கையாக, மருந்துகளால், நோய் எதிர்ப்பை உடம்பில் உருவாக்குகிறோம்.பழைய கஞ்சி, கம்பஞ்சோறு, தானிய உணவுகள், வேக வைத்த பாசிப் பயிறு வகைகள், எங்கோ போய் மறைந்து கொண்டன. உளுந்தங்கஞ்சி எங்கே; சுக்கு காப்பி, கருப்பட்டி காபி எங்கோ சென்று விட்டன; பதநீர் பதுங்கிக் கொண்டது. ஆவியில் வேகவைத்த கொழுக்கட்டை எங்கேயோ மறைந்து விட்டது.எனவே, ஆரோக்கியத்தை திரும்பப் பெற, நம் முன்னோர் காட்டிச் சென்ற, பழமையான உணவுகளை நோக்கிச் செல்ல வேண்டிய காலகட்டம் இது.
உடல் உழைப்பு
உடல் உறுப்புகளின் இயக்கங்கள் சீராக செயல்பட, உடல் உழைப்பு அவசியம். உடற்பயிற்சி, யோகா, வீட்டிற்குள் அமைந்திருக்கும் நடை பயிற்சி சாதனம், நவீன முறை உடற்பயிற்சி கூடங்கள் இருந்தாலும், மனிதனின் இயல்பான வாழ்வில் ஒன்றித்துள்ள நடைபயிற்சி, பொழுதுபோக்காக மற்றுமின்றி, அன்றாட மனிதனின் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற வேண்டும்.மிதிவண்டி பயணம், மோட்டார் பயணமாக முன்னேறிவிட்டது. ஐம்புலன்கள் செயல் திறன் அதிகரிக்க, உடல் உழைப்பு தேவை. புழக்கடையில் மண்வெட்டியால் வெட்டி, தோட்டம் அமைத்தல் போன்ற பழைய பழக்கங்களை மறந்து விட்டோம்.இனி, அவற்றை பின்பற்றுவோம்.ஒருங்கிணைந்த சோவியத் ரஷ்யாவின் கடைசி அதிபர், மைக்கேல் கோர்பசேவ், அந்நாட்டு மக்களிடையே உரையாற்றும் போது, 'எதிர்காலத்தை எதிர்கொள்வதை விட, அதை உருவாக்குவது தான் சாலச் சிறந்தது' என்றார். இது ஒரு, உண்மையான கூற்று. தற்போது, கொரோனாவால் நோயுற்றுள்ள உலக சமுதாயம், அதிலிருந்து மீள வேண்டும். அது, தானாக நடக்காது. ஒவ்வொரு மனிதனாக முயற்சி செய்து, ஒட்டுமொத்த பூமிக்கோளமும் மாற வேண்டும்.
அதற்கு, மாற வேண்டும்; முன்னேற வேண்டும் என்ற எண்ணம், உத்வேகம் அனைவருக்கும் அவசியம்.நோய் முழுதும் மறைந்த பின், இந்த போராட்டத்தை வைத்துக் கொள்வோம் என்றில்லாமல், தொற்று இருக்கும் இக்காலத்திலேயே, அதனுடன் சேர்ந்து, போராடி வாழ, பழகிக் கொள்ள வேண்டும். இது, சேறும் சகதியும் நிறைந்த, பள்ளமான சாலையில், பைக் ஓட்டி செல்வது போன்றது தான். எனினும், நாம் போய் சேர வேண்டும்; அதற்காக போராட வேண்டும். இந்த வழிகள் தான் என்றில்லாமல், எந்தெந்த வழிகளை பின்பற்றினால், எவ்வித சேதமும், மனித குலத்திற்கு ஏற்படாது என்பதை ஆராய்ந்து அறிந்து, அதை பின்பற்ற வேண்டும்.சாலை வழுக்கத் தான் செய்யும்; எனினும், நாம் போய் சேர, நிதானம், விடாமுயற்சி, உடலில் தெம்பு அவசியம். அதை, இந்த கொரோனா நேரத்தில் பின்பற்றுவோம். நோய் தொற்றுடனேயே வாழ பழகிக் கொள்வோம். அது தான் சிறந்த வழி; அனைவரும் பின்பற்றும் வழி.
இப்படித் தான், இதற்கு முன்பும், மனித சமுதாயம், பல வைரஸ் தொற்றுகளை எதிர்த்து, வெற்றி கண்டுள்ளது. அதுபோல, இப்போது, நாமும் நோயுடன் வாழ பழகிக் கொள்வோம்; நோய் அதுவாக மறைந்து விடும்.ஒரு தயிர் பானையில், இரண்டு தவளைகள் விழுந்து விட்டன. ஒரு தவளை, எவ்வித முயற்சியும் இன்றி தயிரில் மிதந்து கொண்டிருந்தது. மற்றொரு தவளை, தன் கால்களால், மோரை தொடர்ந்து அடித்துக் கொண்டிருந்தது. அதனால், தயிரிலிருந்து வெண்ணெய் திரண்டு, மேடான பகுதி உருவானது. அதன் மேல் ஏறிய அந்த தவளை, பானையை விட்டு வெளியே வந்தது.அந்த தவளையை போல நாமும், இந்த கொரோனா காலத்தை, போராடி வெற்றி காண்போம்! இ.ஹென்றி அருளானந்தம்சமூக ஆர்வலர் தொடர்புக்கு:மொபைல் எண்: 88700 09534 இ - மெயில்: lfnpschool2013@gmail.com