கோவை: உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடி போர்த்திய விவகாரம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பிரதான ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று, 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில், சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு சென்ற போலீஸ் ஒருவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, உயிரிழந்த மயிலின் சடலத்தை மீட்டு, ரோட்டோரத்தில் வைத்து, அதன் மீது தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார். பின், உயிரிழந்த மயிலின் சடலத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்த படங்களும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.
'நாட்டின் தேசியப் பறவை என்றாலும் உயிரிழந்த மயிலுக்கு தேசியக் கொடியை போர்த்தியது தவறு. அதையும் மீறி போர்த்துவது என்றால், முறையாக சடலம் வைக்கப்பட்ட பெட்டியின் மீது தான் போர்த்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, சாலையில் மயிலின் சடலத்தை வைத்து தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல். தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்' என, சர்ச்சை எழுந்தது.

இவ்விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்குமாறு, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் சுமித்சரண் உத்தரவிட்டார். இதையடுத்து இதுகுறித்து சம்மந்தப்பட்ட போலீசாரிடம் விசாரணை நடக்கிறது. இவ்விவகாரம் குறித்து சம்மந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷன் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE